Wednesday, November 28, 2018

கொலையுண்டவர் குடும்பங்களை நோக்கி . . .





அடுத்தடுத்து நடந்த மூன்று கொலைகள் தமிழகத்தில் மனசாட்சி உள்ளவர்களின் மனதை பாதித்தது.

பாலியல் இச்சைக்கு பணிய மறுத்ததால் தலை வெட்டிக் கொல்லப்பட்ட ராஜலட்சுமி.

வெறியர்களால் பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாகி, காவல்துறையின் அலட்சியத்தால் மரணித்த சௌம்யா,

ஆணவக்கொலையின் சமீபத்திய பலி நந்தீஷ்.

இந்த மூவர் குடும்பங்களையும் நேரில் சந்தித்து நீதி கோரும் அவர்களின் போராட்டத்தில் துணை நிற்போம் என்று நம்பிக்கை விதைகளை தூவி வந்துள்ளது அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்.

அகில இந்திய இணைச்செயலாளர் தோழர் எம்.கிரிஜா, தென் மண்டல மகளிர் ஒருங்கிணைப்புக்குழுவின் இணை அமைப்பாளர் தோழர் ஜே.விஜயா, தென் மண்டலப் பொருளாளர் தோழர் ஆர்.கே.கோபிநாத், சேலம் கோட்டச்சங்கத் தலைவர் தோழர் லட்சுமி சிதம்பரம், பொதுச்செயலாளர் தோழர் ஏ.கலியபெருமாள் உள்ளிட்ட தோழர்கள் நேற்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் அளித்து உறுதி கொடுத்து விட்டு வந்தனர். 

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான 
சர்வதேச தினம் மூன்று நாட்கள் முன்பாகத்தான் கடந்து போயிருக்கிறது. சர்வதேச மகளிர் தினத்தைப் போல இத்தினத்தையும் ஒரு கொண்டாட்ட தினமாக நீர்த்துப் போகச் செய்யும் முயற்சியை முதலாளித்துவ ஊடகங்கள் தொடங்கி உள்ளன.

பத்திரிக்கைகளில் ஒரு நாள் புகைப்படத்துடன் செய்தி வருவதோடு முடிந்து போவதல்ல, வன்முறைக்கு எதிரான போராட்டம் என்பது. களத்தில் தொடர்ந்து நிற்பது. 

அந்த கள அனுபவத்தை உணர்வுபூர்வமாக எங்கள் அகில இந்திய இணைச்செயலாளர் பகிர்ந்து கொண்டுள்ளார். நிஜமான அக்கறையோடு, புரிதலோடு அவர் எழுதியுள்ளது நெகிழ்ச்சியூட்டுகிறது. 

அவசியம் முழுமையாய் படியுங்கள்.




ஒசூரிலிருந்து புறப்பட்டு நகரத்திலிருந்து விலகி இருபுறமும் பச்சைப்பசேலென்ற வயல்களிடையே தார்ச் சாலையில் பயணித்தோம். அடுத்து வந்த கரடுமுரடான சாலையில் சிறிது தூரம் சென்ற எங்களது கார் சூடுகொண்டபள்ளி கிராமத்தை அடைந்தது. வலதுபுறம் திரும்பியவுடன் காவல்துறையிரின் விசாரிப்புகளை முடித்து உள்ளே சென்றோம். 

கீத்துக் கொட்டாய் குளியறை, ஷீட் போட்ட வீடு(!) ... நந்தீஷின் சகோதரியும், தாயும் வெளியே வந்தனர்.  எங்களோடு வந்திருந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நிர்வாகியும், விச-வின் நிர்வாகியும் எங்களை அறிமுகப்படுத்தினர்.  'இந்த கொலைல சம்பந்தப்பட்ட எல்லாரையும் ஜெயில்ல போடணும்.. எங்க 15 குடும்பத்துக்கும் பாதுகாப்பு இல்ல' என கண்ணீர் மல்க நந்தீஷின் குடும்பத்தினர் பேசத் துவங்கினர். அவர்கள் சொல்வதைக் கேட்க கேட்க மனம் பதைபதைத்தது. தேற்ற வார்த்தைகளின்றி மனம் கனத்தது. ஆதரவின் அடையாளமாக 5000/- ரூபாய்களை அக்குடும்பத்தினரிடம் அளித்தோம். சாதி ஆணவக் கொலையை எதிர்த்த அவர்களது போராட்டத்தில் என்றென்றும் AIIEA தோழர்கள் உடனிருப்போம் என உறுதியளித்தோம்.

அரூரில் மதிய உணவை முடித்துவிட்டு சிட்லிங் நோக்கி துவங்கியது பயணம்.. மலைவாழ் மக்கள் சங்கத்தின் நிர்வாகியும்,  மாதர் சங்கத்தின் செயலாளரும் எங்களோடு வந்தனர். கோட்டப்பட்டியை நெருங்கும்போது, இனி கொஞ்சம் ரோடு மோசமாக இருக்கும் என தோழர் சொன்னார். கொஞ்சம் இல்லை, நடுல கொஞ்ம் ரோட்டையே காணோம். நெடுஞ்சாலைல எங்கள சொகுசா சுமந்த கார், இப்ப குலுக்கி தூக்கிப் போட்டது. 

20 நிமிட பயணத்தில் சிட்லிங்கை அடைந்தோம். செளமியாவின் வீட்டை அடைந்தோம். வாசலில் கயித்துக் கட்டில், நெருப்பு கனன்று கொண்டிருந்த மண் அடுப்பு ... அக்குடும்பத்தின் ஏழ்மையை எடுத்துரைத்தது. செளமியாவின் தாய், அண்ணி, பாட்டி, அக்கம்பக்கம் இருப்போர் அவசரமா உட்கார சேர்களைப் போட்டனர். தன் ஆசை மகளுக்கு நேர்ந்த கொடுமையை, இழைக்கப்பட்ட அநீதியையும் அழுகையோடு சொன்னபோது, நீரில் மிதக்கும் கண்களோடு கேட்டுக் கொண்டிருந்த எங்கள்  கண் முன் அதிகாரத்தில் இருப்பவர்களின் அலட்சியத்தால் உயிரோடு கொல்லப்பட்ட செளமியா முகம் வந்து மனதைப் பிசைந்தது.

 கனத்த இதயத்தோடு சிட்லிங்கிலிருந்து ஆத்தூருக்குப் புறப்பட்டோம்.  ஐபிஎஸ் பாசாகி காவல்துறையில் பணியாற்ற வேண்டும் என்ற சௌமியாவின் கனவு, இயற்கை உபாதைக்காக ஓடைப்பக்கம் ஒதுங்கியபோது அவளோடு சேர்த்து கலைக்கப்பட்டது சொல்லொணாத் துயரத்தை அளித்தது.  வனத்துறையின் காடுகளினிடையே பயணித்த பின், கிராமம் ஒன்றை எட்டியபோது, இயற்கை உபாதைக்கு ஒதுங்க இடம் தேடினோம்.  மினி டிபார்ட்மெண்ட் ஸ்டோர் ஒன்றை பார்த்ததும் காரை நிறுத்தினோம். அங்கே இருந்த இரு பெண்களிடம் எங்கள் சிரமத்தை சொல்லி உதவி கேட்டோம். மலர்ந்த முகத்தோடு எங்களை கழிப்பறைக்கு அழைத்து சென்றார். மனதார அவர்களுக்கு நன்றியை சொன்னோம். 

அப்போது நீங்கல்லாம் எங்கே இருந்து வர்றீங்க? என கேட்க, நாங்க விவரங்களை சொன்னோம். நெகிழ்ந்து போன அவர்கள், 'நீங்க செஞ்சிருக்கறதோட பார்த்தா நாங்க உங்களுக்கு ஒண்ணுமே செய்யல' என சொன்னதோடு, அங்கே கிண்ணத்துல இருந்த அவிச்ச கடலையை எடுத்து, 'எங்க தோட்டத்து கடலை.. மருந்தடிக்காதது' என சொல்லி அள்ளித் தந்தனர்.  'இந்த பக்கம் வரும்போது எங்க கடைக்கும் வாங்க' என்றவர்களிடம் விடைபெற்றோம். இச்சமூகத்தில் மனிதம் இன்னும் முற்றிலுமாக மரணித்து விடவில்லை என்ற ஆறுலோடு பயணத்தைத் தொடர்ந்தோம்.

ஆத்தூரின் தளவாய்பட்டி நோக்கி கார் வேகம் பிடித்தது.  நெடுஞ்சாலையிலிருந்து வலதுபுறம் திரும்பி ராஜலட்சுமி வீடு நோக்கி பயணித்தோம். இருபுறமும் இருந்த வயல்வெளிகளில் சோளம், பருத்தி, மரவள்ளிகிழங்கு, மஞ்சள் ஆகியன பயிரிடப்பட்டிருந்தன.  அங்கொன்றும் இங்கொன்றாகவும் இருந்த சாலை வீடுகளைப் பார்த்தபடி போனோம். அங்க ஒரு வீட்டுக்கு போற வழி முட்களும், கம்பிகளும், கட்டைகளும் போட்டு மறிக்கப்பட்டிருந்தது. உடன் வந்த மாதர் சங்க சகோதரியிடம் கேட்டபோது இதுதான் ராஜலட்சுமிய கொன்னவன் வீடு என்றார். 

மீண்டும் வலப்புறம் திரும்பி கார் நிற்க இறங்கினோம். அங்கிருந்த காவலர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து ராஜலட்சுமி வீட்டை அடைந்தோம். குடும்பத்தினரை சந்தித்து பேசத் தொடங்கினோம். அச்சிறுமியின் தாயும், தகப்பனும், சகோதரி & சகோதரன் நடந்ததை விவரித்தபோது மனம் பதைபதைத்தது. பாப்பாவோட தலையில்லாத ஒடம்பு இங்கதாம்மா துடிச்சுச்சு என அத்தாய் கை காட்ட அவரோடு நாங்களும் துடிதுடித்துப் போனோம். சாதி வெறிக்கெதிரான போராட்டத்தில் நாமும் அவர்களோடு உள்ளோம் என்று சொல்லி,  விடை பெற்றோம்.

அப்போது அங்கிருந்த காவலர்கள் கண்களில் நன்றி ஒளிர்ந்தது. 

காலை முதல் தொடர் பயணம்... நம்ப வைத்து கொலை செய்த சுவாதியின் பெரியப்பா, காதும் காதும் வைத்து  வழக்கை முடித்து குற்றவாளிகளை காப்பாற்ற சௌமியாவின் குடும்பத்தாரை  வஞ்சித்த காவல்துறை, அரசு மருத்துவமனை, பெண்கள் காப்பகம் ஆகியற்றைச் சார்ந்தவர்கள், 8ம் வகுப்பு படிக்கும் சிறுமியின் கழுத்தை துள்ளத் துள்ள, துடிக்கத்துடிக்க கொன்றவன் ... இவர்களை எதிர்த்த போராட்டத்தில் களம் கண்டு வரும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய, சமூரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நின்ற நிறைவோடு ஊர் திரும்ப பயணம் கார் நோக்கி நகர்ந்தோம்.

SZIEFன் பொருளாளர் கோபிநாத், LICSZWWCCன் இணை அமைப்பாளர் விஜயா, சேலம் கோட்டச் சங்க பொதுச் செயலாளர் கலியபெருமாள், தலைவர் லக்ஷ்மிசிதம்பரம், சேலம் கோட்ட மகளிர் துணைக்குழுவின் அமைப்பாளர் பொன்மொழி, கோவை மண்டல பொது இன்சூரன்சு ஊழியர் சங்கத்தின் மகளிர் துணைக்குழுவின் அமைப்பாளர் ஷோபனா ஆகியோரோடு நானும் சென்றேன். ஒசூர் கிளையின் ஹரிணியும் இதர முன்னணி தோழர்களும் நந்தீஷ் குடும்பத்தினரை சந்திக்க எங்களோடு வந்தனர். சேலம் கோட்ட மகளிர் துணைக் குழுவின் அமைப்பாளர் தோழர் சாந்தி சிட்லிங்கிற்கும், தளவாய்ப்பட்டிக்கூம் எங்களோடு பயணித்தார்.

No comments:

Post a Comment