Thursday, November 15, 2018

அவர்களின் வெற்றி அப்போதே தெரிந்தது. .



அவர்கள் முகங்களில் சோர்வின் சாயல் கொஞ்சமும் இல்லை. கண்களில் கலக்கம் என்பது காணப்படவே இல்லை. அடக்குமுறைக்கு அஞ்சுபவர்களாக அவர்களின் உடல்மொழி இல்லை. உற்சாகமும் உறுதியும் சவாலை சந்திக்கும் தன்னம்பிக்கையுமே அவர்களிடத்தில் நிரம்பி இருந்தது. 

ஆமாம்.

தொழிற்சங்கம் அமைத்ததால், அதுவும் போராட்ட உணர்வை ஊட்டும் செங்கொடி சங்கம் சி.ஐ.டி.யு சங்கத்தோடு இணைந்து அமைத்ததால் பழிவாங்கப்பட்ட, பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு நியாயம் கேட்டு நடைபெற்று வந்த காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற யமஹா நிறுவனத்தின் இளம் தொழிலாளர் தோழர்கள்தான் அவர்கள்.

மறக்க முடியாத மாலைப் பொழுது  என்று அப்போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க எங்கள் சங்கத்தின் சார்பில் சென்று வந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டிருந்தேன். அவர்கள் போராட்டம் வெல்வது உறுதி என்ற உணர்வையும் அப்போதே பகிர்ந்து கொண்டிருந்தேன். 

ஆம். எதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது. 

கிட்டத்தட்ட ஐம்பது நாட்களுக்கு மேல் நடைபெற்று வந்த போராட்டம் இறுதியில் வெற்றிகரமாக நிறைவுற்றுள்ளது.

பணி நீக்கம் செய்யப்பட்ட, பழி வாங்கப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியிலமர்த்த யமஹா நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் இந்த வெற்றி கிட்டியுள்ளது.

உறுதியைத் தவிர வேறெதையும் வெளிப்படுத்தாத உருக்கு போன்ற உள்ளம் கொண்ட அத்தோழர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

இந்த வெற்றி முன்னுதாரணமான வெற்றி.

பன்னாட்டு நிறுவனங்களின் தரகராக செயல்படும் ஒரு பிரதமரைக் கொண்ட நாட்டில், அவர்களுக்கு சாதகமாக தொழிலாளர் நலச் சட்டங்களை மாற்ற முயல்கிற ஆட்சியாளர்களைக் கொண்ட நாட்டில், எது நடந்தாலும் அது பற்றி கவலை இல்லாமல் மழையில் நனைகிற எருமைகள் போன்றவர்கள் பொறுப்பில் உள்ள மாநிலத்தில், போராட்டங்களை காவல்துறை தடியடிகள் மூலம் ஒடுக்குவதே அன்றாட நடவடிக்கையாகிப் போன தமிழகத்தில்

கோரிக்கைகள் வெல்லும் வரை போராட்டத்தை உறுதியோடு நடத்தி வெற்றியும் பெற்றுள்ள யமஹா நிறுவன தோழர்கள் படைத்துள்ள உதாரணம், போராட்டப்பாதையில் பயணிக்கும் அனைத்து தொழிற்சங்க அமைப்புக்களுக்கும் எழுச்சி தரும். 

மீண்டும் ஒரு முறை அவர்களை பாராட்டுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

யமஹா தொழிலாளர்கள் போராட்டத்திற்கு துணை நின்ற அமைப்பான அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் உறுப்பினர் என்பதில் பெருமிதமும் கொள்கிறேன்.


4 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. பன்னாட்டு நிறுவனங்களின் தரகராக செயல்படும் ஒரு பிரதமரைக் கொண்ட நாட்டில், அவர்களுக்கு சாதகமாக தொழிலாளர் நலச் சட்டங்களை மாற்ற முயல்கிற ஆட்சியாளர்களைக் கொண்ட நாட்டில், எது நடந்தாலும் அது பற்றி கவலை இல்லாமல் மழையில் நனைகிற எருமைகள் போன்றவர்கள் பொறுப்பில் உள்ள மாநிலத்தில், போராட்டங்களை காவல்துறை தடியடிகள் மூலம் ஒடுக்குவதே அன்றாட நடவடிக்கையாகிப் போன தமிழகத்தில் - Super Thozharey. Sorry for typing in English.

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete