தோழர் ஸ்ரீரசா அவர்களின் முகநூல் பதிவை பகிர்ந்து கொண்டுள்ளேன்.
நவம்பர் புரட்சி தினம் வாழ்க !!!
சோவியத் புரட்சி தமிழகத்துக்குச் செய்தது என்ன?
---------------------------------------------------------------
சோவியத் புரட்சி அழிந்தா போய்விட்டது?
இதோ இங்கே நமது நெய்வேலியில் கூட அது வாழ்ந்து கொண்டுதான் உள்ளது.
நெய்வேலி நிலக்கரி சுரங்கம் நமக்குச் சோவியத் புரட்சி தந்த கொடை. அதனால்தான் அது உருவானது.
இந்த நிறுவனத்தைக் கொண்டுவருவதில் கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களில் ஒருவரான தோழர். பி.ராமமூர்த்தியின் பங்கு மகத்தானது.
கடலூர் நகர்மன்றத் தலைவராகவும், மேலும் பலப் பொறுப்புகளை வகித்தவர் ஜம்புலிங்க முதலியார்.1934ம் ஆண்டு இவர் தனக்குச் சொந்தமான நிலத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டார்.அப்போது கருமையான பொருள் பூமியின் அடியிலிருந்து வந்ததைக் கண்டார்.
அன்றைய வெள்ளை அரசிடம் அதைக் கொடுத்தார்.இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு 1944ல் அப்பகுதியில் மண்ணியல் ஆய்வுகள் நடத்தப்பட்டது.பெருமளவில் நிலக்கரி படிமங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அதை ஆய்வுக்கு அனுப்பிவிட்டு, அது பழுப்பு நிலக்கரி என்றும்,அதை வைத்து எதுவும் செய்யமுடியாது என்றும் கிடப்பில் போட்டனர்.
1947ல் விடுதலைக்குப் பிறகும் தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் தடைபட்டு நின்றது.இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிஸ்ட் ஆட்சி உருவானது.அதில் கிழக்கு ஜெர்மனியில் நிலக்கரிச் சுரங்கங்கள் அதிகம் இருந்தன.
1951 ல் உலகத் தொழிற்சங்க சம்மேளன மாநாடு பிரான்சில் நடைபெற்றது.அதில் தோழர் பி.ராமமூர்த்தி பங்கேற்கச் சென்றார்.அங்கிருந்து கிழக்கு ஜெர்மனி சென்று பழுப்பு நிலக்கரியின் பயன்கள் குறித்து நிபுணர்களிடம் விளக்கம் கேட்டுத் திரும்பினார். உடனடியாக பிரதமர் நேருவைச் சந்தித்துப் பேசினார். 1952 ல் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் என்ற முறையிலும் சட்டமன்றத்தில் அதன் பயன்பாடு குறித்து விளக்கமளித்தார்.
ஆனாலும் நேரு அரசு அமெரிக்க,பிரிட்டன் உதவிகளையே நாடியது.அவர்கள் அதற்கு அநியாயமான வட்டி கேட்டனர்.அதன் பிறகு சோவியத் யூனியனின் உதவியை நாடினார் நேரு. எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் 45 பொறியாளர்களை சோவியத் யூனியன் அனுப்பி வைத்தது.அவர்கள் இங்குள்ள பொறியாளர்களுக்கு பயிற்சி அளித்தார்கள்.
ஜம்புலிங்க முதலியார் தனக்குச் சொந்தமான 300 ஏக்கரைத் தானம் செய்தார். நிலக்கரி வெட்டி எடுக்கவும் என்.எல்.சி நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு குடியிருப்புகள் கட்டவும் அலுவலகங்கள் கட்டவும் கீழ்க்கண்ட கிராமங்கள் வெளியேற்றப்பட்டன. 1.வெள்ளையங்குப்பம் 2.பெருமாத்தூர் 3.வேலுடையான் பட்டு 4.கூரைபேட்டை 5.வெண்ணெய்குழி 6.தாண்டவங்குப்பம் 7.நெய்வேலி 8.கெங்கைகொண்டான் 9.பாப்பனம்பட்டு 10.வேப்பங்குறிச்சி 11.தெற்கு வெள்ளூர் 12.வடக்கு வெள்ளூர் 13.மூலக்குப்பம் 14.காரக்குப்பம் 15.ஆதண்டார்கொல்லை 16.மந்தாரக்குப்பம் 17.சாணாரப்பேட்டை 18.அத்திபட்டு 19.வினை சமுட்டிக்குப்பம் 20.தெற்கு மேலூர் 21.இளவரசன் பட்டு 22.விளாங்குளம் 23.நொடுத்தாங்குப்பம் ஆகிய 23 கிராம மக்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர்.
வெளியேற்றப்பட்ட கிராம மக்களுக்கு விருத்தாசலத்திற்கு வடக்கில் உள்ள விஜயமா நகரம் என்ற ஊரில் மனைகள் வழங்கப்பட்டன.
அமெரிக்காவும், பிரிட்டனும் இந்திய விடுதலையை அழிக்கவே தொடர்ந்து முயன்றன. முயல்கின்றன. சோவியத் புரட்சியோ இந்திய விடுதலையைப் பாதுகாக்க உதவியது.
இப்போது சொல்லுங்கள் சோவியத் புரட்சி அழிந்தா போய்விட்டது?
No comments:
Post a Comment