Thursday, December 27, 2018

முக்கியமான இரு எதிர்வினைகள் . . .



வெண்மணி வரலாற்றில் கம்யூனிஸ்டுகளை இருட்டடிப்பு செய்து எழுத்தாளர் டி.ரவிக்குமார் எழுதி தமிழ் இந்துவில் வெளியான கட்டுரைக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் கௌரவத்தலைவர் தோழர் ச.தமிழ்ச்செல்வன் எழுதிய முக்கியமான இரு எதிர்வினைகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.


வெண்மணியில் சிபிஎம் தோழர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும்தான் எரிக்கப்பட்டனர். அவர்கள் கம்யூனிஸ்ட்டுகள் என்பதை எரித்த கோபாலகிருஷ்ண நாயுடுவும் 23 மிராசுதார்களும் அன்று ஏற்கவே இல்லை.

கம்யூனிஸ்ட்டாவது புடலங்காயாவது.. அவனுங்க பள்ளுப் பறையனுங்கதான் என்று கோபாலகிருஷ்ண நாயுடு ஊர் ஊராகப்போய் பிரச்சாரம் செய்தான்.

அதே பிரச்சாரத்தை இப்போது முகநூலிலும் பத்திரிகைகளிலும் நாம் தோழமை எனக் கருதுவோர் சிலர் செய்து வருகிறார்கள்.

ஆனால்,நாம் எல்லாச் சாதியிலும் பிறந்தவராக இருக்கும் தோழர்கள் அந்த 44 கம்யூனிஸ்ட்டுகளுக்கும் வீர வணக்கம் செய்துவிட்டுத் திரும்பிக்கொண்டிருக்கிறோம் - எரியும் நினைவுகளோடு....



ஞ்சை மண்ணில் பள்ளன் கட்சி பறையன் கட்சி என்கிற பெருமையைப்பெற்ற இயக்கம் கம்யூனிஸ்ட் இயக்கம். அடங்க மறு அத்துமீறு என்று இன்று நாம் எழுப்பும் முழக்கங்களுக்கெல்லாம் அடியுரமாக   அமைந்தது அன்று தோழர் சீனிவாசராவ் எழுப்பிய ‘அடிச்சா திருப்பி அடி’ ஏட்டின்னு கூப்பிட்டா என்னட்டீ ்்னனு பதில் சொல்லு’என்கிற ஆவேச முழக்கங்கள்தாம். 

வெண்மணியில் கொல்லப்பட்ட 44 பேரில் ஒருவர் கூட தாழ்த்தப்பட்டவர் அல்லாதவர் இல்லையே ஏன் தோழர் என்று வரலாற்றிடம் கேட்க வேண்டிய கேள்வியை பலி கொடுத்த நம்மை நோக்கிச் சிலர் கேட்பது அவர்களின் அரசியல் தேவைக்காக என்பதை நாம் பதட்டமின்றி எதிர்கொள்ள வேண்டும். கோபாலகிருஷ்ணநாயுடுவுக்கும் இவர்களுக்கும் இருக்கும் பொதுவான நோக்கம் செங்கொடியைக் கீழே இறக்க வைப்பதுதான் என்பது புரியாமலா இருக்கிறது நமக்கு?


ஒருமுறை புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி டெல்லி சென்று அன்றைய சிபி எம் பொதுச்செயலாளர் தோழர் சுர்ஜித்தை சந்தித்து தங்கள் இயக்கத்தை சிபி எம் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டபோது.சுர்ஜித் சிரித்தபடி மென்மையாகக் கூறியது: ”நாங்களே தலித் மக்களின் இயக்கமாக இருக்கும்போது நீங்கள்தான் எங்களை ஆதரிக்க வேண்டும்”

செங்கொடி இயக்கம் மட்டுமல்ல திராவிட விவசாயத் தொழிலாளர் இயக்கமும் பெருவாரியாக தாழ்த்தப்பட்ட மக்களைக் கொண்ட இயக்கமாகவும் அதே சமயம் எல்லாச் சாதியினரையும் தோழர்களாகக் கொண்டிருந்த இயக்கமாக அன்று இருந்ததும் வரலாறு.

தஞ்சை மண்ணில் தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக பண்பாட்டு மற்றும் பொருளாதார விடுதலைக்கான போரை முன்னெடுத்த இயக்கத்தில் தம் இன்னுயிரை ஈந்த மற்றும் சிறைசென்று சித்திரவதைப்பட்ட தலைவர்கள்/தோழர்களின் பட்டியலைப் பாருங்கள்”

வாட்டாக்குடி இரணியன்-சுட்டுக்கொலை
ஆம்பலாப்பட்டு ஆறுமுகம்-சுட்டுக்கொலை
ஜாம்புவானோடை சிவராமன்-சுட்டுக்கொலை

சேரங்குளம் அமிர்தலிங்கம்,ஆம்பலாப்பட்டு முருகையன் ,மணலி கந்தசாமி,சாகும்வரை கையில் போலீஸ் சுட்ட குண்டுகளைக் கையில் ஏந்தியிருந்த தோழர் ஏ.எம்.கோபு, கொல்லப்பட்ட  தோழர் என்.வெங்கடாசலம், கே.ஆர்.ஞானசம்பந்தன், கோ.பாரதிமோகன், சமீபத்தில் மறைந்த தோழர் கோ.வீரய்யன், ஏ.ஜி.கஸ்தூரிரங்கன்,பாவா நவநீதகிருஷ்ணன் என தாழ்த்தப்பட்ட சமூகம் அல்லாத பிற சமூகங்களில் பிறந்த தோழர்கள். 

இவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். கடைசி இருவர் பெரியாரிஸ்ட்டுகள். உங்கள் பாஷையில் சொன்னாலாவது மனம் இரங்கி ஏற்க மாட்டீர்களா என்பதற்காக இதை வருத்தத்துடன்தான் பதிவிடுகிறோம்.

பண்ணையார்களுக்கும் கோவில் மடங்களுக்கும் ஜமீந்தார்களுக்கும் எதிரான வர்க்கப்போரில் தலித் மற்றும் தலித் அல்லாத சமூகத்தினர் கரம் கோர்த்து நின்ற வர்க்கப்போராட்ட வரலாறு தஞ்சை மண்ணுக்குரியது.அதன் உச்சம்தான் வெண்மணி. தலித்துகளுக்காக தலித் அல்லாதவர் ரத்தம் சிந்திய பாரம்பரியம் தஞ்சை மண்ணுக்குரியது.அதை மேலும் வளர்த்தெடுப்பதுதானே தலித் விடுதலையின் மீது அக்கறையுள்ளவர்கள் உண்மையில் செய்ய வேண்டிய காரியம்.தந்திர ரீதியாகவும் அதுதானே வெற்றி தரும். விமர்சனங்கள் இருக்கலாம்.அதை விவாதிக்கலாம்.செங்கொடி இயக்கம் சுயவிமர்சனத்தைப் பொக்கிஷமாகக் கருதும் இயக்கம்தான். 

ஆனால் ’அதை நாங்க மட்டும் பாத்துக்கிர்றோம். நீங்க வேண்டாம்” என்று கத்தரித்துவிடும் வாதங்கள் நம் பொதுவான நோக்கத்துக்கு  ஊறு  விளைவிக்கும் .

உசுப்பேத்தும் நக்கல்களையும் நிதானத்துடன் எதிர்கொள்வோம். தஞ்சை மண்ணின் அசலான பாரம்பரியத்தை செங்கொடி ஏந்தி கறுப்பு மற்றும் நீலக்கொடிகளையும் தோழமையுடன் இணைத்துக்கொண்டு முன்னேறுவோம்., 

காலம் நமக்கிடும் கட்டளை இதுவே.

No comments:

Post a Comment