Friday, November 16, 2018

உங்க சாகசத்துக்கு அடுத்தவன் சாகனுமா?



மிகுந்த கோபத்தோடு எழுதுகிறேன்.

எங்கள் அலுவலகம் இருக்கும் ஆற்காடு சாலையில் கடந்த சனிக்கிழமையன்று இரு சக்கர வாகனத்தின் பின்னே அமர்ந்து வந்த ஒரு தோழர் மீது வேகமாக வந்த இன்னொரு வாகனம் மோதி அவருக்கு காலில் தையல் போட வேண்டிய நிலை வந்தது.

புதன் கிழமையன்று காலை அலுவலகம் வந்த தோழரின் மீது பின்னே வந்த இன்னொரு வாகனம் மோதி அவருக்கு உடல் முழுதும் காயம். சி.டி ஸ்கேன் ரிப்போர்ட் வந்து எந்த பிரச்சினையும் இல்லை என்று தெரியும் வரை அனைவருமே பதட்டத்தில் இருந்தோம்.

இன்று அலுவலகத்திலிருந்து திரும்புகையில் பார்த்த காட்சி மிகவும் எரிச்சலையும் கோபத்தையும் அளித்தது.

ஒரு இரு சக்கர வாகனம் வேகமாக வளைந்து வளைந்து வந்ததை தூரத்திலேயே பார்த்தேன். 

அருகே வரும் போது பார்த்தால் ஒரு சின்ன பையன் கைகள் இரண்டையும் ஹாண்டில் பேரிலிருந்து எடுத்து விட்டு பாடிக் கொண்டும் நடனமாடிக்கொண்டும் வண்டியை ஓட்டிக் கொண்டு வ்ந்தான். பின் இருக்கையில் இன்னொரு பையன் வேறு உட்கார்ந்திருந்தான்.

இவர்கள் சாகசம் செய்ய வேண்டுமென்றால் எங்காவது ஆளில்லாத  மைதானத்திற்குப் போய் செய்ய வேண்டியதுதானே! அதை விடுத்து போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் செய்து அடுத்தவர்கள் உயிரை எடுப்பதெல்லாம் என்ன போக்கு?

இந்த பசங்களை மட்டும் சொல்லி குற்றமில்லை. பக்குவமில்லாத ஆட்களுக்கு பெரிய வண்டிகளை வாங்கித் தரும் பெற்றோரும் குற்றவாளிகளே! இது போன்றவற்றை கண்டு கொள்ளாத போக்குவரத்து காவலர்களும் கூட. 

பிகு

வண்டி எண்ணை குறித்துக் கொண்டு புகார் கொடுக்கலாம் என்று நினைத்தால் அதற்குள் அந்த வாகனம் சீறிப் பறந்து விட்டது.

பிகு 2

மேலே உள்ள படம் கூகிள் உபயம்


1 comment:

  1. பெற்றோருக்கு பாசவலை. காவல்துறையோ விரக்தியில் உள்ளனர். நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தாலே மேலிட அழுத்தம். அவர்களும் விரக்தியில் உள்ளனர். பேய்கள் ஆட்சியில் பிசாசுகள் தாண்டவமாடும். தவறான மக்கள் மோசமான நபர்களிடமே அதிகாரத்தை ஒப்படைக்கிறார்கள்.

    ReplyDelete