Friday, June 22, 2018

அர்ஜெண்டினா பிரேசிலை வென்ற அந்த இரவில் . . .

கதவை உடை, கால்பந்து பார்ப்போம்



தொண்ணூறாம்   ஆண்டு  உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்ற நேரம் நான் எல்.ஐ.சி நெய்வேலி கிளையில் பணியாற்றி வந்தேன். அப்போது எல்.ஐ.சி ஊழியர் குடியிருப்பில் நான்கு பேர் வீட்டில் மட்டுமே தொலைக்காட்சிப் பெட்டிகள் இருந்தது. ஒருவர் கிளை மேலாளர்.  அவர் வீட்டிற்குச் சென்று டி.வி   பார்ப்பதில்   சில சங்கடங்கள் உண்டு. என்னதான் நல்ல அதிகாரியாக இருந்தால் கூட அவர்களோடு பழகுவதில் ஒரு வரையறையும் கட்டுப்பாடும் தேவை என்ற பாரம்பரியம் எங்கள் நெய்வேலிக் கிளைக்கு உண்டு.  

அடுத்து ஒரு மூத்த பெண் தோழர் வீடு. அவர்களை தொந்தரவு செய்வது சரியாக இருக்காது. இன்னொரு தோழர் அப்போதுதான் திருமணமானவர். அங்கே செல்வது அவ்வளவு நாகரிகமாக இருக்காது.

எஞ்சியது என் வீடு மட்டும்தான். அப்போது என் பெற்றோரும் டெல்லி, ஹரித்வார், காசி என வெளியூர் சென்றிருந்தால் விளையாட்டு  ரசிகர்களுக்கு என் வீடுதான் சரணாலயம். தோழர்களோடு   நேரத்தை செலவிடுவதை விட ஒரு கிளைச்செயலாளருக்கும் வேறு என்ன மகிழ்ச்சி இருக்க முடியும்!

அன்று பிரேசிலுக்கும் அர்ஜென்டினாவுக்கும் இடையே இரண்டாம் சுற்றுப்போட்டி. அனைவருக்குமே மாரடோனாதான் நாயகன். ஒன்பது மணிக்குப் போட்டி. அனைவரும் வேகவேகமாக சாப்பிட்டு போட்டியைப் பார்க்க தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

அந்த ஊழியர் குடியிருப்புக்களுக்கு ஆட்டோமேடிக் பூட்டுக்களை அமைத்திருந்தார்கள். சாவியை கையில் வைத்துக் கொள்ளாமல் கதவு மூடிக்கொன்டால் உள்ளே ஆட்கள் இருந்தால் தப்பிக்கலாம். இல்லையென்றால் சிக்கல்தான். காற்று வேகமாக அடித்தால் கதவு மூடிக்கொள்ளும் அபாயம் எப்போதும் உண்டு.

எட்டரை மணிக்கு அந்த விபரீதம் என் வீட்டிலும் நிகழ்ந்தே விட்டது. கதவை திறந்து வைத்து விட்டு யாருடனோ வெளியே நின்று பேசிக் கொண்டிருக்கையில் காற்று அடிக்க கதவு மூடிக்கொண்டது. ஒரு பெரிய குச்சி கொண்டு ஜன்னல் வழியாக சாவியை எடுக்க முயல அது இன்னும் அதிக தூரத்திற்குச்சென்று விட்டது.

பூட்டு ரிப்பேர் செய்பவரை அழைத்து வரலாமா என்ற என் குரல்
எனக்கே கேட்பதற்கு முன்பு எங்கிருந்தோ சுத்தியலும் மற்ற உபகரணங்களும் வந்து சேர்ந்தது.பூட்டு உடைக்கப்பட்டது, கதவும் கூட கொஞ்சம் உடைந்து போனது. எல்லாம் நாளைக்கு சரி செய்து கொள்ளலாம் என்று உள்ளே நுழைந்தார்கள். தொலைக்காட்சியைப் போட்டார்கள். மாரடோனா முகம் திரையில் தோன்றியது. விசில் அடிக்காத குறை மட்டும்தான். மற்றபடி எந்த  ஆரவாரத்திற்கும் குறைவில்லை.

அந்தப்போட்டி விறுவிறுப்பாக இருந்ததும் அர்ஜென்டினா ஒரு கோல் அடித்து வெற்றி பெற்றதும் ஒரு சின்ன ஆறுதல். 

( கடைசியில் அந்தக் கதவை சரி செய்ய மூன்று நாட்கள் ஆனது.)

இது ஒரு மீள் பதிவு. தற்போதைய உலகக் கோப்பையில் அர்ஜெண்டினா சொதப்புவதைப் பார்த்து நொந்து போன போது நினைவுக்கு வந்தது . . .

4 comments:

  1. //இது ஒரு மீள் பதிவு. தற்போதைய உலகக் கோப்பையில் அர்ஜெண்டினா சொதப்புவதைப் பார்த்து நொந்து போன போது.....//
    இவர்களுக்கெல்லாம் அப்படி என்னா அர்ஜெண்டினாவுடன் வம்சாவளி உறவு உள்ளது என்பதை புரிச்சுக்கவே முடியவில்லை. அடுத்தவர் தருமி சார் ஒருவர். இவர்களை பார்த்து தான் நான் நொந்து போகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் மாரடானோ உருவாக்கிய பந்தம்தான்

      Delete
    2. உங்க நண்பரும் அர்ஜெண்டினாவின் ரசிகர் தானாம், இன்று செய்தியில் தெரிந்து கொண்டேன் :)
      I knew God was with us - Messi

      Delete
  2. that too hand goal.

    ReplyDelete