Saturday, September 3, 2022

பிள்ளையாரை அசிங்கப்படுத்தறாங்க!

 


நேற்றும் நேற்று முன் தினமும் பார்த்த சில காட்சிகள்.

 காட்சி 1

 எங்கள்  வீட்டிற்கு அருகில் இருந்த ஒரு பிரம்மாண்டமான வினாயகர் சிலை வெள்ளை திரை போட்டு மூடப்பட்டிருந்தது. ஆனாலும் திரைக்குப் பின்னால் நடப்பது நன்றாக தெரிந்தது.

 மூவர் அங்கே அமர்ந்து பிளாஸ்டிக் டம்ப்ளர்களில் ஏதோ ஒரு கருந்திரவத்தை பாட்டிலில் இருந்து ஊற்றிக் கொண்டிருந்தார்கள். பிள்ளையார் பால் குடித்தார் என்ற வதந்தியை நம்பாதவர்கள் என்று மட்டும் புரிந்தது. அப்படி அவர்கள் நம்பியிருந்தால் அவர்கள் அங்கே சரக்கை சாப்பிட்டிருக்க மாட்டார்கள் அல்லவா!

 காட்சி 2

 வினாயகர் விஸர்ஜன ஊர்வலத்தின் ஒரு பகுதி எங்கள் அலுவலகத்தை கடந்துதான் சென்றது. அதிரடிப்படை தலைமை தாங்க, அதன் பின்பு சாதாரண போலீஸ் நடைபோட பின்பு வந்தது போலீஸ் ஊர்வலம். தலையில் காவித்துண்டை கட்டியிருந்தவர்கள் கண்கள் சிவப்பேறியிருந்தது. காரணம் என்னவென்பதை தனியாக சொல்லவும் வேண்டும். பதினோரு மணிக்கு ஊர்வலம் புறப்படும் என்று பேனர் சொன்னாலும் அவர்கள் தாமதமாகத்தான் புறப்பட்டிருக்க வேண்டும். ஆமாம் வழியில் உள்ள திப்பு மசூதியில் வெள்ளிக் கிழமை தொழுகை நடக்கும் நேரமும் அவர்கள் அந்த இடத்தை கடந்த நேரமும் ஒன்றுதான். காரணம் ? அதை தனியாக வேறு எழுத வேண்டுமா?

 காட்சி 3

 எங்கள் அலுவக சுற்றுச்சுவரை ஒட்டியிருந்த  தெரிவில் ஐந்தாறு இளைஞர்கள். தலையில் காவித்துண்டும் முகத்தில் சாயமும் பூசியிருந்தார்கள். காரசாரமான விவாதத்தில் ஒருவன் மற்றவர்களுக்கு பணம் தர, அவர்கள் அதை அவன் முகத்திலேயே தூக்கி எறிந்து வசூல் காசு மொத்தத்தையும் நீயே சுருட்டிக்க பார்க்கிறாயா என்று சண்டை போட்டார்கள்.

 காட்சி 4

 அலுவலகத்திலிருந்து வீடு வரும் வேளையிலும் வினாயகர் ஊர்வலம் சென்று கொண்டுதான் இருந்தது. வாகனங்கள் செல்ல வழி கொடுத்தார்கள். ஊதுபத்தி, கற்பூரம் என்று பக்தி மணம் கமழும் என்று நினைத்தேன். டாஸ்மாக் வாசம் வீசிக் கொண்டிருந்தது.

 காட்சி 5

 எங்கள் தெருவுக்கு பின் தெருவில் இருந்த பிள்ளையார் சிலையை அப்போதுதான் வண்டியில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். “தண்ணி கருத்துடுச்சு, தவளை சத்தம் கேட்டுருச்சு” என்று அந்த கால பாடல் சத்தமாக ஒலித்துக் கொண்டிருந்தது. “டேய் பிள்ளையாரு பிரம்மச்சாரி. அவரை விட்டுருங்கடா”  என்ற என் மைண்ட் வாய்ஸ் அவர்களுக்கு கேட்கவே இல்லை. அடுத்த பாடல் ஒலித்தது.

 “படிச்சுப் பார்த்தேன். ஏறவில்லை. குடிச்சுப் பார்த்தேன். ஏறிடுச்சு”

 இந்த காட்சிகளைப் பற்றி நான் என்ன கருத்து சொல்ல?

 


2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. உம் பின்னூட்டங்களை பிரசுரிக்கப் போவதில்லை என்று முன்பே தெரிவித்து விட்டேன். So don't waste my time

      Delete