Friday, February 1, 2019

1050 பக்க பரவச அனுபவம்




















1050 பக்கங்கள் கொண்ட காவல் கோட்டம் நாவலைத்தான் சொல்கிறேன். சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்ட சமயத்தில் வாங்கினாலும் புத்தகத்தின் கனம் வாசிப்பை துவக்குவதற்கான தயக்கத்தை கொடுத்துக் கொண்டே இருந்தது. 

ஆனந்த விகடனில் தொடராக வேள்பாரி படிக்கத் தொடங்கி பரம்பில் மூழ்கிய பின்பு  மீண்டும் ஒரு முறை நூல் வடிவில் படிக்கும் சுகானுபவத்தைப் பெற முன்பதிவு செய்த போதுதான் இனியும் காவல் கோட்டத்தை படிக்காமல் தள்ளிப் போடக்கூடாது என்று முடிவு செய்து படிக்கத் தொடங்கினேன்.

ஜனவரி மாதத்தில் மட்டும் ஐந்து நீண்ட பயணங்கள். அவை அத்தனையும் பயணத்தின் சுமை கொஞ்சமும் தெரியாமல் காவல் கோட்ட  வாசிப்பிலேயே கடந்தது. வேலூர் மாவட்டத்துக்கு வந்த டி.டி.வி.தினகரனுக்கு வைக்கப்பட்டிருந்த பேனர்களைக் கூட கவனிக்காத அளவிற்கு மூழ்கிப் போயிருந்தேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

மாலிக்கபூரின் தாக்குதலில் தொடங்கும் மதுரையின் வரலாறு வெள்ளையரின் வெறி கொண்ட தாக்குதலில் முடிகிறது.

கிருஷ்ணதேவ ராயரின் செல்லப்பிள்ளை விஸ்வநாத நாயக்கர் காலம் தொடங்கி நாயக்கர் ஆட்சிக்காலம் முழுதையும் விவரிப்பது நாவலின் ஒரு பகுதி என்றால் திருமலை நாயக்கரின் அரண்மனையில் கன்னம் வைத்து நுழைந்து அரசு முத்திரையை களவாடிக் கொண்டு போய் மதுரை நகரை காவல் செய்யும் உரிமையைப் பெற்ற தாதனூர் கள்வர்கள் பற்றியது நாவலின் அடுத்தப் பகுதி

தாதனூர் கள்வர்களின் காவல் உரிமையை பறித்து அவர்களை அடிமைகளாக மாற்ற வெள்ளையர்கள் பின்பற்றிய சூழ்ச்சிகளும் சதிகளும் ரத்தம் சொட்ட சொட்ட விவரிக்கப்பட்டுள்ளது இறுதிப் பகுதி.

1050 பக்க நாவலின் கதையை முழுமையாக விவரிப்பது, விமர்சிப்பது என்பது என்னால் இயலாத காரியம்.

என்னை கவர்ந்த சில அம்சங்களைப் பற்றியும் எனக்கு தோன்றிய சில விமர்சங்களை முன்வைப்பதோடும் முடித்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

அடிப்படையில் இது ஒரே கதை என்று சொல்ல முடியாது. வரலாற்றில் நடந்த  எண்ணற்ற கதைகள் ஒரு மாலை போல தொடர்ச்சியாக பிணைக்கப்பட்டுள்ளது.  
கள்வர்களே காவலர்களாகவும் இருக்கிற முரண்பாடுகள்தான் நாவலின் பிரதான முடிச்சு.

மிக அற்புதமான தமிழ்நடையை நாவல் முழுதும் காண முடிந்தது. நாவலின் மிகப் பெரிய பலமாக தமிழ் மொழியை கையாண்ட விதத்தைக் கூறுவேன். வேள்பாரியில் இதை விட பல மடங்கு உச்சத்தில் உள்ளது என்பது வேறு விஷயம்.

நாவலில் வரும் ஆண்கள் பலசாலிகளாக, பராக்கிரமசாலிகளாக இருந்தாலும் கொஞ்சமாகவே வரும் பெண்கள் அவர்களை விட இன்னும் வலிமையாக அழுத்தமானவர்களாக படைக்கப்பட்டுள்ளார்கள். கங்காதேவி, மங்கம்மா, மீனாட்சி, கழுவாயி, குஞ்சரத்தமாள், காத்தாயி, அங்கம்மா, பின்னியக்காள், மேரி ஆகியோர் எண்ண முடியாத அளவு ஆண் பாத்திரங்களுக்கு மத்தியில் பிரகாசமாக ஒளிர்கிறார்கள்.

தாதனூர்காரர்களின் களவு நுட்பங்கள் சுவாரஸ்யமாகவே இருக்கிறது. ஆனால் அவர்கள் ஊருக்கே வந்து அவர்கள் அறியாமல் களவு செய்த செங்கன் கதை அவற்றையெல்லாம் விட சுவாரஸ்யம்.

மதுரைக் கோட்டையை இடிக்க வெள்ளையர்கள் கையாண்ட தந்திரத்தையும் தங்களின் சுய நலனுக்காக செல்வந்தர்கள் எதையும் செய்வார்கள் என்பதும் நன்றாகவே சித்தரிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் காவலர்கள் மதுரை காவலை தாதனூர்காரர்களிடமிருந்து பறிக்க செய்யும் முயற்சிகள் படிக்கும் நமக்கு பதட்டத்தை அளித்தது என்பதையும் அவர்கள் அதை முறியடித்த போது மகிழ்ச்சியை அளித்தது என்பதையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

தாது வருடப் பஞ்ச காலத்தையும் கொள்ளை நோய், பிளேக் நோய்க் காலங்களையும் பற்றி படிக்கையில் அந்த மக்களின் துயரம் நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.

தேவதாசியான குஞ்சரத்தம்மாள் தனது பெரும் செல்வம் அனைத்தையும் தாது வருடப் பஞ்சத்தின் போது ஏழை மக்களுக்கு உணவிட செலவழித்து கடைசியில் ஓட்டாண்டியாகி இறந்து போனார் என்ற பகுதி உண்மையிலேயே உருக்கம். அவரது நினைவை மூடி மறைக்க செல்வந்தர்கள் முயன்றார்கள் என்பது இன்றும் நிகழும் யதார்த்தம்.

முல்லைப் பெரியார் அணை கட்டுகையில் நேர்ந்த துயரங்கள், இலங்கை தேயிலைத் தோட்டங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட தொழிலாளர்களின் இன்னல்கள் ஆகியவையும் உருக்கமாகவே எழுதப்பட்டுள்ளது.

ஆச்சாரத்தை பின்பற்றிய அக்ரஹாரங்கள் அதிகாரத்தின் ருசி அறிந்ததும் மாறிய நிகழ்வும் சரியாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது.

பல ஆவணங்கள் அப்படியே பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து பல விமர்சனங்களை படித்துள்ளேன். சம்பவங்கள், உரையாடல்கள் என்று கதையை இழுத்துச் செல்வதற்கு மாறாக காலத்தை கடத்தும் உத்தியாகவே நான் பார்க்கிறேன்.

நாவல் குறித்து சில விமர்சனங்கள் எனக்கும் இருக்கத்தான் செய்கிறது.

திருமலை நாயக்கர் காலத்தில் நிகழ்ந்த மதுரை வீரன் கதை நாவலில் தொடப்படாதது ஏன் என்று தெரியவில்லை.

நாவலில் பல்வேறு இன மக்கள் வந்து செல்கிறார்கள். ஆனால் ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் பற்றி எதுவுமே எழுதப்படவில்லை.

களவு பற்றி விரிவாக எழுதப்பட்ட அளவிற்கு காவல் பற்றி எழுதப்படவில்லை.

நாவலின் முக்கியமான கதாபாத்திரமான சின்னானின் வாழ்க்கை ரகசியம் என்னவென்றே சொல்லப்படவில்லை.

குற்றப்பரம்பரைச் சட்டத்தின் கீழே தாதனூர் கள்வர்கள் ஒடுக்கப் படுகின்றனர். அந்த சட்டம் வந்த கதையையும் கொஞ்சம் சொல்லி இருக்கலாம்.

சாகித்ய அகாடமி காலத்தில் வந்த விமர்சனங்களை படித்துள்ளேன். இப்போது அவை எதையும் படிக்கக் கூடாது என்று தெளிவாக இருந்தேன்.

ஆனாலும் முன்பு படித்தவற்றில் உருப்படியான ஒரு விமர்சனத்தை நானும் வழி மொழிகிறேன்.

இந்த நாவல் உருவாக்கத்திற்கு உதவிகரமாக இருந்தவர்கள், மூல நூல்கள் ஆகியவை பற்றிய பட்டியலை அளித்திருக்கத்தான் வேண்டும், அதனால் ஒரு பத்து பக்கங்கள் அதிகரித்திருந்தாலும் கூட.

ஆனால் இருநூறு பக்கம் கூட படிக்க முடியவில்லை. ஒரே இழுவை போன்றவற்றையெல்லாம் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எந்த ஒரு பக்கத்திலும் கூட இனி படிக்க முடியாது என்ற உணர்வு ஏற்படவே இல்லை.

அத்தனை பக்கங்களையும் நான் ரசித்துத்தான் படித்தேன். ஒரு கணம் கூட சோர்வென்பதே இல்லை. அந்த விமர்சனங்களுக்கு உள்நோக்கம் உண்டா என்ற ஆராய்ச்சி இப்போது அவசியம் இல்லை. ஆனால் ஒரு போலிப் பெயரில் வலைப்பக்கம் தொடங்கி எழுதிய ஒரு மனிதனுக்குள் ஏதோ வன்மம் ஒளிந்து கொண்டிருந்தது நிச்சயம். வன்மமும் வக்கிரமும் இல்லாதவர்கள் நிச்சயம் ஃபேக் ஐ.டி க்குள் தங்களை மறைத்துக் கொள்ள மாட்டார்கள் என்பது என் சொந்த அனுபவம்.

சாகித்ய அகாடமி விருதுக்கு முழுமையான தகுதி உள்ள நூல் என்று கண்டிப்பாக சொல்வேன். கோவி.மணிசேகரனின் குற்றாலக் குறிஞ்சி படித்து நொந்து போன கதை நினைவுக்கு வந்தது.

பக்கங்கள் அதிகம் என்ற விமர்சனத்தையும் படித்துள்ளேன். பக்கங்களை சுருக்க வேண்டும் என்பதற்காக சுருக்கி அது குறைப் பிரசவமான இரண்டு நூல்கள் (ஒரே எழுத்தாளருடையது) பற்றி விரைவில் எழுதுவேன்.

அற்புதமான மொழி நடையில் கடுமையான உழைப்பின் வாயிலாக அளித்த 1050 பக்க பரவச வாசிப்பு அனுபவம் அளித்த ஒரு நாவலை  தோழர் சு.வெங்கடேசனுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். கடந்த வருடம் எங்கள் பண்ருட்டி மாநாட்டு கலை இரவுக்கு வருவதாக ஒப்புக் கொண்டு கடைசி நிமிடம் வராமல் ரத்து செய்த வருத்தமும் கோபமும் இருந்தாலும் கூட.

காவல் கோட்டத்தை விட இன்னும் சிறந்த, அற்புதமான நூல் ‘வேள்பாரி”

அதற்கு பல விருதுகள் கிடைக்கவும் தோழர் சு.வெ விற்கு வாழ்த்துக்கள்




4 comments:

  1. /ஆனால் ஒரு போலிப் பெயரில் வலைப்பக்கம் தொடங்கி எழுதிய ஒரு மனிதனுக்குள் ஏதோ வன்மம் ஒளிந்து கொண்டிருந்தது நிச்சயம்./

    யார் அந்த போலி? தெரியப்படுயத்தலாமா?

    ReplyDelete
    Replies
    1. பெத்தானியாபுரம் முருகானந்தம் என்ற போலிப்பெயரில் ஒரு வலைப்பக்கம் வசைபாட மட்டுமே இயக்கப்பட்டது

      Delete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. பரவாயில்லை. உனக்கும் மூளை இருக்கத்தான் செய்கிறது. எந்த பதிவில் உனது வக்கிரத்தை வெளிப்படுத்த வேண்டுமோ, அதில் மௌனமாக இருந்து விட்டு மற்ற பதிவுகளில் வந்து குரைத்துள்ளாய். ஆனாலும் உன் வெறி நீ ஒரு முட்டாள் என்பதையும் நிரூபித்து விட்டது.

      நீயே உன் முற்போக்கு முகமுடியை கழட்டி ஒரு கடைந்தெடுத்த பொம்பளைப் பொறுக்கி என்பதை வெளிப்படுத்திக் கொள்ளும் நாள் விரைவில் வரும்.

      Delete