Saturday, February 16, 2019

வீரர்கள் மரணம். இப்போது கேட்காமல் வேறெப்போது?





ஜம்மு காஷ்மீர் தாக்குதலில் புலனாய்வு தோல்வி இருக்கிறது என்பதை அம்மாநில ஆளுனரே ஒப்புக் கொண்ட பின்பு அதை நேற்றைய பதிவாக எழுதினேன்.

ஒரு வாட்ஸப் குழுவில் கடுமையான விவாதம்.

போரில் உயிர் நீத்த வீரர்களின் சவப்பெட்டிகளே வந்து சேரும் முன் அரசியலாக்காதீர்கள் என்றது  அந்த குரல்.

முக நூலிலும் இது போல ஏராளமான கருத்துக்கள்.

நடந்த தாக்குதல்கள் என்பது கொடூரமானது. எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களின் மரணம் என்பது துயரமானது, அவர்களின் குடும்பங்களின் சோகத்தை நாமும் பகிர்ந்து கொள்கிறோம்.

அவர்களின் மரணத்திற்கு,
அவர்கள் மீது நடந்த தாக்குதலுக்கு
யார் காரணம்?

முதல் குற்றவாளி

நிச்சயமாக தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்பு “ஜெய்ஷ் இ முகமது”

அவர்களை தண்டிக்க வேண்டும், வேரரறுக்க வேண்டும். தீவிரவாதம் எந்த வடிவில் எந்த போர்வையில் வந்தாலும் அனுமதிக்கக் கூடாது.

இவர்கள் மட்டும்தான் குற்றவாளிகளா?

இந்திய குற்றவியல் சட்டம், குற்றத்தை நிகழ்த்தியவர்களை விட குற்றம் செய்ய தூண்டியவர்களைத்தான் அதிகமாக தண்டிக்கிறது.

குற்றம் நிகழப் போகிறது என்று தெரிந்தும் அதை தடுக்க வேண்டிய பொறுப்பில் உள்ளவர்களே அலட்சியமாக அந்த குற்றம் நடத்த அனுமதிப்பது என்பது எவ்வளவு மோசமான ஒன்று!

குற்றத்தை நிகழ்த்தியவர்கள் மீது வரும் கோபத்தை விட குற்றம் நிகழ அனுமதித்தவர்கள் மீது இன்னும் அதிகமான கோபம் வர வேண்டாமா?

இங்கேதான் காவிகள் புகுந்து விளையாடுகிறார்கள்.

உணர்ச்சிகளை அவர்கள் தூண்டி விட்டு அதிலிருந்து அரசியல் ஆதாயம் அடைய அடித்தளம் அமைக்கும் வேளையில்

சில உண்மைகளை சிலர் பகிர்ந்து கொள்ள முன் வருகிற போது

கூச்சலிட்டு தேச பக்த போர்வையில் அந்த உண்மைகளை புதைக்க முயல்கிறார்கள். காவிகளால் மூளைச் சலவை செய்யப்பட்ட பல அப்பாவிகளும் அந்த சூழ்ச்சிக்கு இரையாகி

“இந்த நேரத்தில் இதையெல்லாம் பேசலாமா?” என்று வினவுகிறார்கள்.

இந்த நேரத்தில் பேசாமல் வேறெப்போது பேசுவது?

இந்த தேசத்தின் எல்லையைப் பாதுகாப்பதற்காக உயிர் நீத்த வீரர்களின் சடலங்களைப் புதைக்கும் போது அரசுப் பொறுப்பில் உள்ளவர்களின் அலட்சியத்தையும் அந்த அலட்சியத்திற்கான உள்நோக்கத்தையும் சேர்த்தே புதைத்து விட முடியுமா என்ன?

உணர்வுகள் மேலோங்கும்போது அறிவு மங்கி விடும் என்பது மிகவும் சரியாக பொருந்துகிறது.

உளவுத்துறை தோல்வியடைந்துள்ளது என்று ஆளுனர் சொல்கிறார்.
எங்கோ ஒரு தவறு நடந்துள்ளது என்று சி.ஆர்.பி.ஃஎப் பின் செய்தி தொடர்பாளர் கூறுகிறார்.

ஆனால் இங்கே நடந்துள்ளது உளவுத்துறையின் தோல்வி என்றோ எங்கோ நடந்த தவறு என்றோ சுருக்கி விட முடியாது என்பதைத்தான் ஆவணங்கள் சொல்கிறது.



IED (improvised Explosive Devise) பயன்படுத்தி தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்புள்ளதாக தகவல் வந்துள்ளது என்று ஜம்மு காஷ்மீர் போலீஸின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் எச்சரித்துள்ளார்.

அந்த எச்சரிக்கையை உதாசீனம் செய்து நாற்பதுக்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழக்கக் காரணமாக இருந்தது யார்?

தகவல் தெரிந்தும் வீரர்களை மரணப் படுகுழியில் தள்ளியது யார்?

இந்த அலட்சியத்திற்கு அரசியல் உள் நோக்கம் கிடையாதா?

இந்த கேள்விகளை இப்போது கேட்காமல் வேறெப்போது கேட்பது?

கலவரங்கள் தொடர்ந்தால் எங்கள் வெற்றி உறுதியாகும் என்று முசாபர்நகர் கலவரப் பின்னணியில் அமித் ஷா கூறியதை மறக்க இயலுமா?

உத்தர பிரதேச மாநில தேர்தலுக்கு முன்பாக கான்பூரில் ரயில் விபத்து நிகழ்ந்த போது எல்லைக்கு அப்பால் உள்ளவர்கள் தீட்டிய சதி என்று மோடி ஒவ்வொரு கூட்டத்தில் பேசியதையும் அந்த விபத்து காலாவதி ஆன பழுது பட்ட தண்டவாளங்களால் உருவானது என்ற உண்மை, மொட்டைச்சாமியார் முதல்வரான பின்பே வெளியானது என்பதை மறந்து விட முடியுமா?

குஜராத்தில் மோடியின் செல்வாக்கு குறைந்த நேரத்தில் எல்லாம் அவரது உயிருக்கு ஆபத்து என்று கதை கட்டி போலி எண்கவுன்டர்கள் மூலம் அப்பாவிகளை தீர்த்துக்கட்டிய உத்தமர் அமித் ஷா என்பதைத்தான் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியுமா?

மோடியோ, அமித் ஷா வோ மகாத்மா காந்தி போல, ஜவஹர்லால் நேரு லால் பகதூர் சாஸ்திரி போல நேர்மையாளர்கள் (அவர்களின் அரசியல் குறித்து மாற்றுக் கருத்து உண்டு. ஆனால் அவர்கள் நேர்மையானவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது)  என்றால் இந்த கேள்விகளுக்கான தேவை எழுந்திருக்காது.

பதவிக்காக எந்த அளவிற்கும் கீழிறங்கக் கூடியவர்கள் என்பதால்

இப்போது கேட்காமல் வேறெப்போது கேட்பது?


2 comments:

  1. dont politicise the death of martyrs. Instead of condemning the country which carried out the
    cowardly act we should not find fault with our agencies and we should give a fitting reply to our enemies which our indian army is capable of,

    ReplyDelete
    Replies
    1. "விடிய, விடிய கதை கேட்டு, சீதைக்கு ராமன் சித்தப்பா என்றது போல"

      மறுபடியும் ஒரு முறை முழுசா படிங்க, அடுத்து எழுதிய பதிவுகளையும் ப்டிங்க

      Delete