கஜா புயல் தென்னை விவசாயிகளை எந்த அளவிற்கு பாதித்துள்ளது என்பதை விளக்கி தீக்கதிர் ஆசிரியர் தோழர் மதுக்கூர் ராமலிங்கம், இன்றைய தீக்கதிரில் எழுதியுள்ள கட்டுரை மனதை பதைபதைக்க வைக்கிறது.
எப்படியோ பிழைத்து விட்டோம் இனி எப்படிப் பிழைப்போம்!
மதுக்கூர் இராமலிங்கம்
வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்ற வாசகத்தைபடித்துவிட்டெல்லாம் விவசாயிகள் மரம் வளர்ப்பதில்லை. மரம் வளர்ப்பதும், பயிர் வளர்ப்பதும் அதன் மூலம் உயிர் வளர்ப்பதும் விவசாயிகளுக்கு மூச்சுவிடுவது போல இயல்பான ஒன்றாகவே இருந்து வருகிறது. தண்ணீரில்லாமல் எப்படி தாவரம் வளர முடியாதோ அதேபோல் மரம் செடி கொடிகள் இல்லாமல் விவசாயிகளால் வாழ முடியாது.
நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை தலைகீழாக புரட்டிப் போட்டிருக்கிற கஜா புயல் நிகழ்த்தியிருக்கிற சேதாரம் இன்னமும் முழுமையாக உணரப்படவில்லை. எந்தவொரு இயற்கை பேரிடரின்போதும் அதிகம் பாதிக்கப்படுவது ஏழை, எளிய மக்களே. டெல்டாமாவட்டங்களில் விவசாய தொழிலாளர்கள் குடிசைகள் உள்பட அனைத்தையும் இழந்து நிர்கதியாக நிற்கிறார்கள். மீனவர்களின் படகுகள் சுக்கு நூறாகிவிட்டன.மறுபுறத்தில், விவசாயிகளுக்கு ஏற்பட்டிருக்கிற இழப்பு என்பது மிக அதிகம். கஜா புயலின்போது வெள்ளம்ஏற்பட்டு நெற்பயிர்கள் முழுமையாக மூழ்கி அழுகவில்லை என்றாலும் சூல்கொண்டிருந்த நெற்பயிர்கள் யாவும் மஞ்சளாக மாறத் துவங்கிவிட்டன.
பதர் கூட மிஞ்சுமா என பதறுகிறார்கள் விவசாயிகள். தென்னை, மா, பலா, வாழை, எலுமிச்சை, தேக்குஎன அனைத்து மரங்களும் அடியோடு விழுந்து கிடக்கின்றன. குறிப்பாக கஜா புயலின் பல லட்சம் தென்னை மரங்கள் விழுந்துகிடக்கின்றன.
விழுந்து கிடப்பது தென்னை மரங்கள் மட்டுமல்ல பல்லாயிரக்கணக்கான வேளாண் குடிகளின் வாழ்க்கையும்தான். விவசாயிகள் பல்வேறு மரங்களை நட்டு வளர்த்தாலும் தென்னையை மட்டும்தான் பிள்ளை என்று சொல்வார்கள். உண்மையில் தங்களது பிள்ளைகளைப் போலத்தான் தென்னம்பிள்ளையை நட்டு வளர்ப்பார்கள். தென்னையும் பிள்ளைகளைப் போலத்தான். ஒருவாரம் தண்ணீர் பாய்ச்சவில்லை என்றால் முகத்தை தூக்கிக்கொண்டு நிற்கும். வாடி நிற்கிற தென்னையைப் பார்த்துவிவசாயிகளும் வாடிப்போவார்கள். தண்ணீர் அருகில் இல்லை என்றால் சில கிலோ மீட்டர் நடந்து சென்று குடத்தில் தண்ணீர் எடுத்துவந்து தென்னம்பிள்ளையை பாதுகாப்பார்கள்.தென்னை மரத்திலிருந்து ஒரு குரும்பு விழுந்தால் கூட விவசாயி அதிர்ச்சி அடைவார். அதை கையில் எடுத்து வைத்துக் கொண்டு அணில் கடித்துவிட்டதா, செந்நாய் கடித்து போட்டுவிட்டதா அல்லது சிலந்தி போன்ற வேறுஏதாவது நோய் தாக்குதலா என்று பலரிடம் விளக்கம் கேட்டு அதை தடுக்க முயல்வார்கள்.
ஆனால் இன்றைக்கு தஞ்சை, நாகை, திருவாரூர்,புதுக்கோட்டை மாவட்டங்களில் திரும்பும் திசையெல்லாம் தென்னை மரங்கள் எல்லாம் விழுந்து கிடக்கின்றன.விழுந்த தென்னையிலிருந்து இளநீரும், தேங்காயும், குரும்பையும் சிதறிக் கிடக்கின்றன. அதை எடுத்துகையில் பார்க்கக்கூட தெம்பின்றி விக்கித்து நிற்கிறார்கள்விவசாயிகள். காவிரி டெல்டா பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக ஆற்றில் நீர் வருவது பெரும் பிரச்சனையாக மாறிய நிலையில் விவசாயிகள் தென்னை சாகுபடிக்கு மாறினர். புழுதிப்பாங்கான நிலப்பரப்பும், தமிழக அரசு விவசாயிகளுக்கு வழங்கிய இலவச மின்சாரமும் தென்னை சாகுபடிக்கு ஏதுவாக அமைந்தன. டெல்டா பகுதியில் தென்னை உற்பத்தி திறன் அதிகம். உதாரணமாக கேரளாவில் ஒரு ஏக்கர் நிலத்தில் ஆயிரம் காய் உற்பத்தி செய்தால் தமிழ்நாட்டில் இரண்டாயிரம் தேங்காய் வரை உற்பத்திசெய்ய முடியும்.
தமிழ்நாட்டில் பொள்ளாச்சி பகுதியிலும் தென்னை உற்பத்தி அதிகம். பொள்ளாச்சி பகுதியைவிட டெல்டா பகுதி தென்னை சாகுபடி சற்று வித்தியாசமானது. பொள்ளாச்சி பகுதியில் தென்னை மரங்கள் இரண்டுஆண்டுகளில் காய்ப்புக்கு வரும். ஆனால் அவற்றின்ஆயுட்காலம் 15 ஆண்டுகள்தான். ஆனால் பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி பகுதிகளில் தென்னை மரம் காய்ப்புக்கு வருவதற்கு குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் ஆகும். ஆனால் மரத்தின் ஆயுட்காலம் சுமார்40லிருந்து 50 ஆண்டுகள் வரை.காய்க்கத் துவங்கிய தென்னை மரத்திலிருந்து ஒருவெட்டுக்கு சுமார் 50 காய்கள் கிடைக்கும்.
ஒரு வருடத்திற்குஎட்டு முறை காய்கள் வெட்டலாம். அதாவது ஒரு தென்னையிலிருந்து ஒரு வருடத்தில் சராசரியாக 400 காய்கள் வரை கிடைக்கும். ஒரு தேங்காயின் விலை 10 ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும் , ஒரு தென்னை மரம் ஒரு வருடத்திற்கு ரூ.4ஆயிரம் வரை விவசாயிகளுக்கு சம்பாதித்துக்கொடுக்கும். இது எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்போட்டிருக்கும் கணக்கு. இது எதார்த்தமானதுதான்.
இந்த கஜா புயலால் சுமார் ஒரு கோடி தென்னை மரங்கள் விழுந்திருக்கும் என்பது மிகையான மதிப்பீடல்ல.கன்னுகுடி என்ற ஒரு கிராமத்தில் மட்டும் சுமார் ஒன்றரைலட்சம் தென்னை மரங்கள் அடியோடு விழுந்திருக்கின்றன. இதனால்தான் இந்தப் பகுதியின் பொருளாதாரம் 50ஆண்டுகள் பின்னுக்குப் போய்விட்டது. தலைநிமிர குறைந்தபட்சம் 20 ஆண்டுகளாவது ஆகலாம் என விவசாயிகள் வேதனையோடு கூறுகிறார்கள். ஆனால் தமிழக அரசு அறிவித்துள்ள இழப்பீடு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. ஒரு தென்னை மரம் முழுமையாக விழுந்திருந்தால் வெட்டி அகற்றுவதற்கு ரூ.500ம், இழப்பீடாக ரூ.600மாக 1100 ரூபாய் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. எட்டுவழிச்சாலைக்கு நிலத்தை அபகரிக்கும் போது, அந்தப் பகுதியில் தென்னை மரம் இருந்தால் மரம் ஒன்றுக்கு ரூ. 50ஆயிரம் வழங்கப்படும் என தமிழக அரசுஅறிவித்திருந்தது. இவர்கள் பறித்தால் ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க தயாராக இருப்பவர்கள், புயல் பறித்ததென்னைக்கு ரூ.600 மட்டுமே வழங்குவோம் என்று கூறுவது எந்த வகையில் நியாயம்.
இதனால்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குறைந்தபட்சம் தென்னை ஒன்றுக்கு ரூ.20ஆயிரம் இழப்பீடு வழங்கவேண்டும் என்று கூறியுள்ளார். கஜா புயலினால் தென்னந்தோப்பை இழந்த விவசாயிகள் அந்த இடத்தை இன்னமும் கூட சென்று பார்க்கவில்லை. பார்த்தால் மாரடைப்பு ஏற்பட்டுவிடுமோ எனவீட்டில் உள்ளவர்கள் பயப்படுகிறார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்ட தலைவர்களில் ஒருவரான ஆர்.சி.பழனிவேலு கூறினார். புயலுக்குப் பின்பு பல விவசாயிகள் படுத்த படுக்கையாகவே இருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
தென்னை விவசாயிகள் பலர் தற்கொலை மனநிலையில் இருப்பதாகவும், அவர்களுக்கு உரிய மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுவது பொய்யல்ல. தற்கொலை குறித்த செய்திகள் வெளிவர ஆரம்பித்துவிட்டன. தஞ்சை மாவட்டம் பாப்பாநாடு அருகே உள்ள சோழகன் குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த சுந்தர் ராஜன் என்ற 55 வயது விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரது 5 ஏக்கர் தென்னந்தோப்பு ஒரு ஏக்கர் தேக்கு மரத் தோப்பு அழிந்துவிட்ட நிலையில், அவர் தன்னைத்தானே அழித்துக் கொண்டிருக்கிறார். தென்னை மரம் என்பது ஒரு தரைத்தாவரம் மட்டுமல்ல,ஒவ்வொரு மரத்தைச் சுற்றியும் ஏராளமான விவசாயக்குடும்பங்களின் வாழ்க்கையும், கனவும், எதிர்பார்ப்பும்தென்னம்வேர்களைப் போல மண்ணில் பின்னப்பட்டுள்ளன.
குழந்தைகளின் படிப்பு, திருமணம், மருத்துவச்செலவு, உணவு என அனைத்திற்கும் தேங்காய்வெட்டையே அவர்கள் நம்பியிருந்தார்கள். இப்போது அவர்களது எதிர்காலமும் வெட்டுப்பட்டு வானத்தை நோக்கி அண்ணாந்து பார்த்தபடி கிடக்கிறது. பெரும்பாலான விவசாயிகள் வியாபாரிகளிடம் ஆயிரக்கணக்கில் முன்னதாகவே பணம் கடனுக்கு வாங்கியிருப்பார்கள். தென்னந்தோப்புகள் முற்றாக அழிந்துவிட்ட நிலையில், அவர்கள் வந்து வாசலில் நிற்பார்கள். தேங்காய் வணிகர்கள் முதல் தேங்காய் வெட்டும் தொழிலாளர்கள் வரை பலரது வாழ்க்கை தென்னை மரத்தைச்சுற்றியே ஓடிவந்து கொண்டிருந்தது. இனி என்ன என்ற கேள்வி அனைவரது மனதிலும் கஜா புயலாக சுழன்று அடித்தபடியே உள்ளது. தென்னை மரங்கள் விழுந்தது மட்டுமின்றி வீடுகள், சுற்றிப் போடப்பட்டிருந்த வேலிகள் என அனைத்தையும் கடுமையாக சேதப்படுத்தி இருக்கின்றன. இதையெல்லாம் சீர்செய்ய பெரும் தொகை தேவைப்படும்.
தென்னந்தோப்புகளைச் சுற்றி வைக்கப்பட்டிருந்த தேக்கு மரங்களும் முற்றாத நிலையிலேயே விழுந்துவிட்டதால் கூடுதல் இழப்பு. மா, பலா, வாழை, முந்திரி என விழுந்துகிடக்கிற ஒவ்வொரு மரத்தின் வேர்களிலும்இறுக்கிக் கட்டப்பட்ட பல்வேறு குடும்பங்களின்வாழ்க்கையும் வாடிக்கிடக்கிறது. ஒருமுறை நிலநடுக்கத்தின்போது கவிஞர் வாலி எழுதிய வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன. ‘எப்படியோபிழைத்து விட்டோம்- இனி எப்படி பிழைக்கப் போகிறோம்.’ இதுதான் இன்று விவசாயிகளின் கேள்வியாக உள்ளது. தென்னையில் பயன்படாத பகுதிகளே இல்லை. வேர் முதல் தென்னங்கீற்று வரை அத்தனை பாகங்களும் பயன்படும். ஆனால் அந்த தென்னை இன்றைக்கு விவசாயியை அதோ கதியாக விட்டு வீழ்ந்திருக்கிறது.
பேராவூரணி அருகே நாடியம் என்ற கிராமத்திற்கு திருச்சி கல்லூரி மாணவர்கள் நிவாரணப் பொருள்களை லாரியில் கொண்டு சென்ற போது, எங்களுக்காக இவ்வளவு பொருள்களை கொண்டு வந்த உங்களை வெறுங்கையோடு அனுப்புவது முறையல்ல என்று சொல்லி விவசாயிகள் லாரி நிறைய இளநீர்களை நிரப்பி அந்த மாணவர்களை வழியனுப்பியிருக்கிறார்கள்.
இனி அவர்களிடம் தருவதற்கு இல்லாமை மட்டுமே இருக்கிறது. டெல்டா மாவட்டங்களில் தென்னந்தோப்புகளுக்குப் போனால் “இளநீரு குடிக்கிறீர்களா, என இயல்பாக கேட்பார்கள், இனி அவர்கள் அப்படி கேட்கப்போவதில்லை”. சில மணி நேரங்கள் மட்டுமே நீடித்த கஜா புயலின் சிரிப்புபலரது சிரிப்பை நிரந்தரமாக களவாடிப் போய்விட்டது.விழுந்துகிடந்த தென்னந்தோப்புகளை பார்த்துவிட்ட ஒரு நண்பர் சொன்னார், ‘இனி தேங்காய் சட்னியை தொடும்போதெல்லாம் கைகள் நடுங்கும்’.
Farmers never leave agriculture inspite of the hazards.their love towards agriculture will again give them life.we people should be in support of them always as com.NMS appealed in coimbatore conf.
ReplyDelete