ஜி.டி.பி கணக்குகள் பில்டிங் ஸ்ட்ராங்க்... பேஸ்மென்ட் வீக்...
பொருளியல் அரங்கம்
க.சுவாமிநாதன்
வெள்ளிக்கிழமை மத்திய அரசு மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளது. இந்து பிசினஸ் லைன் (01.12. 2018) தந்துள்ள தலைப்பு ‘இரண்டாம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.1 சதவீதமாக விழுந்துள்ளது’ என்பதே.
ஜி.டி.பி ன்னா என்ன?
எந்த காலத்திற்கு கணக்கிடுகிறோமோ, அக்காலத்தில் நடைபெறும் சரக்கு மற்றும் சேவை உற்பத்திகளின் மொத்த மதிப்பின் கூட்டுத்தொகை ஆகும். “மொத்த உள்நாட்டு உற்பத்தியின்” ஆங்கில வார்த்தையின் சுருக்கமே ஜி.டி.பி. (G.D.P - Gross Domestic product) ஆகும். தற்போது அடிப்படை
ஆண்டாக (BASE YEAR) 2011-12 உள்ளது. அந்த ஆண்டில் நிலவிய விலைகளின் அடிப்படையிலேயே ஜி.டி.பி விகிதங்கள் கணக்கிடப்படுகின்றன.
வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள அரசின் புள்ளிவிபரங்கள் தருகிற தகவல்கள் என்ன?
இது 2018-19 இரண்டாம் காலாண்டில் (Q2) மொத்த உள்நாட்டு உற்பத்தி 33.98 லட்சம் கோடிகளாகும். கடந்த ஆண்டு (2017-18) இதே காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 31.72 கோடிகளாக இருந்துள்ளது. கணக்கு கேட்டு பாருங்கள் ! 7.1 சதவீதம் என வளர்ச்சி விகிதம் மேற்கூறிய இரு தொகைகளுக்கு இடையிலான வித்தியாசமே ஆகும். ஆனால் இந்த ஆண்டில் முதல் காலாண்டில் (2018 - 19) வளர்ச்சி விகிதம் 8.2 சதவீதமாக இருந்தது. கடந்த மூன்று காலாண்டுகள் என்று பார்த்தாலும் தற்போதைய 7.1 சதவீதம் என்பதே மிகக்குறைவு.
விவசாயத் துறை வளர்ச்சி எப்படி உள்ளது?
பட்ட காலிலேயே படும் என்பது விவசாயத்துறைக்கே பொருந்துவதாகும். இக்காலாண்டில் அதன் வளர்ச்சி 3.8 சதவீதம் என்பது மதிப்பீடு. இதுவே முதல் காலாண்டில் (ஏப்ரல் - ஜுன் 2018) 5.3 சதவீதமாக இருந்துள்ளது. இந்து பிசினஸ் லைன் (01.12.2018) வெளியிட்டுள்ள இன்னொரு செய்தி பாருங்கள்! நடப்பிலுள்ள “ராபி” பருவத்து பயிர்கள் 32 லட்சம் ஹெக்டேர் குறைவாக விதைக்கப்பட்டுள்ளதாம். அதாவது கடந்த “ராபி” பருவத்தில் 387 லட்சம் ஹெக்டேர் பயிரிடப்பட்டதெனில் இவ்வாண்டு 355 லட்சம் ஹெக்டேர் மட்டுமே விதைக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த மாநிலங்களில் விவசாயம் அதிகம் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளது?
விவசாயப் பயிரிடல் வீழ்ச்சியை சந்தித்துள்ள வேளையில் அதில் மூன்றில் ஒரு பங்கு ஹெக்டேர்கள் மகாராஷ்டிராவில்தான் குறைந்துள்ளது. அம்மாநிலத்திலுள்ள வட்டங்களில் பாதிக்கு பாதி தண்ணீர் பற்றாக்குறையால் வாடுகின்றன. உத்தரப் பிரதேசம், இராஜஸ்தான், கர்நாடகா என விவசாயம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியல் தொடர்கிறது. கோதுமை, அரிசி தவிர்த்த பயிர்கள் அதாவது கேழ்வரகு, மக்காச் சோளம் போன்றவை 27 சதவீதம் ஹெக்டேர் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. அதாவது 40 லட்சம் ஹெக்டேரிலிருந்து 29.64லட்சம் ஹெக்டேர்களாக பயிரிடல் குறைந்துள்ளது.மகாராஷ்டிரா, கர்நாடகாவில் அதிகம் பாதிப்பு.பருப்பு வகையறாக்கள் 12 சதவீத ஹெக்டேர் வீழ்ச்சியை அடைந்துள்ளன. 111 லட்சம் ஹெக்டேரிலிருந்து 101 ஹெக்டேர்கள் ஆகும்.
எது ஜி.டி.பியை கீழே இறக்கிவிட்டுள்ளது?
பொருளாதார நிபுணர்களின் கருத்தில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, அரசு முதலீடுகளில் ஏற்பட்டவீழ்ச்சி, கிராமப்புற மக்களின் வாங்கும் சக்தியில் தேக்கம் ஆகியன ஆகும். புள்ளி விவர நிபுணர்கள் கடந்த ஆண்டு இதே காலாண்டில் நல்ல வளர்ச்சி எட்டப்பட்டதால் அதை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்டதால் இக்காலாண்டில் வளர்ச்சி விகிதம் குறைவாக இருக்கிறது என்று விளக்கம் தருகிறார்கள்.
நகர்ப்புற பொருளாதாரத்தின் நிலைமை என்ன?
தொழில் உற்பத்தி 7.4 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளதாகச் சொல்லப்பட்டாலும் வர்த்தகம், ஓட்டல்கள், நிதிச் சேவைகள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிகமாகச் சரிந்துள்ளன. இது நல்லஅறிகுறி அல்ல.
மொத்தத்தில் எப்படி மதிப்பிடுகிறார்கள்?
மொத்த மதிப்பு அதிகரிப்பில் விவசாயத்தையும், அரசு முதலீடுகளையும் கழித்துவிட்டு பார்த்தால் வட கேந்திரமான துறைகளின் வளர்ச்சி கூட பாதிக்கப்பட்டுள்ளது என்பதே தெளிவாகிறது. ஐசிஐசிஐ வங்கியின் தலைமை நிர்வாகி பிரசன்னா கூறுவது என்னவெனில் “நாங்கள் மூன்றாவது காலாண்டிலிருந்தே சரிவை எதிர்பார்த்தோம். ஆனால் இரண்டாம் காலாண்டிலேயே முக்கியமான அளவுகோல்களில் சரிவு ஏற்பட்டுள்ளது. இது 2018 - 19 ஒட்டுமொத்த ஆண்டிற்கான வளர்ச்சி மதிப்பீடுகளையே மறு பரிசீலனை செய்ய வேண்டிய நிலையை உருவாக்கியுள்ளது.’’
பொருளாதாரத்தின் மற்ற அளவுகோல்கள் எப்படி உள்ளன?
வெள்ளிக்கிழமை அன்று இன்னொரு புள்ளி விபரம் தலைமைத் தணிக்கை பொது அலுவலர் அலுவலகத்தால் (சிஏஜி) வெளியிடப்பட்டுள்ளது.அது தரும் தகவல் என்ன? 2018-19 நிதியாண்டிற்கு ரூ,6.24 லட்சம் கோடிகள் நிதிப் பற்றாக்குறையால் பட்ஜெட் மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் முதல் 7 மாதங்களிலேயே (ஏப்ரல் - அக்டோபர் 2018) நிதிப்பற்றாக்குறை 6.48 லட்சம் கோடிகளைத் தொட்டுவிட்டது. இலக்கை போன்று103.9 சதவீதம். நிதிப்பற்றாக்குறை என்றாலே மோசம் என்று சொல்ல முடியாது. எதனால் அதுஏற்படுகிறது? எப்படி அரசு அதை எதிர்கொள்ளப் போகிறது? என்பதைப் பொருத்துதான் அதை முடிவு செய்ய வேண்டும்
ஜிடிபி மதிப்பீடுகளை மத்திய அரசு மாற்றுவது குறித்து அரசுக்கும் - முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கும் மோதல் உள்ளதே!
நவீன தாராளமயம் குறித்த அணுகுமுறையில் இருவருக்கும் வேறுபாடுகள் இல்லாவிட்டாலும் பிஜேபி அரசின் செயற்கை பலூன்களை உடைக்கிறார் சிதம்பரம். நிதியமைச்சகத்தின் சூட்சுமங்கள் தெரிந்தவரல்லவா! பிஜேபி ஆட்சிக்கு வந்தபிறகு ஜிடிபி வளர்ச்சி அதிகரித்துள்ளது என்றால் ஏன் முதலீடுகள் 5 சதவீதம், 6சதவீதம் குறைவாக உள்ளது? மார்ச் 2014ல் எட்டப்பட்ட 315 பில்லியன் டாலர் ஏற்றுமதி என்ற அளவை இதுவரை ஏன் கடக்க முடியவில்லை? நிறுவனக் கடன்களின் வளர்ச்சி ஏன் 1.4 சதவீதம் என்கிற குறைவான அளவிலேயே உள்ளது? என் வேலைவாய்ப்பில் தேக்கம்? ஏன் விவசாயிகளின் துயரம்? என்று அவர் நிறைய கேள்விகளை எழுப்புகிறார். இவையெல்லாம் இடதுசாரிகளால் ஏற்கெனவே எழுப்பப்பட்ட கேள்விகளே!
ஜிடிபி வளர்ச்சி விகித சரிவை எப்படி சரி செய்வார்கள்?
ஜிடிபி வளர்ச்சி என்பது அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சிக்கான அளவுகோலா என்பது தனிக்கேள்வி. அடிப்படையான மாற்றங்கள் நோக்கி நகராவிட்டால் இதுபோன்ற நெருக்கடிகள் எழுவது தவிர்க்க இயலாது. கிராமப்புற மக்களின் வருமானங்களில் உயர்வு, மக்களின் வாங்கும் சக்தி அதிகரிப்பு, வரி திரட்டல் கொள்கைகளில் மாற்றம், அரசு முதலீடுகள் அதிகரிப்பு உள்ளிட்ட அடிப்படை அம்சங்களில் கவனம் இல்லாதவரை இத்தகைய பிரச்சனைகள் வந்து கொண்டேயிருக்கும்.
அறுவை சிகிச்சை தேவைப்படுகிற காயத்தை ஆயின்மென்ட்டுகளால் குணப்படுத்த முடியுமா?
நன்றி - தீக்கதிர் 02/12/2018
No comments:
Post a Comment