Saturday, February 3, 2024

நமது கழகத்திலிருந்து உதிர்ந்த ரோமம் வரை

 


ஜூனியர் விகடனால் உசுப்பேற்றப்பட்டு நாசமாகிப் போன மனிதர் எஸ்.டி.சோமசுந்தரம்.

எம்.ஜி.ஆரின் முதல் அமைச்சரவையிலே அமைச்சராக இருந்தவர். பொறியாளர் பட்டம் பெற்றவர். சக்தி மிக்க அமைச்சராகத்தான் இருந்தார், ஜெ அரசியலுக்கு அழைத்து வரப்படும் வரை. ஜெவுக்கு கொடுக்கப்பட்ட அதி முக்கியத்துவத்துக்கு எதிராக குரல் கொடுத்தார். அது எடுபடாத போது எம்.ஜி.ஆர் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை அடுக்க ஆரம்பிக்க அதிமுகவிலிருந்து நீக்கப்படுகிறார்.

ஊழலை ஒழிக்க வந்தவர் என்ற தோற்றத்தை தொடர் கவர் ஸ்டோரிகள் மூலம் ஜூவி கொடுக்க அவரும் நம்பிக்கையோடு புதிய கட்சியை துவக்குகிறார். “நமது கழகம்” என்று நாமகரணம் சூட்டி தமிழ்நாட்டின் பெரும்பாலான தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

தேர்தல் முடிவு என்ன ஆனது?

ஒரே ஒரு இடம் தவிர மற்ற அனைத்து இடங்களிலும்

வெற்றி பெற்றதா நமது கழகம்?

இல்லை. டெபாசிட் இழந்தது.

அந்த ஒரு தொகுதி கூட நெய்வேலியை உள்ளடக்கிய குறிஞ்சிப்பாடி தொகுதி. அப்போது என்.எல்.சி பொறியாளர் சங்கத்தின் தலைவராக இருந்த வி.என்.பண்டரிநாதன் மட்டுமே டெபாசிட் பெற்ற ஒரே வேட்பாளர்.

அப்படியானால் எஸ்.டி.எஸ்?

அவர் அதற்கு முன்பாக பல முறை வென்ற பட்டுக்கோட்டை தொகுதியிலேயே டெபாசிட் இழந்தார்.

அதன் பின்பு அவர் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

பிறகு மீண்டும் சில தலைவர்களோடு விலகினார். அப்போதுதான் ஜெ அவர்களை “உதிர்ந்த ரோமம்” என்றழைத்தார்.

அதன் பிறகும் அவர் மீண்டும் இணைந்தார். ஆனால் பெரிய முக்கியத்துவம் கிடைக்கவில்லை. ஏதோ ஒரு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜெ வின் வேனில் தொங்கிக் கொண்டு வந்த அசிங்கமெல்லாம் நடந்தது. மணிவண்ணன் கூட அதை “தாய் மாமன்” படத்தில் எஸ்.டி.எஸ் போலவே ஒருவரை நடிக்க வைத்து காட்சியாக்கினார்.

ஜூவி உசுப்பேற்றலுக்கு மயங்காமல் இருந்திருந்தால் பாவம் பிழைத்திருக்கலாம்.

 

 

1 comment:

  1. உசுப்பேற்றப் படும்போது சுகமாகத்தானே இருக்கும் இதைக்கூட புரிந்து கொள்ளாதஎன்ஜினியரா எஸ்டிஎஸ் அவைநாயகன்

    ReplyDelete