Sunday, February 3, 2019

மோடியின் ஏப்பச்சத்தம் கேட்டதா?

தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத்தலைவர் தோழர் கே.சுவாமிநாதன் எழுதி தீக்கதிர் நாளிதழில்  இன்று வெளியான கட்டுரையின் அடுத்த பகுதி.


ஏப்ப சத்தம் கேட்கிறதே!


எஸ்.சி, எஸ்.டி துணைத் திட்டங்களுக்கு முறையே 35 சதவீதம், 28 சதவீதம் பட்ஜெட் ஒதுக்கீட்டில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்புகள் வந்துள்ளன. இது மேலோட்டமாக பார்க்கும் போது ஏதோ மத்திய அரசுக்கு புது பரிவு வந்திருக்கிறதோ என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. 

ஆனால் எஸ்.சி, எஸ்.டி துணைத் திட்டங்களுக்கான வழிகாட்டல்கள் என்ன? ஒதுக்கப்பட்டுள்ள தொகை எவ்வளவு? என்று பார்த்தால் அதிர்ச்சியே மிஞ்சும். இப்போது பட்ஜெட்டில் திட்ட செலவுகள், திட்டமில்லாத செலவுகள் என பிரிக்கப்படுவதில்லை. எனவே திட்ட செலவுகளில் 15 சதவீதம் எஸ்.சி துணைத் திட்டத்திற்கும், ஏழரை சதவீதம் எஸ்.டி துணைத் திட்டத்திற்கும் என்கிற பழைய வழிகாட்டல்களை மாற்ற வேண்டி வந்தது. 

ஜாதவ் குழு அமைக்கப்பட்டு அது மொத்த பட்ஜெட் செலவினத்தில் முறையே 4.63 சதவீதம்,2.32 சதவீதம் மேற்கண்ட திட்டங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டுமென்று பரிந்துரைத்தது. 

கணக்கு போட்டு பாருங்கள்! இந்த 2019-20 பட்ஜெட்டில் மொத்த செலவினம் ரூ.27.84 லட்சம் கோடி. 

ஜாதவ் குழு பரிந்துரைகள் படி எஸ்.சி துணைத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட வேண்டிய தொகை ரூ. 1,28,892 கோடிகள். ஆனால் பட்ஜெட் தந்திருப்பதோ ரூ. 76801 கோடிகள். ஸ்வாகா ஆகியிருப்பது ரூ.52,091 கோடிகள். 

எஸ்.டி. துணைத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட வேண்டிய தொகை ரூ. 64400 கோடிகள். ஒதுக்கப்பட்டிருப்பது ரூ. 50086 கோடிகள். பறிக்கப்பட்டிருப்பது ரூ. 14314 கோடிகள். 

இது மட்டுமல்ல. இவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் போட்ட முதல் பட்ஜெட்டில் இருந்த எஸ்.சி துணைத் திட்ட ஒதுக்கீட்டை 39 சதவீதம் குறைத்தார்கள். ரூ. 50548 கோடிகளில் இருந்து ரூ. 30851 கோடிகளாக... 

மூன்றாவது பட்ஜெட்டில்தான் மீண்டும் பழைய ரூ.50,000 கோடியை ஒதுக்கீடு தொட்டது. இது ஐந்தாவது பட்ஜெட். 

தேர்தல் நெருங்குகிறது. 35 சதவீத உயர்வு என ஏமாற்றுகிறார்கள்.

No comments:

Post a Comment