தமுஎகச மாநில மாநாட்டில் பேராசியர் அருணன் ஆற்றிய முக்கியமான உரையை நேற்று 24.06.2018 இதழில் வெளியிட்ட தீக்கதிர் நாளிதழுக்கு நன்றி சொல்லி பகிர்ந்து கொண்டுள்ளேன்.
உண்டியல்கள் இல்லாத கோவில்கள் உண்டா?
பேரா. அருணன்
புதுச்சேரி, ஜூன். 23-புதுச்சேரியில் நடைபெற்று வரும் தமுஎகச மாநில மாநாட்டையொட்டி நடை பெற்ற கருத்துரிமைக் கருத்தரங்கத்திற்கு தலைமையேற்று பேராசிரியர் அருணன் பேசியதன் சுருக்கம் வருமாறு:-
கருத்துச் சுதந்திரத்திற்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஆபத்து வந்துள்ளது. ஆனால் சிலருக்கு அந்த கருத்துரிமை பரிபூரணமாக கிடைக்கிறது. ஒரு சிரிப்பு நடிகர் பத்திரிகை துறை பெண்கள் குறித்து கேவலப்படுத்தி பேசினாலோ, கருத்துபோட்டாலோ அவருக்கு பரிபூரண கருத்துரிமை இருக்கிறது. 60 நாட்கள் ஆனாலும் அவரை கைது செய்ய முடிய வில்லை இந்த சிரிப்பு போலீசாரால். ஆனால், பெருமாள் முருகனுக்கு அந்த கருத்துரிமை இல்லை. நாம் கதை எழுதுவ தாக நினைக்கிறோம். சிலர் அதை படு சீரியசாக எடுத்துக் கொள்கின்றனர்.
ஆயுதங்களையோ, ஆயுத உப யோகத்தையோ தடை செய்வார்களோ தெரியவில்லை. புத்தகப் படிப்பை தடை செய்கிறார்கள் என்றால் புத்தகத்தின் முக்கியத்துவத்தை நம்மைவிட நமது எதிரிகள் உணர்ந்து இருக்கிறார்கள். தமுஎகச நீதிமன்றத்தை நாடி கருத்துரிமை யை மீட்டுள்ளது. ஆண்டாளை பாடியதற்காக கவிஞரின் தலைக்கு குறி வைத்தார்கள். தமிழ் நாட்டில்ஒருமை சிந்தனைதான் ஆள வேண்டும் பன்மைச் சிந்தனை ஆளக்கூடாது என்றுமிரட்டல் விடுகின்றனர்.
புதுப்புது யுக்திகளோடு ஆபத்துகள் வந்து கொண்டு உள்ளன. மாற்றுக் கருத்து கொண்டிருந்த பாவத்தினால் சமூகவிரோதி, பயங்கரவாதி, தேசவிரோதி என முத்திரை குத்தப்படுகின்றனர். பாஜகமாநிலத் தலைவர் கூறுகிறார் சமூக ஆர்வலர் போர்வையில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் என்று. தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் பாஜகவினர் சமூக ஆர்வலர் பெயரிலேயே வருகின்றனர். அவர் யாரை மனதில் வைத்துகூறுகிறார் என்று தெரியவில்லை. ஊடகங்களுக்குள் பயங்கரவாதிகள் புகுந்துள்ளனர் என்று மத்திய அமைச்சரே கூறுகிறார்.
எங்களை உண்டியல் குலுக்கிகள் என்றுபாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சொல்கிறார். முதலில் உண்டியல் குலுக்கியவர்கள் கம்யூனிஸ்ட்டுகள் இல்லை. இந்துக் கடவுள்கள்தான். பூசாரி இல்லாத கோயில்கள் கூட உண்டு. உண்டியல் இல்லாத கோயில் உண்டா. கோயில் என்பதுஇல்லாதவர்களுக்கானது, கஷ்டப்படு வர்களுக்கானது. அந்த கோயிலில் உண்டியல் வசூல் செய்து அந்த கோயிலை நடத்துகிறார்கள். அதே பாணியில்தான் ஏழைகளின் இன்னொரு கோயிலாகிய கம்யூனிஸ்ட் கட்சியும் உண்டியல் ஏந்துகிறது. கம்யூனிஸ்ட்டுகளை இழிவு படுத்துவதாக நினைத்துக்கொண்டு இந்து கோயில் களை இழிவுபடுத்தியுள்ளார் தமிழிசை. அந்த அம்மையார் மீது வழக்குபோடப்பட்டிருக்க வேண்டும் தொலைக் காட்சி நிறுவனத்தின் மீது வழக்கு போட்டு கைது செய்யப்போகிறார்கள் என்றால் தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை நடக்கிறதா, இல்லையா?
என்னுடைய நிலத்தை நான் தர மாட்டேன் என்ற சொன்ன பாவத்திற்காக விவசாயி கைது செய்யப்படுகிறார். சேலம் மாவட்டத்தில் 8 என்ற எண்ணை கணக்குவாத்தியார் கூட உச்சரிக்கப் பயப்படு கிறார்கள் என தகவல் வந்துள்ளது. எங்களை பொறுத்தவரை கலைகளும், இலக்கியங்களும் மக்களுக்கு ஆனந்தத்தையும் தரவேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறோம். அதே நேரத்தில் அதோடு ஒரு முற்போக்குக் கருத்தையும் எடுத்து செல்லவேண்டும் என்று துடிக்கிறோம்.
தொலைவில் குறிபார்த்து சுட்டுத் தள்ளும் ஸ்னைபர் துப்பாக்கி உள்ளது என சுட்டுத்தள்ளுகிறார்கள். எங்களிடத்தில் தொலைதூரத்தில் அல்ல; தலைமுறைகளை கடந்து பாயும்ஏவுகணைகளாக படைப்புகள் உள்ளன.அதை உங்களால் தடுக்க முடியுமா?. கருத்துரிமை பிச்சை அல்ல; சுதந்திரப்போராட்ட வேள்வியில் எங்கள் முன்னோர்கள் போராடிப் பெற்றுத்த உரிமை. அந்த உரிமையை விட்டுத்தர மாட்டோம். எங்கள் உயிரே போனாலும் எங்கள் சவம் பேசும்.இவ்வாறு அருணன் பேசினார்.
கம்பன் கலையரங்கத்தில் முற்போக்கு எழுத்தாளர்கள் கவுரி லங்கேஷ், கல்புர்கி ஆகியோரின் நினைவு வளாகத்தில் கவிஞர் எச்.ஜி. ரசூல் நினைவரங்கில் நடைபெற்ற இந்த கருத்தரங்கிற்கு பேரா. அருணன் தலைமை வகித்தார். புதுச்சேரி முதலமைச்சர் வி.நாராயணசாமி வாழ்த்துரை வழங்கினார். கவிஞர் வைரமுத்து, எழுத்தாளர் பெருமாள் முருகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஹேமா நன்றி கூறினார். மாநில துணைத் தலைவர் அ.குமரேசன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். முன்னதாக பல்வேறு கலைக்குழுக்களின் சார்பில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
தமுஎகசவின் புதிய பொறுப்பாளர்கள்
கௌரவத்தலைவர் தோழர் ச.தமிழ்ச்செல்வன்,
தலைவர் தோழர் சு.வெங்கடேசன்,
பொதுச்செயலாளர் தோழர் ஆதவன் தீட்சண்யா,
பொருளாளர் தோழர் சு.ராமச்சந்திரன்
ஆகியோருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
No comments:
Post a Comment