Thursday, February 7, 2019

பாளையங்கோட்டை என்சைக்ளோபீடியா . .
























திரு ப.எசக்கிராஜன் - எல்.ஐ.சி யில் முதுநிலை கோட்ட மேலாளராக பணி ஓய்வு பெற்றவர். பாளையங்கோட்டைக்காரர். அனைவரிடமும் மிக இனியாக பழகக் கூடிய இயல்புடையவர். தான் பிறந்த  மண் குறித்த நினைவுகளை அன்றாடம் முக நூலில் எழுதி வந்திருந்தார். அதனை வாட்ஸப்பிலும் அனுப்பி வைப்பார். அந்த குறிப்புக்கள் இப்போது "பாளையங்கோட்டை நினைவலைகள்"  என்று நூல் வடிவம் பெற்றுள்ளது. 

இந்த வருடம் சென்னை புத்தகவிழா செல்லும் தேதி முடிவான பின்பு அவருடைய நூல் எந்த பதிப்பகத்தில் கிடைக்கும் என்று கேட்டிருந்தேன். உங்களுக்கு என் பரிசாகவே அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லி, அவர் இப்போது ஆஸ்திரேலியாவில் இருந்தாலும் நெல்லையில் உள்ள ஒரு தோழர் மூலமாக நூல் வந்து சேர்ந்தது. சென்னை புத்தக விழாவிற்கு சென்ற நாளிலேயே அன்று அலுவலக முகவரிக்கு வந்து சேர்ந்தது ஒரு சிறப்பு. அன்றைய நாள் வீட்டு முகவரிக்கு வந்த இன்னொரு நூல் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த 'வேள்பாரி".

குடியரசு தினத்தன்று காலையில் தொடங்கி மறு நாள் இரவில் படித்து முடித்த நூல் பற்றிய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.

"பிள்ளையைப் போட்டு பலாப்பழம் எடுத்த ஓடை" என்ற தலைப்பில் ஒரு சுவாரஸ்யமான, அதே நேரம் "அடப்பாவி இப்படியா ஒருத்தி இருப்பா" என்று கேட்க வைக்கும் கட்டுரையோடு தொடங்குகிறது நூல்.

அதற்கடுத்த கட்டுரை தற்போது எல்.ஐ.சி நெல்லை கோட்ட அலுவகம் இருக்கும் இடத்தில் இருந்த மனோரமா மாளிகையின் பெருமையையும் அக்கட்டிடம் எப்படி சீரழிந்தது என்பதையும் சொல்கிறது. அரசின் பொறுப்பற்ற தன்மையையும் சொல்லாமல் சொல்கிறது.

பாளையங்கோட்டை நகரின் பெருமைகள்,  அங்கே வாழ்ந்த பெருமைக்குரிய மனிதர்கள், அரசியல் தலைவர்களின் வளர்ச்சியும் வீழ்ச்சியும், கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள்,  உணவகங்கள், தெருக்கள், தெருக்களுக்கு பெயர் வைக்கப்பட்ட பின்னணி என்று ஒவ்வொரு அத்தியாயத்திலும் பாளையங்கோட்டையின் வரலாறு விரிகிறது. 

மாஞ்சோலைப் போராட்டத்திற்கு முன்பே காவல்துறை தடியடியில் ஒரு ஜல சமாதி நிகழ்ந்திருக்கிறது என்ற தகவலை இந்த நூலைப் படிக்கையில் தெரிகிறது. ஒரு ஆசிரியரை காவலர்கள் தாக்கியதைக் கண்டு நீதி கேட்டு ஊர்வலமாய் சென்ற மாணவர்கள் மீது தடியடி நடத்தியதில் லூர்து நாதன் என்ற மாணவன் கொல்லப்பட்டுள்ளார். அந்த மாணவனுக்கு மாணவர் சங்கம் சிலை வைத்துள்ளது பாராட்டுதலுக்குரியது.  

இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தின் போது கறுப்புக் கொடி ஏற்ற வந்த மாணவர்கள் மீது திருநெல்வேலி எம்.எல்.ஏ ஆக இருந்த திருமதி ராஜாத்தி குஞ்சிதபாதம் அவர்களின் கணவர் குஞ்சிதபாதம் துப்பாக்கியால் சுட்டதில் பாலசுப்ரமணியன் என்ற  மாணவன் இறந்து போனதும் அதனால் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு சரிந்ததும் விவரிக்கப்பட்டுள்ளது. அந்த சூறாவளியால் அப்போது நகர்மன்றத் தலைவராக இருந்து பல நல்ல பணிகளைச் செய்த மகராஜன் என்பவர் தோற்றுப் போய்  பொது வாழ்விலிருந்து விலகிப் போனது துயரம்தான். சில சமயம் நல்லவர்களுக்கு இப்படித்தான் நிகழ்கிறது.

நூலாசிரியரின் அபாரமான ஞாபக சக்தி பிரமிப்பூட்டுகிறது. தெருக்களின் பெயர்கள், அங்கே வாழ்ந்தவர்கள், அங்கிருந்த கடைகள், திரை அரங்குகள், மருத்துவமனைகள், மருத்துவர்கள் என்று தகவல்களை அடுக்கிக் கொண்டே வருகையில் மலைப்பாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஒரு பெட்டிக் கடையின் அமைப்பைச் சொல்கிற போது ஆடிப் போய் விட்டேன். 

தன் மண்ணை ஆழமாக நேசிக்காவிட்டால் இது சாத்தியமே இல்லை.

லட்சுமி விலாஸ், சாந்தி ஸ்வீட்ஸ் அல்வா கடைகள் இருபத்தி நான்கு மணி நேரக் கடைகள் என்று படிக்கையில் ஒரு கேள்வி வந்தது. திருநெல்வேலியின் சிறப்பு இருட்டுக் கடை அல்வாதானே, அது இரவில் மட்டுமே செயல்படும் கடை என்று சொல்வார்களே என்று ஒரு சந்தேகம் வந்தது.

அதற்கான விளக்கம் பின் வந்த அத்தியாயங்களில் கிடைத்து விட்டது. இருட்டுக்கடை இருப்பது திருநெல்வேலியில். 

சுலோச்சன முதலியார் பாலத்திற்கு அந்தப்பக்கம் இருக்கிற திருநெல்வேலி பற்றி எழுதாவிட்டால் அந்த ஊர்க்காரர்கள் கோபித்துக் கொள்ளப் போகிறார்கள் என்று நான்கைந்து அத்தியாயங்கள் அவர்களுக்காகவும் எழுதப்பட்டுள்ளது.

ஒட்டு மொத்த நூலின் சாரமாக இறுதி அத்தியாயமாக "சாதிப்-போர், சாதிப்போர்" அமைந்துள்ளது. சாதிக்கலவரங்கள் நடக்கும் மண் என்ற அவப்பெயர் ஏற்பட்டு விட்டதே என்ற ஆதங்கத்தின் வெளிப்பாட்டை உணர முடிகிறது. அந்த மண்ணில் பிறந்து சாதித்தவர்கள் பட்டியலும் கிடைக்கிறது. நெல்லை வட்டார மொழியில் அமைந்துள்ள அமர்க்களமான கட்டுரை இது. 

போதிய வேலை வாய்ப்புக்கள் இல்லாமை, ஜாதிக் கலவரங்கள் நிகழ்வதற்கு ஒரு முக்கியக் காரணி என்று நீதியரசர் மோகன் குழு பரிந்துரை அளித்தது நினைவுக்கு வந்தது. ஆனால் அதற்கான நடவடிக்கைகள் எதையும் இன்று வரை ஆட்சியாளர்கள் எடுக்கவில்லை என்பது ஒரு துயரமான யதார்த்தம். 

பாளையங்கோட்டை பற்றிய என்சைக்ளோபீடியா  இந்த நூல் என்றால் அது மிகையில்லை.  இந்த நூலிலே சொல்லப்பட்ட இடங்களை பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் விதத்தில் சுவாரஸ்யமான எழுத்து நடையில் எழுதப்பட்டுள்ளது "பாளையங்கோட்டை நினைவலைகள்"

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் நன்றிகளும் சார் . . .

பிகு : கார் ஓட்டிய அனுபவம் பற்றி முக நூலில் அடுத்து ஒரு தொடர் எழுதிருந்தார். அதுவும் நூலாக வந்தால் சிறப்பாக இருக்கும். 






No comments:

Post a Comment