Tuesday, December 4, 2018

வெட்டவெளியில் - கைக்குழந்தையுடன் . . .


பிறந்து 17 நாட்களே ஆன கைக்குழந்தையுடன் வெட்டவெளியில் தவித்த முத்துலெட்சுமி

உதவிக்கரம் நீட்டிய எல்ஐசி ஊழியர்கள்




புதுக்கோட்டை, டிச.3-பிறந்து 17 நாட்களே ஆன கைக்குழந்தையுடன் வெட்டவெளியில் கடும் குளிருடன் புதுக்கோட்டை அருகே நெய்வாசல்பட்டியில் அவதிப்பட்டு வருகிறார் முத்துலெட்சுமி. அவருக்கு எல்ஐசி ஊழியர்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளனர். 

புதுக்கோட்டை அருகே நெய்வாசல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாண்டி மகள்முத்துலெட்சுமி. இவருக்கும் மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த பிரசாத்துக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கர்ப்பமடைந்த முத்துலெட்சமி பிரசவத்திற்காக கடந்த மாதம் தாய்வீடான நெய்வாசல்பட்டிக்கு வந்தார். கஜா புயல் வீசிய கடந்த 16ஆம்தேதியன்று காலையில் முத்துலெட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆட்டோவில் முத்துலெட்சுமி வீட்டிலிருந்து ஏறும்போது முத்துலெட்சுமியின் கண்முன்னாலேயே தங்கியிருந்த வீடு புயலில் தரைமட்டமானது. 

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முத்துலெட்சுமிக்கு அறுவைச் சிகிச்சை மூலம் அழகான ஆண்குழந்தை பிறந்தது. பிரசவத்தில் பிரச்சனை இருந்ததால் கர்ப்பப்பையும் அகற்றப்பட்டது. இதனால் கடந்த சனிக்கிழமை வரைமருத்துவமனையில் இருந்த முத்துலெட்சுமி அன்று மதியம் வீடு திரும்பினார்.

ஆட்டுக்கொட்டகையில்

வீடு தரை மட்டமானதால் ஆட்டுக் கொட்டகையில் முத்துலெட்சுமியும் குழந்தையும் தங்க வைக்கப்பட்டுள்ளார். வெட்டவெளியில் ஆடுகளை கட்டுவதற்காக தாழ்வாகக் கட்டப்பட்டிருந்த தகரக் கொட்டகையில் கடந்த மூன்று நாட்களாக முத்துலெட்சுமி தங்கி வருகிறார். 

இந்நிலையில், நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க நிர்வாகிகள் என்.கண்ணம்மாள், வி.லதாராணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் ஜி.நாகராஜன் உள்ளிட்டோர் வெட்டவெளியில் கடும் குளிரில் நடுங்கிக்கொண்டிருந்த முத்துலெட்சுமியையும், குழந்தையையும் பார்த்தனர். 

அதிர்ச்சியடைந்த அவர்கள் தாய்க்கும், குழந்தைக்கும் தேவையான மெத்தை, துணிகள், சோலார் விளக்கு, கொசுவர்த்தி, ஹார்லிக்ஸ் பாட்டில் மற்றும் உணவுப் பொருட்களை வழங்கினர். 

புதுக்கோட்டைக்குப் பக்கத்தில் 5 கிலோ மீட்டர் தொலைவில் இப்படி அவதிப்பட்டு வரும் முத்துலெட்சுமியையும், குழந்தையையும் கவனிக்க ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் நேரமில்லையோ?

நன்றி : தீக்கதிர் 04.12.2018

No comments:

Post a Comment