Monday, June 25, 2018

கால்களும் இப்போது உறுதியாக



 கொல்கத்தா பயணம் குறித்த பதிவுகளின் நிறைவுப் பகுதி இது.



கொல்கத்தா  நகரத்திற்குள்ளாக ஆட்டோ சேவை என்பது கிடையாது. மெட்ரோ  அல்லது  டாக்ஸி அல்லது டவுன் பஸ் ஆகிய சேவைகளை மட்டுமே  நம்பிட வேண்டும். எல்லா இடங்களுக்கும்  மெட்ரோ சேவை கிடையாது. டவுன் பஸ்ஸில் பெங்காலியில் மட்டுமே எழுதியிருப்பதால்  அதிலும் சிரமம் உண்டு.  டாக்ஸியிலும் ஒரு பிரச்சினை இருந்தது. வழக்கமான மஞ்சள் கலர் டாக்ஸியாக இருந்தாலும் சரி, ஊபர் போன்ற டாக்ஸியாக இருந்தாலும் சரி ஒரு கிலோ மீட்டருக்கு குறைவான தூரத்திற்கு வர மறுத்து விடுகிறார்கள். நடையை மட்டுமே நம்ப வேண்டிய கட்டாயம் உள்ளது.

நடப்பது நல்லதுதானே என்று நீங்கள் கேட்கலாம்.

நல்லதுதான்.

ஆனால் சரியாக எட்டு வருடங்களுக்கு முன்பு 2010 மாதம் ஏப்ரல் மாதத்தில் ஒரு விபத்து. நாங்கள் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது இன்னொரு இரு சக்கர வாகனம் இருட்டில் மோதி நானும் மனைவியும் கீழே விழுந்து விட்டோம். கால் துண்டாகி விட்டதோ என்ற அச்சம் சாலையிலிருந்து எழுந்து கொள்ள முடியாமல் தவித்த போது ஏற்பட்டது. ஆனால் முழங்கால் ஜவ்வு கிழிந்திருந்தது.

அதற்கான சிகிச்சை என்று எதுவும் கிடையாது என்றும் கிரேப் பேண்டேஜ் அணிந்து கொள்ளுமாறு சொல்லி விட்டார்கள்.  இரண்டு மாதம் ஓய்வெடுத்துக் கொள்ளுமாறும் சொல்லி இருந்தார்கள். ஒரு மாதத்திற்கு மேல் வீட்டில் இருக்க முடியாமல்   கிரேப் பேண்டேஜோடு வேட்டி  கட்டிக் கொண்டு  கையில் ஒரு வாக்கரோடு  அலுவலகம் வந்து விட்டேன்.

ஒரு ஆறு மாதம் வரை இந்த நிலை தொடர்ந்தது.  வழக்கமான எந்த பணியோ பயணமோ பாதிக்கவில்லை என்றாலும் நீண்ட நேரம் நிற்பதையும் நடப்பதையும் தவிர்க்குமாறு மருத்துவர்கள் அறிவுரை கூறினார்கள்.  விபத்துக்குள்ளான ஒரு வருடம் வரை எங்கள் கோட்டத்தில் நடக்கும் கிளைக் கூட்டங்களில் மட்டும் உட்கார்ந்து கொண்டு  பேசுவேன்.  நின்று கொண்டு பேசுவதில் இருக்கும் வேகம் உட்கார்ந்து கொண்டு பேசுவதில் கிடையாது என்பதால் அதை நிறுத்தி விட்டு வழக்கம் போல நின்று கொண்டே பேசத் தொடங்கி விட்டேன்.

விபத்து நடந்த நான்கு மாதங்களுக்குள்ளேயே  கோழிக்கோடு நகரில் நடைபெற்ற தென் மண்டல மாநாடு நடைபெற்றது. வேட்டி, கிரேப் பேண்டேஜ் சகிதமாகத்தான் அம்மாநாட்டில் கலந்து கொண்டேன். மாநாட்டுப் பேரணியில் மட்டும்தான் நடந்து செல்லவில்லை.  பேரணி தொடங்கியவுடன் மாநாட்டு அரங்கிற்கு  ஆட்டோவில் சென்று விட்டேன். 

அதன் பிறகு புதுடெல்லியில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டின் போது பேரணி முக்கால்வாசி தூரம் கடந்த பின்பு கடுமையாக கால் வலி வந்து பிறகு ராம் லீலா மைதானத்திற்கு ஆட்டோவில் சென்று விட்டேன். அதே போல எங்கள் கோட்ட மாநாடுகளின் போதெல்லாம் பேரணியில் முழுமையாக நடந்து சென்றாலும் விருத்தாச்சலம் மாநாட்டின் போதுதான் பேரணியின் போது நரம்பு இழுத்துக் கொண்டு கொஞ்சம் சிக்கலானது.  அறிக்கையை சமர்ப்பித்து பேசும் போதும் பின்னர் தொகுப்புரை வழங்கும் போதும் வலியோடுதான் பேச வேண்டியிருந்தது.

வலது காலில் பிரச்சினை என்பதால் இடது காலுக்கு கூடுதல் அழுத்தம் கொடுப்பதால் அந்த காலில் அவ்வப்போது நரம்பு இழுத்துக் கொண்டு ஓரிரு நிமிடங்களுக்கு உயிர் போகிற அளவிற்கு வலி வரும். இந்த வலியால் நாம் முடங்கக்கூடாது என்பதில் மட்டும் எப்போதும் உறுதியாக இருப்பேன்.

அதனாலோ என்னவோ இந்த நரம்பு இழுக்கிற பிரச்சினை எதுவும் நீண்ட காலமாக வரவில்லை. என்ன நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தால் கொஞ்சமாக வலி வந்து எட்டிப்பார்த்து விட்டு போகும்.

விபத்தின் காரணமாக ஆரம்ப கட்டத்தில் கொஞ்சம் விந்தி நடக்க வேண்டியிருந்தது. அந்த உடல் ஊனத்தை “சகுனி நடை” என்று ஒரு நல்லவர் வர்ணித்தார்.  ஆறு வருடங்களுக்கு முன்பு அமர்ந்து பேசியதை இப்போதும் அமர்ந்து பேசுவதாக முதுகுக்குப் பின்னே இன்னொரு நல்லவர் நக்கலடிப்பதாகவும் காதில் தகவல்கள் வந்தது. இதிலே எனக்கு மகிழ்ச்சிதான். அந்த நல்லவர்கள் பற்றிய என் நிர்ணயிப்பு சரி என்ற மகிழ்ச்சிதான். அந்த நல்லவர்களின் முகமுடிகள் கழண்டு விழுந்து உண்மை முகத்தின் விகாரம் மற்றவர்களுக்கும்  தெரியாமலா போய் விடும்?

எங்கேயோ துவங்கி எங்கேயோ போய் விட்டேன்.

கொல்கத்தா சென்ற முதல் நாளே எங்கள் மண்டல அலுவலகத்திற்கு விருந்தினர் இல்லத்திலிருந்து நடந்துதான் செல்ல வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தூரம் இருக்கும். அன்று இரவு கால்களில் கொஞ்சமாக வலி இருந்தது.

மறு நாள் முந்தைய நாளை விட அதிகமாகவே நடக்க வேண்டியிருந்தது.  எஸ்பிளனேட் மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும். ஆனால் உள்ளே நுழைந்த கூட்டம் பின்னுக்கு தள்ளி விட அடுத்த ஸ்டேஷனில்தான் இறங்க முடிந்தது. அங்கிருந்து ஒரு நீண்ட நடை.

மறுநாளும் நல்ல அலைச்சல்.  எஸ்பிளனேட் பகுதியை சுற்றி சுற்றி வந்தேன். கிளம்புவதற்கு முதல் நாள் விக்டோரியா மெமோரியல் சென்றேன். நான் டாக்ஸியில் சென்று இறங்கிய நுழை வாயிலுக்கு மறு பக்கத்திலிருந்த நுழைவாயில் சென்றால்தான் கட்டிடத்திற்குள் செல்ல முடியும். அதுவே நல்ல தூரம்தான். பின்பு அந்த அருங்காட்சியகத்திலும் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேல் இருந்திருப்பேன். மாடிக்குச் செல்லும் படிகள் எல்லாம் செங்குத்தாக இருக்கும்.

அங்கிருந்து வெளியே வந்த நான் வந்த நுழைவாயிலை நோக்கி செல்லும் போது மணியைப் பார்க்கையில் பனிரெண்டு மணி. ஒரு அரை மணி நேரம் அங்கேயே பொழுதைக் கழித்தால் ஹோட்டலுக்கு போய் மதிய உணவை முடித்து விட்டு விருந்தினர் இல்லம் செல்ல சரியாக இருக்கும் என்று ஒரு பெஞ்சைத்தேடி அமர்ந்த போதுதான் ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது.

“நான்கு நாட்களாக நடந்து கொண்டே இருக்கிறோம். இப்போதும் நீண்ட தூரம் நடந்தோம். நீண்ட நேரம் நின்று கொண்டே இருந்தோம், ஆனாலும் கால்களில் கொஞ்சம் கூட வலியே இல்லை “

இது  மனதிற்குள் உற்சாகத்தையும் உறுதியையும் அளித்தது.

கொல்கத்தா சென்று திரும்பிய பிறகு இந்த வருடத்து ஆண்டுப் பேரவைக் கூட்டங்கள் தொடங்கி விட்டது. விழுப்புரம், திருக்கோயிலூர், புதுச்சேரி, திண்டிவனம், குடியாத்தம், நெய்வேலி என்று இதுவரை ஆறு கூட்டங்கள் முடிந்து விட்டது.  ஒவ்வொன்றிலும் குறைந்தபட்சம் நாற்பத்தி ஐந்து நிமிடங்களிலிருந்து ஒரு மணி நேரம் வரை பேசியுள்ளேன். வழக்கமாக லைட்டாக எட்டிப்பார்க்கும் கால் வலி இந்த முறை பயந்து பதுங்கி விட்டது.

மன உறுதி என்பது எப்போதும் உண்டு. அதனை யாரும் என்ன செய்தாலும் அசைக்க முடியாது. இப்போது கால்களும் உறுதியாகி விட்டது.

கொல்கத்தா பயணம் என்றென்றும் மனதில் நிற்க இதுவும் ஒரு காரணம்.

எதிர்கால வாழ்க்கைப் பயணம் மேலும் மகிழ்ச்சியாய், தெம்பாய் தொடர வேறென்ன வேண்டும்?

பி.கு : என் கால்களின் வலிமையை எனக்கு உணர்த்தி நம்பிக்கையூட்டிய விக்டோரியா மெமோரியலில் எடுத்த படம் மேலே உள்ளது. 




2 comments: