நான் சோழர் கால பொன்னியின்
செல்வனைச் சொல்லவில்லை. காவிரி உற்பத்தியாகும் கர்னாடக மாநிலத்தில் பிறந்து காவிரி
நதி பாய்ந்து மண்ணில் பொன் விளையச் செய்த தஞ்சைத் தரணியில் அற்புதப் பணி செய்த அருமையான
மனிதரைப் பற்றி நான் சொல்கிறேன்.
அடிமை விலங்குகளால்
பிணைக்கப்பட்டு சவுக்கடி, சாணிப்பால் போன்ற சித்திரவதைகளுக்கு உள்ளாகி நரக வாழ்வில்
உழன்று கொண்டிருந்த கீழத் தஞ்சை மாவட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கு விடிவெள்ளியாய் வந்து
சேர்ந்தவரைப் பற்றி எழுதுகிறேன்.
“அடித்தால் திருப்பி
அடி” என்றும் “ஏண்டி என்றால் ஏண்டா என்று கேள்” என்று அவர்களுக்கு நம்பிக்கை அளித்தவர்.
அமைப்பாய் திரட்டியவர், போராட்டப்பாதைக்கு அழைத்துச் சென்றவர். செங்கொடியை உயரப் பறக்க
வைத்தவர்.
“நான் உத்தரவிட்டால்
நூற்றுக்கணக்கான போலீஸார் உன்னை உடனே கைது செய்வார்கள் என்று மிரட்டிய அமைச்சரிடம் “மிஸ்டர் பாஷ்யம், நான் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஜே”
என்று ஒரு முழக்கம் எழுப்பினால் ஆயிரக்கணக்கானவர்கள் இங்கே சேர்ந்து விடுவார்கள்” என்று
எதிர்வினை ஆற்றியவர்.
தஞ்சைத்தரணியின் ஏழை
மக்களின் அடிமைத்தளையை அறுத்தெரிந்து, நிலப்பிரபுக்களின் கொட்டத்தை அடக்கிய மகத்தான தலைவர் தோழர் பி.சீனிவாசராவ் தானே இன்றைய
காலத்தின் பொன்னியின் செல்வன்!
இன்று அவருடைய நினைவு
நாள்.
தோழர் பி.சீனிவாசராவ்
அவர்களுக்கு செவ்வணக்கம்.
No comments:
Post a Comment