மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்து மிகச்சிறப்பாக செயல்பட்டு அற்புதமான நாடாளுமன்றவாதி என்று பாரதீய ஜனதா கட்சி எம்.பிக்களாலேயே கூட பாராட்டப் பட்டவர் தோழர் பி.ராஜீவ்.
2017 ம் ஆண்டு எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் 24 வது அகில இந்திய பொது மாநாடு எர்ணாகுளம் நகரில் நடைபெற்ற போது மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவராக வழிகாட்டியவர்.
பிரதிநிதிகள் மாநாட்டின் போது தோழர் ராஜீவ் ஆற்றிய உரை அவரது ஆழ்ந்த ஞானத்தையும் மக்கள் மீதான அக்கறையையும் வெளிப்படுத்தி பிரமிக்க வைத்தது.
அந்த தெளிவும் ஞானமும் இக்கட்டுரையில் மிளிர்கிறது. மார்க்சிஸ்ட் கட்சி மீது செய்யப்படுகிற அவதூறு பிரச்சாரத்தை தகர்ப்பதாகவும் அமைந்துள்ளது.
சற்றே நீண்ட, ஆனால் முக்கியமான கட்டுரை. முழுமையாக படியுங்கள்
மத நம்பிக்கையும் கம்யூனிஸ்ட் கட்சியும்
பி.ராஜீவ்,
தேசாபிமானி முதன்மை ஆசிரியர்
கேரளத்தின் மூவாற்றுப்புழாவில் நடைபெற்றமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நடைப்பயண நிறைவு மாநாட்டைத் துவக்கிவைப்பதற்கு நான் சென்றபோது மேடையிலேயே இரண்டு கிறிஸ்தவ மதக்குருமார் இருப்பதைப் பார்த்தேன். அவர்கள் விருந்தினர்களாக வந்திருப்பார்கள் என்று முதலில் நான் கருதினேன். ஆனால் அவர்கள் இருவரும் நடைப்பயணத்தில் முழுமையாகப் பங்கேற்றவர்கள் என்பதைத் தங்களை அறிமுகம் செய்து கொண்டபோது தெரிவித்தார்கள். அவர்கள் பாதிரியார் போள் தாமஸ் பீச்சியில் மற்றும் பாதிரியார் பிஜூ தாமஸ் சக்ரவேலி ஆகியோர் ஆவர். இந்த இருவரும் கூத்தாட்டுக் குளம் பகுதியின் பாலக்குழையைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள்.
கட்சி உறுப்பினர்களாக மதக்குருமார்கள் இருக்கிறார்களே என்று பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. இது சிறுபான்மையினர் விஷயத்தில் கட்சி பின்பற்றுகிற நெகிழ்ச்சியான அணுகுமுறையாக இருக்கலாம் என்று சிலர் குறிப்பிட்டதைக் கேட்டேன்.
பாலக்குழைக்கு பக்கத்தில் உள்ள கோலஞ்சேரிப் பகுதியைச் சேர்ந்த வெண்ணிக்குளம் உள்ளூர் கமிட்டிச்செயலாளராகிய சனல்குமார், அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு முழுநேர ஊழியராக ஆகும்வரை அவர் தொழில் செய்து வந்தது ஒரு அர்ச்சகராகத்தான். சமஸ்கிருதக் கல்லூரியில் எம்.ஏ.சமஸ்கிருதம் படித்து வந்த காலத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டக்குழு உறுப்பினராக இருந்த சனல்குமார் அன்றும் பூசை நடத்தித்தான் தன் குடும்பத்திற்கும் தனக்கும் தேவையான வருமானம் சம்பாதித்தார்.
மதக்குருமாரும் அர்ச்சகரும் கட்சி உறுப்பினர் ஆக முடியுமா என்கிற கேள்வி மிகப் பழைய கேள்வியாகும்.
தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் ‘சிந்தா’ வாரஇதழில் கேள்வி - பதில் பகுதியில் பலமுறை இதற்குப் பதிலளித்து வந்திருக்கிறார். ‘தி அட்டிட்யூட் ஆஃப் ஒர்க்கர்ஸ் பார்ட்டி டு ரிலிஜன்’ (மதம் தொடர்பான தொழிலாளர் வர்க்கக் கட்சியின் அணுகுமுறை) என்ற கட்டுரையில் லெனின் இதே கேள்வியையே எதிர்கொண்டிருக்கிறார்.
ஒரு மதகுரு பொதுவான அரசியல் பணிகளில் பங்கேற்று, உணர்வுப்பூர்வமாகக் கட்சியின் பொறுப்புகளை நிர்வகித்து, கட்சித் திட்டத்தை ஏற்றுக்கொண்டால் எந்தவொரு குருமாரும் கட்சியின் உறுப்பினராகலாம் என்று லெனின் பதிலளித்தார். (லெனின் தொகுப்பு நூல்கள் தொகுதி 15) மதத்திற்கு எதிராகப் போராடி அதை இல்லாமற் செய்ய முடியாது என்பதையும்; அதன் வேர்களைக் கண்டறியாமல் அணுகுவதையும், மதவெறுப்பு நிலைபாட்டையும், கடவுள் மறுப்பு வாதத்தையும் ஒரு முழக்கமாக ஆக்குகிற நிலைபாடு தொழிலாளி வர்க்கக் கட்சிக்கு இல்லை என்பதையும் லெனின் தெளிவாக்கியிருக்கிறார்.
‘மதம் ஒழியட்டும், கடவுள் மறுப்புவாதம் நீடுழி வாழட்டும்’ என்பது எதிர்ப்புரட்சி நிலைபாடாக இருக்கும் என்றும் லெனின் தெளிவாக்கியிருக்கிறார்.
வர்க்கப் போராட்டக் கலையும் விஞ்ஞானமும்
மதத்தைப் பற்றிய அணுகுமுறையைத் தெளிவாக்குகிற அறிக்கை ஒன்றை 1980 அக்டோபரில் கியூப கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டது. வரலாற்றில் முதன் முறையாக அதிகாரத்தில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிமதம் சம்பந்தமான ஓர் அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அதில் கியூப கம்யூனிஸ்ட் கட்சி இவ்வாறு தெளிவுப்படுத்தியது
.“மதம் என்பது மனிதனை அந்நியப்படுத்துவதையும், ஒரு வர்க்கம் மற்றொரு வர்க்கத்தைச் சுரண்டுவதையும் நியாயப்படுத்துகிற ஓர் ஏற்பாடாகும் என்று ஒரு பிரிவினர் கூறுகின்றனர். வரலாற்று ரீதியாக அது சரிதான். சில கட்டங்களில் மதம் அரசியல் ஆதிக்கத்தின் தத்துவார்த்தக் கருவியாக இருந்தது.
இன்று எங்கள் அனுபவம் என்னவென்றால், மத நம்பிக்கையாளர்கள் அவர்களது நம்பிக்கையில் உறுதியாக இருந்துகொண்டே வரலாற்றின், சமூகத்தின் தேவைகளோடு தங்களை ஈடுபடுத்திக் கொண்டு புரட்சியாளர்களாக ஆகலாம் என்பதாகும்.
எங்களின் அனுபவத்தில் ஒருவர் ஒரே சமயத்தில் மதநம்பிக்கையாளராகவும் புரட்சியாளராகவும் ஆகலாம் என்பதாகும்.”இந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்ட ஃப்ரெல் பெட்டோவின் கேள்விக்கு தோழர் பிடல் காஸ்ட்ரோ, மத நம்பிக்கையாளர்கள் கம்யூனிஸ்ட் ஆகமுடியும் என்றும், இந்த இரண்டு கூட்டாளிகளும் சேர்ந்து உலகை சுரண்டலிலிருந்து விடுவிக்க முடியும் என்றும் விளக்கினார்.
சுரண்டலுக்கும் ஏகாதிபத்தியத்திற்கும் எதிரான போராட்டத்திற்கு முன் வருகிறவர்களைப் பொறுத்தவரை அவர்கள் மதநம்பிக்கை உள்ளவர்களா, இல்லாதவர்களா என்ற கேள்வி முக்கியமல்ல என்பதை பிடல் காஸ்ட்ரோ தெளிவுப்படுத்தினார். மார்க்சியத்தை அடிப்படையாகக் கொண்டே லெனினும் பிடல் காஸ்ட்ரோவும் அத்தகைய கண்ணோட்டத்தை முன்வைத்தனர்.
ஆனால், மதத்தைக்குறித்த மார்க்சின் கண்ணோட்டத்தை, ‘மதம் மனிதனுக்கு அபினி’ என்ற ஒரு வாசகத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு, பொதுவாக அது மதத்தை எதிர்ப்பதாக முன்வைக்கிறார்கள். மதத்தைப் பற்றிய மார்க்ஸின் கண்ணோட்டத்தை எதிர்மறையாகவே பலரும்அணுகுகிறார்கள் என்றும், அதில் தெளிவாகத் தெரியும் நல்ல அம்சங்களைக் காணாததுபோல் நடிக்கிறார்கள் என்றும் ஹரோல்டு ஸின் தெளிவாக்கியிருக்கிறார்.
அதுமட்டுமல்ல, ‘மனிதனைப் படைத்தது மதம் அல்ல; மனிதனே மதத்தைப் படைத்தான்’ என்ற ஹெகலின்தத்துவ விமர்சனத்தைக் குறிப்பிடுகிற மார்க்ஸ், மதம் என்பது இதயமில்லாத உலகின் இதயம் என்றும், ஆத்மா இல்லாத உலகின் ஆத்மா என்றும், ஒடுக்கப்படுவோரின் பெருமூச்சு என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இதன் தொடர்ச்சியாகவே ‘மதம் என்பது மனிதனுக்கு அபினி’ என்ற வாசகத்தை மார்க்ஸ் சேர்க்கிறார். Opium of the people என்ற சொற்றொடரைப் பயன்படுத்துகிறார்.
கவலையை ஒழிப்பதாக மதம் எவ்வாறு செயல்படுகிறது என்று மார்க்ஸ் விளக்குகிறார். மதம்தற்காலிக நிம்மதியைத் தருகிறது. வாழ்க்கையின் யதார்த்தங்கள் முகத்தை வந்து தாக்கும்போது நிம்மதி காணாமல் போகும். மதத்தைச் சிருஷ்டிப்பது அத்தகைய சூழல்கள்தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நிலவுகிற அனைத்தும் விதிப்படிதான் என்ற உணர்வை ஏற்படுத்தும் மதம் உருவாக்குகிற பொதுபுத்தியை விமர்சிக்கிறபோதே மதநம்பிக்கையில் ஈடுபட மனிதனை நிர்ப்பந்திக்கிற சூழல் முக்கியமானது என்றும், இதன் வேரைப் பற்றி ஆராயாமல் செய்யப்படுகிற மதம் மீதான எத்தகைய விமர்சனமும் அறிவியல்பூர்வமானது அல்ல என்றும் மார்க்ஸ் பல கட்டங்களிலும் தெளிவாக்கியிருக்கிறார்.
மார்க்சியம் இயந்திரகதியிலான உலகவியல் வாதமோ, நாத்திகவாதமோ அல்ல. உலகவியலே முதன்மையானது என்று பார்க்கும் போதே அந்தக் கருத்தை அங்கீகரிப்பதற்கும், அதை நோக்கி இட்டுச் செல்வதற்கும் இயலுகிற செல்வாக்கைப் புரிந்து கொள்ளவும் வேண்டும். ஒரு கருத்தை மக்கள் ஏற்றுக்கொண்டால் அது பௌதீக சக்தியாக மாறும்என்றும் மார்க்ஸ் தெளிவாக்கியிருக்கிறார். மார்க்சியமும் ஒரு கருத்து ஆகும்.
மதம், நடப்பில் உள்ளதைப் பாதுகாப்பதற்கான கருவியாக மாறுவதையே மார்க்ஸ் வலுவான விமர்சனத்திற்கு உள்ளாக்கியுள்ளார். ஆனால், மத நம்பிக்கையாளர்களான மக்கள் அந்த நம்பிக்கைகளில் ஆறுதல் தேடும் யதார்த்தத்தை அங்கீகரிக்கிற மார்க்சியம், மதத்தை ஒதுக்கித் தள்ளவில்லை. மார்க்சியம் என்பது மதநம்பிக்கையாளர்களுக்கும் மதநம்பிக்கை இல்லாதவர்களுக்குமிடையேயான மோதலின் தத்துவம் அல்ல. மார்க்சியம், வர்க்கப் போராட்டத்தின் கலையும் விஞ்ஞானமும் ஆகும். சுரண்டப்படுகிற வர்க்கத்தில் மிகப் பெரும்பான்மை மக்கள் மதநம்பிக்கையாளர்கள்தான்.
மதவாதத்திற்கு எதிரான போராட்டம்
இந்தியாவில் எந்தவொரு குடிமகனுக்கும் அவரவர்க்கு இஷ்டப்பட்ட மதநம்பிக்கையைப் பின்பற்றுவதற்கு அரசியலமைப்புச் சட்டம் உறுதி வழங்குகிறது. இந்த உரிமைக்கு ஆதரவாகவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிற்கிறது. மார்க்சிஸ்ட் கட்சி மக்கள் ஜனநாயகப் புரட்சிக்காகப் பாடுபடுகிற கட்சியாகும்.
மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டத்தில் கூறப்பட்டுள்ள மக்கள் ஜனநாயக அரசின் திட்டத்தில் மதநம்பிக்கைக்கும் வழிபாட்டுக்கும் உள்ள உரிமை உறுதிப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு குடிமகனும்-ஆணோ, பெண்ணோ தங்களுக்கு விருப்பமுள்ள மதநம்பிக்கையைப் பின்பற்றி வாழ்வதற்கான உரிமையை உறுதி செய்பவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்.
அதேசமயம், மதநம்பிக்கையும் மதவாதமும் ஒன்றல்ல. அவை இருவிதமானவை.
மதத்தின் அரசியல் நடவடிக்கைதான் மதவாதம். இந்துமக்களின் மதநம்பிக்கையை மதவாத நலனுக்குப் பயன்படுத்தவே இந்துத்துவம் முயற்சி செய்கிறது.
இந்துத்துவம் என்பது இந்தியக் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக உள்ள சிந்தனை அல்ல; இந்துத்துவம் என்பது சவர்க்காரின் உருவாக்கமாகும்.
பழங்காலத் தத்துவத்தில் கடவுள் மறுப்புவாதம் கூட வலுவான நிலையில் இருந்தது. கிறிஸ்தவத்தையும் இஸ்லாமையும் கம்யூனிஸ்ட்டுகளையும் இந்துத்துவம் எதிரிகளாக அறிவிக்கிறது.
மகாத்மா காந்தியைக் கூட ஏற்றுக்கொள்ள முடியாத சகிப்பின்மையைக் கொண்டது இந்துத்துவம்.
உண்மையில், இந்துத்துவத்தை எதிர்த்துத் தோல்வியுறச் செய்ய வேண்டியது சரியான மதநம்பிக்கையாளர்களின் கடமையும்கூட. மத நம்பிக்கையாளர்களின் நம்பிக்கையையும் வழிபாட்டுச் சுதந்திரத்தையும் மதவாதிகளிடமிருந்து விடுவித்தாக வேண்டும். இதற்கு உதவியாக மதச்சார்பற்ற நிலைக்குப் போராடுகிற காலத்தில் நாம் வாழ்கிறோம்.
ஆனால், தங்களின் மதவாதத்தை, மத நம்பிக்கை என்று இந்து மதவாதக்கும்பல்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சிக்கு வந்தால் வழிபாட்டுச்சுதந்திரம் இல்லாமல் போகும் என்கிற பிரச்சார வேலையும் நடைபெறுகிறது. உலகில் பொதுவாக கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எதிராக எதிரிகள் நடத்துகிற பிரச்சார வேலை இது.
1957 ஏப்ரல் 5இல் கேரளத்தில் இ.எம்.எஸ். அமைச்சரவை அதிகாரத்திற்கு வந்த அன்று முதல் கடவுள்மறுப்புவாதம் வளர்க்கப்படுகிறது என்றும், வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்படும் என்றும் அவதூறுப் பிரச்சாரம் செய்தார்கள். அதற்குப் பிறகு இன்று ஆறாவது இடதுசாரி அரசு கேரளத்தில் ஆட்சி செய்கிறது.
இந்த அரசுகள் எதுவுமே மத நம்பிக்கையைப் பலவீனப்படுத்துகிற நடவடிக்கை எதுவும் மேற்கொண்டதில்லை.
கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணி அரசுகளின் காலத்தில் தேவஸ்வம் போர்டுகளும், வக்ஃப் போர்டுகளும் அதனதன் நம்பிக்கைச் சமூகத்தின் சரியானநலன்களைப் பாதுகாக்கிற முறையிலேயே செயல்பட்டிருக்கின்றன.
சிதைந்து போயிருந்த மலபார் பகுதியைச் சேர்ந்த கோவில்களை தேவஸ்வம் போர்டுக்குக் கீழ் கொண்டுவந்து அவற்றைச் சீர்படுத்தி, அர்ச்சகர் முதலான அனைத்து கோவில் ஊழியர்களுக்கும் கௌரவமான சம்பளம் உறுதி செய்தது இடதுசாரி அரசுதான்.
சபரிமலை மண்டலக் காலத்தில் செய்ய வேண்டிய வசதிகளை மதிப்பீடு செய்வதற்காகக் கம்யூனிஸ்ட் முதலமைச்சர் பினராயி விஜயன் சபரிமலைக்கு வருகை தந்ததும் அப்போது அங்கு நடைமுறையில் இருந்த ஆச்சாரங்களுக்கு ஏற்பதான்.
நம்பிக்கைப் பிரச்சனையை வெறும் சாமர்த்தியத்தின், செயல்நுட்பத்தின் பேரில் அணுகுவதற்கு இந்த அரசுகள் முயற்சி செய்யவில்லை.
சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இடது ஜனநாயக முன்னணி அரசு சமர்ப்பித்த சத்தியவாக்கு மூலமே கூட இந்தக் கண்ணோட்டத்தை அனுசரித்தே இருந்தது.பாலினச் சமத்துவம் விஷயத்தில் தங்களின் நிலைபாட்டை உயர்த்திப் பிடிக்கும் போதே, மதநம்பிக்கைப் பிரச்சனை என்பதால் அத்தகைய விஷயங்களில் பாண்டித்தியம் உள்ளவர்கள் உறுப்பினர்களாக உள்ள அமைப்பின் கருத்தையும் பரிசீலிக்க வேண்டியுள்ளது. இந்த அணுகுமுறையின் தொடர்ச்சிதான்.
பெண்களை சபரிமலைக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவில்லை என்று கட்சி பகிரங்கமாக அறிவித்தது. மதநம்பிக்கையின் ஒரு பகுதியான ஆச்சாரங்கள் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டதுதான் என்ற சபரிமலை வழக்கின் தீர்ப்பை நிறைவேற்ற வேண்டிய அரசியல் சட்டரீதியான பொறுப்பை அரசு மேற்கொள்ளவும் செய்கிறது. மனிதர்களைச் சமத்துவமாகக் காணாத எல்லா ஆச்சாரங்களும் கட்டமைக்கப்பட்டவைதான் என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பு கூறுகிறது.
எல்லாக் காலங்களிலும் தவறான வியாக்யானங்கள் மூலம் ஆணை மையமாகக் கொண்டுள்ள சமூகம் பெண்களின் உரிமைகளை மறுத்து விடுகிறது என்றும் உச்சநீதிமன்றம் கூறுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடதுசாரிக்கும் வாக்களிப்பவர்களில் மிகப் பெரும்பாலானவர்களும் மதநம்பிக்கை உள்ளவர்கள்தான். அவர்களின் நம்பிக்கையைப் பாதுகாக்கிற அணுகுமுறையைத்தான் இடதுசாரி அரசு பின்பற்றுகிறது.
மதவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் சரியான நிலைபாட்டைப் பின்பற்றுகிற மதநம்பிக்கைச் சமூகத்தில் கருத்துக் குழப்பம் உண்டாக்க சிலர் முயற்சி செய்கிறார்கள். எல்லா மதப்பிரிவைச் சேர்ந்தவர்களின் நம்பிக்கையைப் பாதுகாப்பதற்கு அரசியல் சட்டத்தையும் சட்ட அமைப்பையும் பாதுகாப்பது தவிர்க்க முடியாத தேவையாகும்.
மனிதனுக்கும் தெய்வத்திற்குமிடையிலான முற்றிலும் ஏற்கத்தக்க விஷயம்தான் மதநம்பிக்கை என்று உச்சநீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்டஅமர்வு தேர்தல் சட்டங்கள் சம்பந்தமான வழக்கில் தெளிவாக்கியது. மதநம்பிக்கை என்பது ஒருவரின் தனிப்பட்டவிஷயமென்றும், அரசு இதைப் பரிசீலிக்க வேண்டும்என்றும் உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் தெளிவாக்கியிருக்கிறது.
இது எதையும் வாசிக்காதவர்கள்தான் சபரிமலை ஏறியவர்கள் மதநம்பிக்கையாளர்களா என்பதை மாநில அரசு பரிசோதிக்க வேண்டுமென்று மற்றவர்களை நிந்திக்கும் விதத்தில் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். மதநம்பிக்கையை தங்களின் குறுகிய அரசியல் நோக்கத்திற்குப் பயன்படுத்துகிறவர்கள் நடத்துகிற பொய்ப் பிரச்சாரங்களை அம்பலப்படுத்த வேண்டியது மதநம்பிக்கைச் சமூகத்திற்கும் அவசியமானதாகும்.
இதன் மூலம் மட்டுமே எல்லோருக்கும் அவரவர் நம்பிக்கையை அனுசரித்து வாழ்வதற்கான உரிமையையும் மதச்சார்பின்மையையும் பாதுகாக்க முடியும்.
- தேசாபிமானியிலிருந்து தமிழில் : தி.வரதராசன்
நன்றி - தீக்கதிர் 21.02.2019
No comments:
Post a Comment