Thursday, November 1, 2018

அவள் பெயர் . . .

தமிழகத்தில் சமீபத்தில் நடந்த பெரும்  கொடூரம்.  தோழர் வாசுகி பாஸ்கர் அவர்களின் பதிவை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன். 

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, நேற்று சேலத்தில் நடத்திய  ஆர்ப்பாட்டத்திற்கு பின்பாக அந்த கொலைகாரன் மீது குண்டர் சட்டத்தை இணைப்பதாக சேலம் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். 

தினேஷ் குமார் மீது எடுக்கப்படும் கடுமையான நடவடிக்கை, மற்றவர்களுக்கான பாடமாக அமையும். 



"என் பெயர் சா.ராஜலட்சுமி"
_____________________________
சேலம் நெடுஞ்சாலையில் ஆத்தூரை கடக்கும்போது இடது பக்கம் தென்படும் மலை பகுதியின் கடைசி குன்றில்தான் அந்த கிராமம் இருக்கிறது. இந்தியாவின் அரசியலைமப்பு சட்டத்திற்க்கோ, வளர்ச்சிக்கோ, பொருளாதாரத்திற்கோ எந்த வகையிலும் தொடர்பற்ற ஒரு கிராமம், பட்டேல் சிலையின் மிக உயரமான 182 மீட்டர் உயரத்தில் இருந்து பார்த்தால்கூட அதிகார அமைப்பின் கண்ணுக்கு புலப்படாத ஒரு சேரி, முதலமைச்சரின் மாவட்டம், அதிமுகவின் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிதான் இந்த தாளவாய்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஈச்சம்பட்டி.


தாளவாய்ப்பட்டியில் இருந்து சுமார் பத்து கிமீ பயணித்தால் ஒரு ஆறடி சாலையில் கிழக்கு பக்கம் ஆஸ்பெஸ்டாஸ் சிமெண்ட் கூரைகள் போட்ட சிறு வீடுகளும் குடிசைகளும் சிதறிக் கிடக்கிறது. தாளவாய்ப்பட்டியின் பிரதான சாலை ஆரம்பிக்கும்போது வலது இடது பக்கம் தென்படும் செழிப்பான நிலங்கள், பாரம்பரியமான வீடுகள், பண்ணை நிலங்கள் எல்லாம் கிராமம் என்பதற்கான அழகியலோடு பயணமாகிறது. சாதியும் பொருளாதாரமும் இந்தியாவில் ஒரே இடத்தில்தான் இருக்கிறது என்பதற்கு சான்றாக ஈச்சம்பட்டியில் இருக்கும் அந்த தலித் குடியிருப்பை நெருங்கும்போது அத்தனை அழகியலும் குன்றிப்போய் வறண்ட குன்றுகளின் அடிவாரத்தில்தான் அந்தச் சிறுமி ஓடியாடி விளையாடி தன் கால் தடத்தை பதித்து, நினைவுகளை விட்டுவிட்டுச் சென்ற பகுதி இருக்கிறது.

ஈச்சம்பட்டியில் இருந்து சுமார் ஐந்து கிமீ தொலைவில் இருக்கும் இடைநிலைப் பள்ளியில்தான் ராஜலட்சுமி எட்டாவது படித்து இருக்கிறாள், பெற்றோர்களான சாமுவேல் சின்னப்பொண்ணு கூலித்தொழிலாளிகள். கூலிக்கு வெளியூர் சென்றால் ஏழு நாளுக்கு குறைவாக சாமுவேலால் வீடு திரும்ப முடியாது, ராஜலட்சுமியின் அம்மாவும் ஏரியில் வேலைக்கு போகும் கூலி. சொந்தம் பந்தமென சுற்றி ஒரு பத்து தலித் குடியிருப்புகள், அவர்களின் பகுதியையும் எதிரில் இருக்கும் வீடுகளையும் பிரிக்கும் ஒரு சாலை. சாலைக்கு அந்தப்பக்கம் சாதி ஹிந்துக்களின் குடியிருப்பு, முதலியார் கொட்டாய் என்று அழைக்கப்படும் அந்தப் பகுதியில் இரண்டோ மூன்றோ இருக்கக்கூடிய சாதி ஹிந்து வீடுகள். ராஜலட்சுமியின் கழுத்தறுத்த தினேஷ்குமாரின் வீடு அந்த முதலியார் கொட்டாயின் முகப்பில் இருக்கிறது.

சம்பவம் நடந்த அன்று மாலை ராஜலட்சுமி தன் அம்மாவிடம் "அம்மா, தினேஷ்குமார் அண்ணன் என் கிட்ட தப்பா பேசினாரு, எனக்கு பயமா இருக்கு" என்று சொல்லியிருக்கிறாள், அம்மாவும் "சரி, அப்பா வரட்டும்" என்று தேற்றியிருக்கிறார். அதே நாள் மாலை பேண்ட் ஷர்ட் எதுவில்லாமல் ஜட்டியோடு எதிரில் இருந்த தலித் குடியிருப்பில் இருந்த ராஜலட்சுமியின் வீட்டிற்குள் அருவாளோடு புகுந்த தினேஷ்குமாரை பார்த்து பீதியடைந்த சின்னப்பொண்ணு "ஏன்பா இப்படி வர?" என்று தடுக்க முயல "நீ நகருடி பறத் தேவடியா" என்று அவரைப் பிடித்து தள்ளி ராஜலட்சுமியை வீழ்த்தி அரிவாளால் கழுத்தை அறுக்க ஆரம்பித்திருக்கிறான். ராஜலட்சுமி தாயார் சின்னப்பொண்ணு அலறி கத்த ஆரம்பிக்க ராஜலட்சுமியின் கழுத்து அறுக்கப்பட்ட ரத்தம் சுவரில் தெளித்துச் சிதற, கழுத்தை அறுக்க வீட்டிற்குள் இடைஞ்சலாக இருந்ததால் அந்த பிஞ்சு உடலை தரதரவென்று இழுத்துக்கொண்டு வெளியே வந்து, ஒண்ணும் பாதியுமாக வெட்டப்பட்ட தலையை முற்றிலுமாக அறுத்து உடலில் இருந்து துண்டித்து, தலையை தூக்கிக்கொண்டு தார் சாலையை நோக்கி ஓடியிருக்கிறான்.

கழுத்தை அரிவாளால் வெட்ட ஆரம்பிக்கும்போது முதலும் கடைசியுமாக ராஜலட்சுமி அந்த தொண்டையால் பேசியது "அண்ணே, நானென்ன தப்பு பண்ணேன்?" என்பதுதான். அடுத்த நொடியே அந்த குரல் அறுத்தெறியப்பட்டது.'

தலையை தூக்கிக் கொண்டு ஓடிய தினேஷ்குமாரை பைக்கில் அழைத்துச்செல்ல அவனது தம்பியும் மனைவியும் எதிரிலிருந்த தார் சாலையில் தயாராக இருக்க, அவனது மனைவி அவனிடம் கேட்டது "இதை ஏன் இங்க தூக்கிட்டு வந்த?" ( அதாவது ராஜலட்சுமியின் தலையை )

ராஜலட்சுமியின் தலையை அவன் வீட்டு வாசலை பார்த்தபடி இருக்கும் தார் சாலையில் வைத்து விட்டு தினேஷ்குமாரும், அவனது தம்பியும் மனைவியும் ராஜலட்சுமியின் சொந்தபந்தங்கள் ஓடி வருவதற்குள் பைக்கில் பறந்து விட்டார்கள். எல்லாமே கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்து விட்டது, பின்பு தினேஷ் குமார் சரணடைந்ததாக செய்திகள் வெளியானது.

போலீசில் சரணடைந்த பின் தினேஷ்குமார் தன்னையொரு மனநிலை பாதிக்கப்பட்டவனைப் போல காமித்துக்கொள்ள முயற்சி செய்திருக்கிறான், அவனை இரவெல்லாம் கண்காணித்த போலீஸ் அவன் நடிக்கிறான் என்பதை உறுதி செய்திருக்கிறார்கள். மனநிலை பாதிக்கப்பட்டவனை போல நடித்தலும், சரணடைதலும் தனக்கான தண்டனையை குறைக்கும் என்பதற்கான யுக்தி.

கோவத்தில் கொலை செய்வதையும், திட்டமிட்டு கொலை செய்வதையும் நம் அரசியலமைப்பு சட்டம் வெவ்வேறாக அணுகுகிறது. இதை சட்டத்தின் துணைகொண்டு சாத்தியப்படுத்துக் கொள்ள இந்த வழக்கை நீர்த்துப் போகச்செய்யும் வேலைகள்தாம் இவை. ஆனால் ராஜலட்சுமியை கொலை செய்ய Common intention இருந்திருக்கிறது, அது திட்டமிட்ட படுகொலை தான்.

தலையை வெட்டி கையில் எடுத்துக்கொண்டு வரும் கணவனை அழைத்துச்செல்ல எந்த மனைவியாவது வாகனத்தோடு தயாராய் இருப்பாளா? "இதை ஏன் எடுத்துட்டு வர்ற?" என்று அரிவாளால் அறுக்கப்பட்ட தலையை பார்த்து கேட்பாளா? ஆனால் இந்த தகவல்கள் எதுவும் போலீஸ் தரப்பில் இருந்து விசாரிக்கப்படவில்லை, வாய்மொழி சாட்சியமாக இந்த பகுதி மக்கள் முழுவதும் சொல்லும் இதை விசாரணைக்குட்படுத்தாமல் இருக்கிறது போலீஸ். "சரண்டர்" என்கிற ஒன்றே போதுமென்று அதிலிருந்து இந்த வழக்கை FIR செய்திருக்கிறார்கள்.

அரசு தரப்பில் இருந்து தாசில்தார், SP உட்பட எந்த அதிகாரியும் அந்தப்பக்கம் எட்டிப்பார்க்கவில்லை, தீண்டாமை ஒழிப்பு முன்னணியை சேர்ந்த கம்யூனிஸ்டுகளையும், விசிகவினரையும் தவிர அதிமுக / திமுக உட்பட எந்தக்கட்சியும் சம்பவம் நடந்து பத்து நாள் ஆகிய இன்றுவரை எட்டிப்பார்க்கவில்லை. இத்தனைக்கும் அது தனித்தொகுதி, தொகுதியின் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தலித் சமூகத்தை சேர்ந்த சின்னத்தம்பி, அவரும் அந்தப் பக்கம் எட்டிப்பார்க்கவில்லை. கலெக்டர் ரோகிணியும் எட்டிப்பார்க்கவில்லை.''

இப்படி அதிகாரத்தின் எந்த அழுத்தத்திற்கும் உட்படாத, கவனத்தில் கொள்ளப்படாத ஒரு மிகக் குரூரமான கொலையை இந்த சமூக அமைப்பு இத்தனை சுலபமாய் கடக்கும் போது, இந்த சமூகம் குறித்த பெரும் அச்சவுணர்வும், அவநம்பிக்கையையும் தவிர்க்க முடியவில்லை.

SC / ST பிரிவின் கீழும் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதால் SP மற்றும் கலெக்ட்டர் கட்டாயமாக பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து மூன்று மாதங்களுக்கு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வது SC / ST Act -ன் சட்டமாகும், அதுவும் நடக்கவில்லை.

சட்டத்தின்படி நடக்க வேண்டியதும், தார்மீகத்தின்படி நடக்க வேண்டிய எதுவும் ராஜலட்சுமியின் வழக்கில் சமூகநீதி மண் என்று பீற்றிக்கொள்ளும் இங்கே நடக்கவில்லை என்பதுதான் நிர்வாணமான உண்மை. மாறாக, அதிகாரத்திற்கு அடிவருடி வசதிக்கும் அசதிக்கும் சமூகநீதி பேசுபவர்கள் "இதை எப்படி சாதியோடு தொடர்பு படுத்தமுடியுமென?" வழக்கம்போல கேள்வி வைக்கத் தவறவில்லை.'

அங்குள்ள தலித் பகுதியின் ஆடு, கோழிகள் சாதி ஹிந்துக்கள் பகுதிக்கு வந்தாலே சாதி ரீதியான வசவுகளுக்கு உள்ளாகும் நிலை உள்ள தமிழகத்தின் சராசரியான சாதி நிலப்பரப்புதான் அதுவும், அங்கும் இந்த பிரச்சனைகள் நிலவி வருகிறது, ராஜலட்சுமியின் தாயாரையும் ராஜலட்சுமியையும் "பறத்தேவடியா" என்று குறிப்பிடப்பட்டதும் முதற்கட்ட விசாரணையும் வெளி வந்திருக்கும் உண்மைகள்.

இதையெல்லாம் தாண்டி நாம் வசதியாக மறக்கும் உண்மை என்னவென்றால், இந்தியாவில் ஒரு சட்டம் அதிகம் பயன்படுத்தப்படாமல், அல்லது எந்த மக்களுக்காக அந்த சட்டம் இயற்றப்பட்டதோ, அந்த மக்களுக்கே தெரியாத சட்டம் ஒன்று இருக்குமேயானால் அது SC ST Act வன்கொடுமை தடுப்புச்சட்டம்தான்.

ராஜலட்சுமியின் குடும்பம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட தலித் குடும்பங்கள் அங்கு உண்டு, கொலைகாரனான முதலியார் சமூகத்தை சேர்ந்த தினேஷ்குமார் வீடு உட்பட அங்கே இரண்டு குடும்பங்கள் மட்டுமே இருக்கிறது. ஆனால்,

* பத்துக்கும் மேற்பட்ட தலித் குடும்பங்கள் இருக்கும் ஒரு குடியிருப்பில் புகுந்து ஒருவன் தலையை வெட்டி வந்துவிட முடியும் என்கிற தைரியத்தை அவனுக்கு கொடுப்பது எது?

* பத்துக்கும் மேற்பட்ட தலித் குடும்பம் இருக்கும்போது இரண்டே குடும்பமான சாதி ஹிந்துவின் குடியிருப்பில் இருப்பவர்கள் சாதி ரீதியான வசவுகளை தைரியமாக பிரோயோகிப்பதற்கு அவனுக்கு உருவாகும் தைரியத்தை கொடுப்பது எது?

இவையெல்லாமே இந்த பொதுச்சமூகம் எனப்படும் பெரும்பான்மை சாதியச் சமூகம் கொடுக்கும் ஊக்கம்தான், கொலை நடந்து பத்து நாளுக்கும் மேல் தொகுதி MLA , ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, மாவட்ட ஆட்சியர், சட்டப்பிரிவுகளின் Protocol படி நடக்க வேண்டிய விசாரணை, என்று எதுவும் நடக்காமல் ஒரு அலட்சியப் போக்கு இருக்கிறதல்லவா? இதுதான் சாதி ஹிந்துக்களின் பலம்.

ஒரு பக்கம் சாதித் தலைவனின் குருபூஜைக்கு ஆண்ட / ஆளுகின்ற அரசியல்வாதிகள் கைகூப்பி குனிந்து கூழைக்கும்பிடு போட்டுக் கொண்டே, எல்லா மாவட்ட DSP களையும் சாதிக் கூட்டத்துக்கு காவல் காக்க அங்கே பணிக்கு அனுப்பிவிட்டு, ராஜலட்சுமி கொலைக்கு மௌனம் காத்தும், பெயரளவில் வருத்தத்தை தெரிவிப்பதாலும் இங்கே நடக்கப் போகிற மாற்றம் ஏதுமில்லை.

சுவாதியின் கொலைக்குப் பின்னர் சுவாதியின் வீட்டிற்கு சென்று பதறியடித்து இருப்பை பதிவு செய்ய முனையும் ஏற்பாடு, அதனினும் குரூரமாக கொலை செய்யப்பட்ட ராஜலட்சுமிக்கு கிட்டாமல் போனது ராஜலட்சுமி பிறந்த இடம் / குடும்பம் / சாதி என அனைத்துமே முடிவு செய்கிறது.

நேற்று நானும் சில தோழர்களும் ராஜலட்சுமியின் வீட்டிற்குப் போனோம், நெடு நேரம் பேசினோம், வெளியே வந்தோம், கொலைகாரனின் வீட்டு வாசலுக்கு வந்தோம், ராஜலட்சுமியின் தலையை கொலைகாரன் தினேஷ்குமார் வைத்து விட்டுப்போன தார் சாலையில் படிந்திருந்த ரத்தத்தை போலீஸ்காரர்கள் சுரண்டி எடுத்துச் சென்றிருக்கிறார்கள், பேய் வாழ்ந்த வீட்டைப் போல தினேஷ்குமாரின் வீட்டைப் பார்த்தேன், பத்துக்கும் மேற்பட்ட பெரும்பான்மை தலித் குடும்பங்கள் அங்கே இருந்தும் அந்த ஒற்றை சாதி ஹிந்து வீட்டை அவர்கள் எதுவும் செய்திருக்கவில்லை, இதுவே சேரியில் இருக்கும் ஒருவன் தவறு செய்திருந்தாலும் அந்த சேரிக்கே அது எத்தனை பாதகமாய் முடிந்திருக்கும் என்பதை தமிழகச் சூழலில் சாதிவெறியின் உக்கிரத்தை அறிந்த யாருக்கும் நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 

 கையாலாகாதவர்களை, செய்யத்தவறியவர்களை சுட்டிக்காட்டும் அதே வேளையில், இனி ராஜலட்சுமிகளுக்கு ஒன்றென்றால் இங்கே அவர்களுக்கென்று யாருமில்லை என்கிற போக்கை உடைத்தெறிய நாங்கள் போனோம், போவோம். இதற்கெல்லாம் முன் தோழர் எவிடன்ஸ் கதிர் ஆய்வு செய்திருக்கிறார், தீண்டாமை ஒழிப்பு முன்னணி உடன் இருக்கிறார்கள், விடுதலைச் சிறுத்தைகள் போயிருக்கிறார்கள், இத்தோடு சேர்த்து கைகோர்க்க, அழுத்தம் கொடுக்க, கோரிக்கைகள் வைக்க நீலம் பண்பாட்டு மையம் சார்பில் வழக்கறிஞர் அணியோடு நாங்கள் போனோம், 

மீண்டும் சொல்கிறேன், இனி போவோம். தலித்துகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் கேட்பாரற்று நீர்த்துப்போகும் என்கிற கருத்துருவாக்கம் இந்த மண்ணில் இருந்து அழியும்வரை அடுத்தடுத்து இனி யாரவது முளைத்துக் கொண்டே தான் இருக்கப்போகிறார்கள்.

ராஜலட்சுமியின் பெற்றோரிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டு அவள் வீட்டுக்குள் நுழைந்தேன், ராஜலட்சுமியின் கழுத்தறுக்கப்பட்ட இடத்திலிருந்து பீச்சியடித்த ரத்தம் படிந்திருந்த சுவற்றுக்கு எதிரே ஒரு மேசை, அதில் ஒரு புத்தகம், ராஜலட்சுமியின் நோட்டுப் புத்தகம், அதை திருப்பிய போது தான் இந்த பக்கம் நிலைகொள்ளச்செய்தது.

"என் பெயர் சா.ராஜலட்சுமி"

என்னை மறக்காதீர்கள் என்றும் அவள் மீண்டும் மீண்டும் எழுதி வைத்து விட்டுப் போனதைப் போல இருந்தது.
*

1 comment:

  1. You guys are doing god's work(even though I don't believe in god). Hope justice is served.

    ReplyDelete