Thursday, September 8, 2022

எட்டு வருடங்களுக்கு முன்பு

 எட்டு வருடங்களுக்கு முன்பு இதே நாளில் “தாத்தா வந்தார்” என்ற எனது சிறுகதை வண்ணக்கதிரில் பிரசுரமானதாக முகநூல் நினைவு படுத்தியது.

 அன்றைய தினம் விழுப்புரத்தில் ஒரு திருமண விழாவிற்கு போய் விட்டு வேலூர் திரும்ப இரவாகி விட்டது. என் இரண்டாவது அக்காவின் குடும்பத்தினர் திருப்பதி சென்று விட்டு வேலூர் வந்திருந்தனர். நிஜமான பக்தரான என் அக்காவின் கணவர் நான் வீட்டில் நுழையும் போது அந்த கதையைத்தான் படித்துக் கொண்டிருந்தார். இப்படி எழுதியுள்ளீர்களே, அவர் என்ன சொல்வாரோ என்று என் மனைவி வேறு காதில் மெல்லமாக சொல்லி பதற்றத்தைக் கூட்டினார்.

 அவரோ கதையை எழுதியது யாரென்று தெரியாமலே “இந்த கதையை படி, ரொம்ப நல்லா இருக்கு” என்று அவர் சொல்ல என் மனைவியின் முகத்தில் நிம்மதியுடன் கூடிய சின்ன பெருமிதம். இவர்தான் எழுதினார் என்று சொல்ல, அவரும் பாராட்டினார்.

 மறைந்த தலைவர் தோழர் இ.எம்.ஜோசப் தொலைபேசியில் அழைத்து பாராட்டி, இதென்ன மேஜிக்கல் ரியலிஸ கதையா என்றார். தோழர் அதெல்லாம் எனக்கு தெரியாது. சடங்குகளின் போலித்தனம் பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியது எழுதினேன் என்றேன்.

 முகநூல் நினைவு படுத்தியதும் இதெல்லாம் கூட நினைவுக்கு வந்து விட்டது.

 அது மட்டுமல்ல, சிறுகதை எழுதி நான்காண்டுகளாகி விட்டது என்பதையும் கூட நினைவு படுத்தியது. “முற்றுகை” நாவல் மனதில் ஓடிக் கொண்டிருந்ததால் கவனம் திசை திரும்பக் கூடாது என்று சிறுகதை பக்கம் போகாமல் இருந்தேன். இப்போது “லாக் அவுட்” மனதை ஆக்கிரமித்துள்ளது. இருப்பினும் முயற்சிக்கலாமே என்று இன்னொரு குரலும் மனதில் ஒலிக்கிறது. பார்ப்போம் எந்த குரலுக்கு வலிமை என்று!


 

தாத்தா வந்தார்

வேலூர் சுரா,

 

காலை நான்கு மணிக்கு அலாரம் அடிப்பதற்கு முன்பாகவே விசாலத்திற்கு விழிப்பு வந்து விட்டது. இன்றைக்கு கணவரின் திதியல்லவா! பல் தேய்த்து தனக்கு மட்டும் காபி கலந்து குடித்து விட்டு டைனிங் டேபிளில் அமர்ந்தபடியே கறிகாய்களை வெட்டத் தொடங்கினார். அந்த வேலை முடிந்ததும் ஏற்கனவே லாஃப்டிலிருந்து எடுத்து வைத்திருந்த பித்தளைப் பாத்திரங்களை மீண்டும் ஒரு முறை அலம்பி வைத்து விட்டு நேரத்தைப் பார்த்தால் ஐந்தரை ஆகியிருந்தது.

 

பத்தாண்டுகள் அதற்குள் ஓடிப் போய் விட்டதா? விசாலத்திற்கு கண்ணீர் ததும்பியது. ஓய்வு பெறுவதற்கு ஆறு மாதங்கள் இருக்கும் போது அலுவலகத்திற்கு சென்றவரை திடிரென நெஞ்சு வலி வந்து மருத்துவ மனைக்கு கூட்டிச் செல்லும் முன்னே இறந்து விட்டார் என்று சடலமாகத்தான் வீட்டிற்கு எடுத்து வந்தார்கள்.

 

சொந்த வீடு, கார், வங்கியில் சேமிப்பு, குடும்ப பென்ஷன் என்று இருந்ததால் பொருளாதார ரீதியில் விசாலத்திற்கு பெரிய சிரமம் எதுவுமில்லை. ஒரே பையன் பிரசாத்தும் கேம்பஸிலேயே தேர்வு பெற்று வேலைக்கும் போய் விட்டான். அவனது கம்பெனியில் வேலை பார்க்கும் வாணியை திருமணம் செய்து கொள்கிறேன் என்ற போது விசாலத்திற்கு கொஞ்சம் மனதிற்கு கஷ்டமாக இருந்தாலும் தூரத்து சொந்தம் என்பதால் மனதைத் தேற்றிக் கொண்டாள். பேத்தி ஐஸ்வர்யா எனும் சின்னுவைக் கொஞ்சுவதில் பொழுது போய்க் கொண்டிருந்தது. அவளும் இப்போது முதல் வகுப்பு படிக்கிறாள். எவ்வளவு வேகமாக காலம் ஓடினாலும் சில நினைவுகளை அதனால் எடுத்துச் செல்ல முடியாதே!

 

மணி ஆறரை ஆனது. ஒன்பது மணிக்கெல்லாம் சாஸ்திரிகள் வந்து விடுவார். இந்தக் காலப் பசங்களுக்கெல்லாம் கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா என்று மனதிற்குள் முனகிக் கொண்டே குளித்து விட்டு ஈரப்புடவையோடு வெளியே வந்தால் வாணி அடுப்பில் ஐஸ்வர்யாவிற்கு தோசை வார்த்துக் கொண்டிருந்தாள். இவளது முகக்குறிப்பைப் புரிந்து கொண்டு

 

“பரவாயில்லை, சமைக்கிறதுக்கு முன்னாடி இன்னொரு தடவை துடைச்சிடறேன்” என்றாள்.

 

“கண்ணாடி அடுப்பு. நிமிஷமா துடைச்சிடுவே. எங்க மாமியார் உயிரோட இருந்தவரை பிரசாத்தோட தாத்தா தெவசம் கிராமத்திலதான் நடக்கும். மண் அடுப்ப சாணம் போட்டு மொழுகனும். ஸ்ரார்த்தம் முடியறவரைக்கும் பிரசாத் பட்டினியாவே இருப்பான். நீதான் என்னமோ ஐ.ஏ.எஸ் படிப்பு பாழாப் போகுதுனு சின்னுவை ஸ்கூலுக்கு அனுப்பற”

 

விசாலத்தின் புலம்பலை காதில் வாங்காமலேயே வாணி சென்று விட பேப்பரும் பிரஷ்ஷுமாக வந்த பிரசாத்தைப் பார்த்து

 

“சீக்கிரமா குளிச்சுட்டு வா, காபி கலந்து தரேன்” என்று சொல்ல அவனோ

 

“நீ முதல்ல காபிய குடுமா, அப்பறமா குளிக்கப் போறேன்” என்று பேஸ்ட் வாயோடே சொல்ல விசாலம் கடுப்பானார்.

 

“இன்னிக்கு ஒரு நாளாவது நான் சொல்றத கேட்க்க் கூடாதா”

 

“சாஸ்திரிகள் வரதுக்கு முன்னாடி நாலு தடவை ரெடியாடுவேன். காபியைக் குடிச்சுட்டு குளிக்கப் போறேன்”.

 

யூனிபார்மோடு பேத்தி வந்தாள்.

 

“பாட்டி, இன்னிக்கு யார் கெஸ்ட் வராங்க? இவ்வளவு வெஜிடபிள்ஸ் கட் பண்ணி வெச்சுருக்க?”

 

“இல்லைம்மா இன்னிக்கு உங்க தாத்தா வராரு. அதுக்காக இன்னிக்கு பூஜை”

 

“இந்த போட்டாவில இருக்கற தாத்தாவா? சாமி கிட்ட போய்ட்டாருன்னு சொன்னீங்களே, மறுபடியும் வரப் போறாரா? இங்கேயேதான் இருப்பாரா?”

 

“நீ ஸ்கூல் போய்ட்டு வரதுக்குள்ள போய்டுவார். சாயந்தரம் உனக்கு பாட்டி அதிரசம், வடை, அல்வா எல்லாம் தரேன்”

 

“அதெல்லாம் எனக்கு பிடிக்காது. எனக்கு ப்ளாக் ஃபாரெஸ்ட் கேக் தான் பிடிக்கும்”

 

அதற்குள் வாசலில் ஆட்டோவின் ஹாரன் ஒலி கேட்க கணவனும் மனைவியுமாக புத்தக மூட்டையோடு மூட்டையாக சின்னுவையும் தூக்கிக் கொண்டு வாசலுக்குப் போய் விட்டார்கள்.

 

“என்னம்மா ஒன்பது மணிக்கெல்லாம் சுப்ரமணிய சாஸ்திரிகள் வந்துடுவாரா, நாலு மணிக்கு பாஸ் ஒரு மீட்டிங் வச்சுருக்காரு. அதுக்கு போயாகனும். ஒவ்வொரு வருஷமும் லேட் பண்றதே அந்த மனுஷனுக்கு பொழைப்பா போச்சு”  என்ற பிரசாத்தின் கேள்விக்கு

 

“அப்படியெல்லாம் சொல்லாதேடா, பிதுர்காரியம் செஞ்சு வைக்கறவர் அவர். பிதுர்காரியம் செஞ்சா உன்னோட பரம்பரைக்குத்தான் நல்லது”

 

என கெஞ்சும் குரலில் விசாலம் மன்றாட

 

“அதுக்காகத்தான் ஒவ்வொரு வருஷமும் நான் லீவ் போட்டு ஸ்ரார்தம் பண்றேன். ஏதோ தனி வீடுங்கறதனால ஹோமம் செய்ய முடியுது. ப்ளாட்டுனா சான்ஸே இல்லை”.

 

மணி ஒன்பதைக் கடந்திருந்தது. சாஸ்திரிகள் வரவில்லை. போனிலும் ரிங் போய்க்கொண்டிருந்ததே தவிர எடுத்துப் பேசவில்லை. பிரசாத்தின் முகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக எரிச்சல் கூடிக் கொண்டிருந்தது.

 

வாசலில் மணியடிக்கும் ஓசை கேட்டதும்

 

“இதோ வந்துட்டாங்க” என்று விசாலம்  வேகமாக எழுந்து போய் கதவைத் திறந்தால் கணேஷ் நின்று கொண்டிருந்தான். கணவரின் அண்ணன் மகன். அவனைப் பார்த்தவுடனேயே விசாலத்திற்கு நெஞ்சு படபடத்தது. சாஸ்திரிகள் வரும் நேரம் இவன் இங்கே இருந்தால் மீண்டும் மோதிக் கொள்வார்களே என்று கவலையும் வந்தது. அது ஒரு பத்தாண்டு கால பகை. விசாலத்தின் கணவர் இறந்த பின்பு பனிரெண்டாம் நாள் சவுண்டிகரணத்தின் போது ஏற்பட்ட சர்ச்சை அது.

 

இரண்டு வரிசையில் மூன்று மூன்று பிண்டங்களை இலையில் அடுக்கி வைத்து பிரசாத்திடமும் மற்றவர்களிடமும் சாஸ்திரிகள் விளக்க ஆரம்பித்தார்.

 

“இதோ இப்பதான் உங்கப்பா தன்னோட முன்னோர்களோட கைலாசத்துக்கு போய் ஐக்கியமாகப் போராரு. உங்க தாத்தாவோடயும் கொள்ளுத்தாத்தாவோடயும் போய் சேர்ந்துடுவார். உங்கப்பா அங்கே போனதும் உங்க எள்ளுத்தாத்தா  அங்கேயிருந்து கிளம்பிடுவார்”

 

அப்போதுதான் கணேஷ் அந்த கேள்வியைக் கேட்டான்.

 

“சாஸ்திரிகளே, மூனு வருஷம் முன்னாடி எங்கப்பா தவறிப் போன போது எங்க எள்ளுத் தாத்தா கிளம்பியிருப்பாரே, எங்க அண்ணா போன வருஷம் ஆக்ஸிடென்டில் இறந்து  போது எங்க கொள்ளுத்தாத்தாவும் கிளம்பியிருப்பாரு. இப்ப அவங்க ரெண்டு பேரும்  மறுபடி அங்க வருவாங்களா?”

 

சாஸ்திரிகள் முகத்தில் தடுமாற்றம் அப்பட்டமாகத் தெரிந்தது. அவரால் உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை. யோசித்துக் கொண்டே இருந்த போது

 

“அதெல்லாம் அப்புறமா பேசிக்கலாம். டைம் ஆகறது பாருங்கோ” என்று யாரோ அவசரப்படுத்த தலை தப்பினது தம்பிரான் புண்ணியம் என்று அவர் மந்திரங்களை சொல்ல ஆரம்பித்தார். ஆனாலும் கணேஷ் விடுவதாக இல்லை.

 

“இப்ப சொல்ல முடியலைனா பரவாயில்லை. ஆனா எனக்கு நீங்க கண்டிப்பா பதில் சொல்லியேயாகனும்”

 

அதன் பின் இந்த இருவரும் எப்போது பார்த்தாலும் கணேஷ் அவரை வம்பிற்கு இழுப்பதும் அவர் நழுவி ஓடுவதுமே வழக்கமாகி விட்டது.

 

“என்ன சித்தி, இன்னிக்கு சித்தப்பா ஸ்ரார்த்தமா? நான் அப்புறமா வரேன்” என்று சொல்லிப் போனவன் மீண்டும் திரும்பி வந்து 

 

“சுப்ரமணிய சாஸ்திரிகளை நான் விசாரிச்சேன்னு சொல்லுங்கோ. பிரசாத் நீ சாஸ்த்ரோக்தமா திவசம் பண்றதுக்கு காக்காவுக்கு பதிலா உங்கப்பாவே நேரில் வருவார் பாத்துக்கோ” என்று சொல்லி விட்டுப் போனான்.

 

அவன் வெளியே செல்வதற்கும் சாஸ்திரிகள் உள்ளே வருவதற்கும்  சரியாக இருந்தது.

 

“பத்து வருஷமாயும் பதில் சொல்ல மாட்டேங்கறீங்களே” என்ற கேள்வியை அவர் காதில் வாங்கிக் கொள்ளாமல் உள்ளே வந்து

 

“உங்க குடும்பத்துல இப்படி ஒரு நாத்தீகனா?” என்று கேட்க

 

“அவனை விடுங்க மாமா, நீங்க ஆரம்பிங்கோ, பிரசாத் வேற சாயந்தரம் ஆபீஸ் போகனும்” என்று விசாலம் சமாதானம் சொன்னார்.

 

எல்லாம் முடிந்து விசாலமும் வாணியும் சாப்பிடும் போது மூன்று மணியாகி விட்டது. மூன்றரை மணிக்கு வந்து சின்னு கேட்ட முதல் கேள்வியே

 

“பாட்டி, தாத்தா எங்க?”

 

“ஏதோ வேலையிருக்குனு அவர் கிளம்பிட்டாருமா கண்ணா,  வா ட்ரெஸ் மாத்திட்டு வந்ததும் உனக்கு ஸ்வீட்டெல்லாம் தரேன்” என்று சொன்ன விசாலத்தின் சிந்தனை கணவர் மீண்டும் வந்தால் எப்படி இருக்கும் என்று விரிந்தது. கணேஷ் சொன்னது போல காக்காய் வடிவில் வராமல் சொந்த வடிவில் அவர் வந்திருக்கலாமே என்று யோசித்தபடியே டி.வியைப் போட சீரியல் உலகில் அந்த சிந்தனை அப்படியே மறைந்து போனது.

 

விஜய், சன் என்று விரல்கள் சேனலை மாற்றிக் கொண்டிருக்க வரவேற்பு மணி ஒலிக்கிற ஓசை.

 

கதவைத் திறந்த வேகத்தில் அப்படியே மூடிய விசாலம் அலறினார்.

 

“பிரசாத், இங்க வாடா”

 

ரூமிலிருந்து பிரசாத், வாணி, சின்னு மூன்றுமே பேருமே அந்த சத்ததைக் கேட்டு ஓடி வந்தார்கள்.

 

“என்னம்மா? என்னாச்சு?”

 

“வாசல்ல பாருடா, உங்கப்பா நிக்கறாரு”

 

என்னம்மா முழிச்சுண்டே ஏதாவது கனவு கண்டியா எனக் கேட்டபடியே அவன் கதவைத் திறக்கப் போக,

 

“வேண்டாம்டா, கதவைத் திறக்காத, ஜன்னல் வழியா பாரு”

 

பிரசாத்தும் பார்த்தான்.

 

இறந்து போன அன்று அலுவலகத்திற்கு செல்லும் போது அணிந்திருந்த அதே வெள்ளை சட்டை, கறுப்பு பேண்ட், கண்ணாடியோடு முகத்தில் கொஞ்சம் சிடுசிடுப்போடு வாசலில் அப்பா நின்றிருந்தார்.

 

“எப்படிம்மா இது? நான்தான் அவருக்கு கொள்ளி வச்சேன். அஸ்தியைக் கூட நீ சொன்னியேன்னு ராமேஸ்வரத்துல போய் கரைச்சுட்டு வந்தேன்”

 

“ஆவியா வந்திருக்காருடா, ஐயோ அப்படி வரது வீட்டுக்கு நல்லதில்லையே”

 

“இப்ப என்னம்மா செய்யறது?”

 

சாஸ்திரிகளுக்கு போன் போட அவர் வீட்டில் ஏதாவது தோஷம் வந்திருக்கும். நவக்கிருக ஹோமம் செஞ்சா சரியா போயிடும் என அவர் அடுத்த வேலைக்க்கு அடித்தளம் போட்டார்.

 

“காலம்பற வரைக்கும் கதவை திறக்கவே  வேண்டாம். அதுவாவே போயிடும்” என்று விசாலம் சொல்ல

 

சின்னுவுக்கு மட்டும் ஒரே குழப்பம்

 

“ தாத்தா வரதுக்காக பூஜையெல்லாம் செஞ்சிட்டு இப்ப ஏன் அவர் வந்தா கதவை திறக்க மாட்டேங்கறாங்க”

 

யாரும் பதில் சொல்ல மாட்டார்கள் என்பதால் அந்த கேள்வியை அவள் கேட்கவேயில்லை.  

No comments:

Post a Comment