Wednesday, February 20, 2019

சிவாஜி - கோட்சேக்கள் மறைக்கும் உண்மைகள்



சத்ரபதி சிவாஜி குறித்த மிக முக்கியமான கட்டுரை இது. நேற்றைய தீக்கதிர் நாளிதழில் வெளியான இக்கட்டுரை காவிகளின் பல கட்டுக்கதைகளை தகர்க்கிறது. அவசியம் முழுமையாக படியுங்கள்.

வாழ்த்துக்கள் தோழர் ஜீவகுமார்




சிவாஜி - ஒரு மறுவாசிப்பு--வெ.ஜீவகுமார்

உமது மூலப்பத்திரம் பிழையானது, கோட்சே


அந்த பழக்கூடை சிறையில் சோதிக்கப்பட்டு இருந்தால் அவர் தலை துண்டாக்கப்பட்டிருக்கும். சட்டையோடு இரும்பு கவசம் அணிந்தமையால் அவர் தப்பித்தார். இல்லாவிடில் கட்டிப்பிடிப்பதுபோல் அவர் கழுத்து நெரிக்கப்பட்டிருக்கும். புலி நகம் இல்லாவிடில் அவரின் உயிர் சேதாரமாகி இருக்கும். ஒரு வேளை அவர்கள் பார்த்திருந்தால் பன்ஹாலா கோட்டையின் சிறு துவாரமே சிவாஜிக்கு மயானமாகி இருக்கும். சத்ரபதி சிவாஜியின் பராக்கிரமத்தை, பேராற்றலை நாங்கள் வியந்துள்ளோம். எனினும் எங்களின் நெற்றிக்கண் அவரை சந்தேகித்துக் கொண்டே இருந்தது. காந்தியை வெறித்தனமாக சுட்டுக்கொன்ற கோட்சே தம் நீதிமன்ற வாக்குமூலத்தில் பின்வருமாறு கூறியிருந்தான். “சத்ரபதி சிவாஜி மகாராஜா நடத்திய வீர போர்தான் இந்தியாவில் முஸ்லிம் கொடுங்கோன்மையை முதலில் தடுத்து நிறுத்தி இறுதியாக ஒழித்துக் கட்டியது.... சிவாஜியின் இந்து கொடியான பகவாஜெண்டாதான் இந்தியாவை முஸ்லிம் ஆதிக்கத்திலிருந்து விடுவித்தது....” மேலும் சிவபவானி என்ற பாடல் தொகுப்பை கோட்சே மேற்கோள் காட்டி இருந்தான். “சிவாஜி மட்டும் இல்லாதிருந்தால் நாடு முழுமையும் இஸ்லாமிற்கு மதமாற்றம் செய்யப்பட்டிருக்கும்.” எனவே தலைப்பாகை கட்டிய சிவாஜி எங்களுக்கு உறுத்தலாகவே தெரிந்தார். 

சிவாஜி யார் பக்கம்? 

தோன்றிய காலம் தொட்டு இன்று வரை பொய்யும் புளுகுமாய் நச்சுப்பிரச்சாரம் செய்யும் இந்துத்துவா சக்திகள் கூற்றை ஆராய்ந்தால் சந்தேகப்படவேண்டியது சிவாஜியை அல்ல, கோட்சேயைதான் என்ற உண்மை எங்களுக்கு பொறிதட்டியது. 

சத்ரபதியின் முடிசூட்டலை மூர்க்கமாக எதிர்த்தது முகலாயர் அல்லர். இந்துத்துவா சக்திகளே. சிவாஜி பிறந்தது உயர் சாதி அல்ல. சிவாஜி விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். காடு, மலைகள்,நதி, அருவி கடந்து புரவிகள் மீதேறி சிவாஜி நாடுகளை வென்றிருக்கலாம். ஜெகம் சிவாஜியை புகழலாம். எனினும் பிறப்பால் சிவாஜி சத்திரியன் கூட அல்ல. வாள் முனையில் முகலாயர்கள் கூட இங்கு வேந்தர் ஆகலாம். கீழ்சாதி சிவாஜியை நாங்கள் அங்கீகரிக்க மாட்டோம் என இந்துத்துவா நிலை எடுத்தது. மராட்டியத்தின் ஒரு இந்து பிராமணர் கூட சிவாஜிக்கு முடி சூட்ட மறுத்தனர். காசியிலிருந்து காகப்பட்டர் என்ற அந்தணரை சிவாஜி இறக்குமதி செய்தார். ஏராளபொருள் செலவு. மூன்று மாதத்திற்கு 400 பிராமணர்கள் யாகம் வளர்த்தனர். யாக தீயின் புகை ஆகாய மேகங்களை துளைத்தது. கமண்டலத்திலிருந்து ஊற்றப்பட்ட நன்னாரி சர்பத்தின் புனித நீரால் சிவாஜி நீராட்டப்பட்டார். சிவாஜியின் மார்பில் முப்புரி நூல் அணிவிக்கப்பட்டது. மன்னர் சிவாஜி மாமன்னர் ஆனார்.

உள்ளபடியே சிவாஜி இஸ்லாமியரின் ஜென்ம பகைவரா? கோட்சேயின் கூற்றில் உண்மை உண்டா?

சிவாஜி சைன்யத்தின் பீரங்கி படை தளபதி ஒரு இஸ்லாமியர்.சிவாஜியின் படை வரிசையில் துப்பாக்கிபிரிவின் கேப்டன், கப்பல் படைப்பிரிவின் தலைவர் முசல்மான்களே ஆவர். சிவாஜியின் காலாட்படை தளபதி நூர்கான் பெக் ஐக் என்வரும் முஸ்லிமே. இவர்கள்தனிநபர்கள் அல்லர். இவர்களின் தலைமையின் கீழ் ஆயிரக்கணக்கான சிப்பாய்களை இயங்க சிவாஜி பணித்திருந்தார். சிவாஜியின் குருக்களில் ஒருவரான யாகுத் பாபா என்பவரும் ஆக்ரா சிறையில் சிவாஜிக்காகதம் உயிர் ஈந்த மாதாரி மெஹ்டர் என்ற மெய்க்காப்பாளரும் இஸ்லாமியரே. சிவாஜியின் தந்தை ஷாஹாஜி முஸ்லிம் ஆட்சியாளரிடம் பணியாற்றிய சர்தார் ஆவார். கோட்சே பூசணிக்காயை சோற்றில் மறைக்கவில்லை. பருத்த யானையையே சோற்றில் மறைக்கிறார். அதே சமயம் சிவாஜி இந்து மன்னர்களால் தொடர்ந்து இடையூறு செய்யப்பட்டார். ஒளரங்கசீப்பிற்காக சிவாஜியை கைது செய்ய படை திரட்டிய ராஜா ஜெய்சிங் ஒரு இந்து. சிவாஜியை கைது செய்தோரில் சுகன்சிங் பண்டேலா, ராய்சிங் கசோடியா உள்ளிட்டோர் இந்துக்களே. 

நீ பிராமணனும் அல்ல அரசனுக்குரிய சாதியை சேர்ந்தவனும் அல்ல. பெயரில் வேண்டுமானால் நீ அரசன். உண்மையான அதிகாரம் படைத்த படேல் நானே என்று சிவாஜியை காறி உமிழ்ந்த உயர் சாதியினரும் இந்துக்களே. சிவாஜி போர்க்களத்திலே உருவாக்கிய சில நெறிமுறைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. எந்த வீரனும் பெண்ணுக்கும் குரானுக்கும்மசூதிக்கும் தீ வைக்கக் கூடாது என அவர் அறிவுறுத்தினார். 

மதம் குறித்த சிவாஜியின் அணுகுமுறை தெளிவானது ஆகும். ஒளரங்கசீப்பிற்கு அவர் எழுதிய கடிதத்தில் இதனை குறிப்பிடுகிறார். “இறைவனின் முன்னால் இந்துக்களும், முஸ்லிம்களும் ஒருவரே. முஸ்லிம்கள் மசூதிகளில் தொழுகை நடத்தும்போது, அவர்கள் உண்மை பகவானை வழிபடுகிறார்கள். அதுபோல்இந்துகளும் கூடக் கோவிலில் மணியை ஒலிக்கும்போது அதையே செய்கிறார்கள். எனவே ஒரு மதத்தை ஒடுக்குவது என்பது இறைவனோடு பகைமை கொள்வதைப் போன்றதாகும்” என்று கூறி அக்பர், ஷாஜகான் போல் மதச்சார்பின்மையும் சகிப்புத்தன்மையும் வேண்டும்என்று எழுதுகிறார். உள்ளபடியே ஒளரங்கசீப்பின் ஆட்சித்துவக்கத்தில் இருந்த இந்து அதிகாரிகளின் எண்ணிக்கை 21.6 சதவீதம் பின்னர் அவர் ஆட்சியிலே இது 31.6 சதவீதமாக உயர்ந்தது.'

அகமதாபாத்திலுள்ளஜெகநாதர் கோவிலுக்கு ஒளரங்கசீப் 200 கிராமங்களை ஈந்தார். மதுரா, காசி இந்து கோவில்களுக்கு பண நன்கொடை செய்தார். எனினும் அடிப்படையில் பதவி வெறியில் தம் தந்தையையும் உடன் பிறந்தோரையுமே ஒளரங்கசீப் சிறைக்குள் தள்ளினார். தொன்மை இந்திய வரலாற்றில் பலருக்கு இருந்தது மதபக்தி அல்ல. ராஜ பக்திதான். தம் அரசர்களுக்கே அவர்கள் கூடுதல் விசுவாசம் காட்டினர். ஜஹாங்கீர், ஷாஜகான் ஆகிய முகலாய அரசர்களின் அன்னையர் இந்துக்களே என்று விவேகானந்தர் எழுதுகிறார். மதவெறிமூட்டி ஆயத கலவரம் செய்வதே கோட்சேயின் முயற்சி ஆகும். 

கோட்சே தம் வாக்குமூலத்தில் ராணாபிரதாப், குருகோவிந்த் ஆகிய இந்து அரசர்களை குறிப்பிடுகிறார். ராணா பிரதாபின் பீரங்கி படைதளபதி ஒரு இஸ்லாமியர் ஆவார். குரு கோவிந்த் சிங் ராணுவத்தில் சீக்கியரோடு 6000 இஸ்லாமிய படைவீரர்களும் இருந்தனர். கோட்சே தன் வாக்குமூலத்தில் கட்டவிழ்த்து விட்டதையெல்லாம் உண்மையின் தேர்க்கால்கள் தூள்தூளாக நொறுக்குகின்றன.

 குறிப்பாக அரசர்களில் சிவாஜிக்கு இருந்த நற்பெயரை போணி செய்வதற்காக கோட்சே சிவாஜி பெயரை இழுக்கிறார். சிவாஜியின் காலத்தில்தான் ஒரு அரசர் உழவர்களோடு நெருக்கமானது நடந்தது. விவசாயிகள் மகுடத்தில் பதித்த வைரமணி சிவாஜி என சூத்திரன் மகனை ஜோதிராவ் பூலே பாடுகிறேன் என சிவாஜியை ஜோதிராவ் போற்றினார். வறட்சி காலங்களில் விவசாயிகளுக்கு வரிவிலக்கு, ஆடு, மாடுகள் விதைகள், தானியங்கள் தருவது, உழத்தக்க நிலம் முழுவதையும் சாகுபடி செய்வது, சாகுபடி கடன்களை நான்கு அல்லதுஐந்து ஆண்டுகளில் திருப்பி தருவது, கட்டாயப்படுத்தாத வரி வசூல் என்பது சிவாஜியின் விவசாயத்துறை சீர்திருத்தங்களாக அமைந்தன. சிப்பாயோ படைவீரரோ ஒரு இலையையோ அல்லது கிளையையோ பறித்து விவசாயிகளுக்கு பளுவை தரக்கூடாது என்று சிவாஜி கூறினார்.பெண்கள் தாய்மை ஸ்தானத்தில் உயர்த்தப்பட்டதும் சிவாஜியின் அணுகுமுறையாக இருந்தது. 1678ல் சிவாஜியின் தளபதி சுகுஜி கெய்க்வாட் சாவித்திரி தேசாய் என்றபெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார்.

சுகுஜியின்கண்களை குருடாக்கி சிவாஜி ஆயுள் தண்டனை வழங்கினார். ஒரு ஏழை விவசாயியின் இளம் பெண்ணை ஒரு கிராமத்தின் செல்வாக்குமிக்க படேல் பட்டபகலில் பாலியல் வன்கொடுமை செய்தான். அந்த கிராமமே அந்த பெண்ணுக்காக அழுதது. படேலின் கைகால்களை வெட்டி எறியும்படி சிவாஜி தீர்ப்பு வழங்கினார். 

சிவாஜி 19 வயதாகி இருந்தபோது 18 வயதுள்ள ஒரு இஸ்லாமிய பெண்ணை போரின் வெற்றியின் காணிக்கையாக படைவீரர்கள் அவர் முன் நிறுத்தினர். சிவாஜி அந்த பெண்ணை தம் தாயுடன் ஒப்பிட்டார். எந்த பெண்ணையும் நீங்கள் துன்புறுத்தக் கூடாது என தம் படைக்கு கட்டளையிட்டார். தம்ஆட்சியில் எந்த பெண்ணும் ஆசை நாயகி ஆக்கப்படக் கூடாது என சிவாஜி வைராக்கியமாக இருந்தார். இத்தகுஅறநெறிகள்தாம் சிவாஜியை உயர்த்தி நிறுத்தின. இதேபோல் பெர்சிய மொழிக்கு பதில் தம் ஆட்சி நிர்வாகமொழியாக தாய் மொழியான மராத்தி மொழியை கொணர்ந்தார். சிவாஜி ஆட்சியை காப்பாற்ற விவசாயிகள் உள்ளிட்ட அடித்தட்டு மக்களிலிருந்து அனைவரும்தம் உயிரையும் தியாகம் செய்ய தயாராக நின்றனர். எம் சடலத்தின் மீது தலைவனின் கண்ணீர் துளிகள்விழும் என்றால் அத்தகைய களச்சாவை நான் யாசித்தேனும் பெறுவேன் என்ற வரிகளின் முதல் நிரூபணம் சிவாஜியின் ஆட்சி ஆகும். 

பன்ஹாலா கோட்டையில் சிவாஜியை கைது செய்ய மிகப்பெரிய ராணுவமும் போர்தளவாடங்களும் நிறுத்தப் பட்டிருந்தன. சித்தி ஜோகர், பாசல்கான் ஆகியோர் சிவாஜியை எப்படியும்பிடிப்பது என்று வேட்டைக்காரர்கள் போல் நின்றனர். அப்போது சிவா என்ற நாவிதர் தன்னை சிவாஜியாக பாவ்லா காட்டி போய்க் கொண்டிருந்தார். சிவாஜி என்றுநினைத்தே படையினர் சிவாவை தாக்கினர். புன்னகையோடு சிவா மரணத்தை ஆரத் தழுவினார். சிவாஜியை தப்புவிக்க போக்குக்காட்டி பலர் உயிர்கொடை தந்த நிகழ்வுகள் சிவாஜியின் சரிதத்தில் ஏராளம் உண்டு. சிவாஜின் மீதான பொது மக்களின் இந்த ஈர்ப்பினை வெள்ளையர்களும் பயன்படுத்தினர்.


இரண்டாம் உலகயுத்தத்திற்கு சிவாஜியின் படத்தோடு வீரம் கொப்பளிக்கும் போஸ்டர்களை அவர்கள் ஒட்டினர். மகாயுத்தத்தில் பங்கேற்கும்படி இந்தியரை அறைகூவி அழைத்தனர். அவர்களை விட மோசடிதனத்தை ஆர்எஸ்எஸ்-சின் கோட்சே கூட்டம் செய்தது. சிவாஜியின் பெயரைக் கூறி போலி பத்திரங்களை தயாரித்தது. காந்தி கொலை வழக்கில் கோட்சேயின் வாக்குமூலம் சிவாஜியை போர்ஜரி செய்துள்ளது. வேட்டை பெரிதென்றே வெறிநாயை கைப்பிடித்தே காட்டில் புகலாமோ, நாதுராம் கோட்சே

3 comments:

  1. சிவாஜி ஒரு கேவலமான மிருகம் என்று வினவு தளத்தில் பிடித்த நினைவு உண்டு

    ReplyDelete
    Replies
    1. அவங்க அண்ட சராசர புரட்சியாளர்கள். என்ன வேண்டுமானாலும் எழுதுவாங்க

      Delete
  2. வாழ்த்துகள் தோழர். அருமையான தகவல்கள் கொண்ட கட்டுரைப் பகிர்வுக்கு நன்றியுடன்

    ReplyDelete