Wednesday, June 6, 2018

ரிலீஸுக்கு முன்பே கேட்ட பாட்டு – சரிதாவின் உபயத்தில்



இளையராஜாவின் இனிய பாடல்கள் தொகுப்பை தயார் செய்து கொண்டிருந்த போது  இந்த வேதம் நீ, இனிய நாதம் நீ பாடலையும் இணைக்க நினைத்தேன்.

சில நினைவுகள் காரணமாக தனி பதிவாகவே எழுதி விடலாம் என்று தோன்றியது.

ஆமாம். இந்த பாடல் இடம் பெற்ற “கோயில் புறா” திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுதுமே எங்கள் ஊரான திருக்காட்டுப்பள்ளியில்தான் நடைபெற்றது. திருவையாறு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திரு புலவர் முருகையன் கதாநாயகி சரிதாவின் தந்தையாக நடித்திருப்பார். பதினோராவது படிக்கையில் அரைப்பரிட்சை நேரத்தில்தான் படப்பிடிப்பு நடந்தது.

காலையில் பரிட்சை முடிந்ததும் மதியம் அவசரம் அவசரமாக ஷூட்டிங் நடக்கும் தீயாடியப்பர் கோயிலுக்கு ஓடி விடுவேன். ஆசிரியராக பணிபுரிந்த என் அக்கா மாலை வீட்டுக்கு வருவத்ற்கு முன்பு நல்ல பிள்ளையாக வீட்டுக்கு வந்து விடுவேன். தேர்வில்லாத  சனிக்கிழமைகளில் அதிகாரபூர்வமாகவே அனுமதி வாங்கி ஷூட்டிங் பார்த்ததும் உண்டு.

படத்தின் இயக்குனரான கே.விஜயனும் அவர் மகன் சுந்தர்.கே.விஜயன் ஆகியோர், கதாநாயகன் ஒரு தலை ராகம் சங்கர் அணிந்து கொள்ளூம் கார்ட்ராய் ஜீன்ஸே அந்த கிராமத்து வாலிபர்களுக்கு (என்னையும் சேர்த்துதான்) புதிதான ஒன்றாக  இருந்தது.

வினு சக்ரவர்த்தி சம்பந்தப்பட்ட ஒரு காட்சியை டக்கென்று ஒரே டேக்கில் எடுத்து விட்டார்கள். அதே போன்றதொரு காட்சியை அவர் மகனாக நடித்த நடிகரை வைத்து எடுக்கையில் அவர் இயக்குனரின் பொறுமையை மட்டுமல்ல எங்கள் பொறுமையையும் சேர்த்தே சோதித்தார்.

அந்த அறிமுக நடிகர் அந்நாளைய சூப்பர் ஸ்டார் பி.யு.சின்னப்பாவின் மகன் ராஜாபாதர். எங்களுக்கு பிடிக்காத இயற்பியல் ஆசிரியரும் அசப்பில் அவர் போலவே இருப்பார். அதனால் உடனடியாக அவருக்கு ராஜாபாதர் என்று பெயர் சூட்டி விட்டோம்.

“வேதம் நீ” பாடலும் அக்னீஸ்வரர்(தீயாடியப்பர் என்று தமிழ்ப்படுத்தியும் வைத்திருந்தார்கள்) கோயிலில்தான் எடுக்கப்பட்டது. அம்மன் சன்னதியில் எடுக்கப்பட்டது.  சரிதா வழிபடுவது போல ஒரு ஷாட் எடுத்தார்கள். அடுத்த ஷாட் போகலாம் என்று இயக்குனர் சொல்ல, அதற்கு முன்பாக “முழு பாடலையும் ஒரு தடவை போடுங்க. சூப்பரா இருக்கு”  என்று சரிதா சொல்ல இந்த இனிய பாடலை முதலிலேயே கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. நீண்ட நாட்கள் மனதிற்குள் ஒலித்துக் கொண்டே இருந்தது.

பின் குறிப்பு : விரைவிலேயே அந்த படம் ரிலீஸும் ஆனது. அனேகமாக மற்ற இடங்களில் வெளியாகும் அதே நாளிலேயே திருக்காட்டுப்பள்ளியில் ரிலீஸான முதல் படம் இதுதான். (வழக்கமாக  மொக்கை படமாக இருந்தாலும் கூட குறைந்தபட்சம் ஆறு மாதத்திற்குப் பிறகே அங்கே ரிலீஸாகும்) படம் மொக்கையாக இருந்தாலும் ஊர்ப்பாசத்தினால் பத்து நாட்கள் வரை ஓட்டினார்கள். திருக்காட்டுப்பள்ளியின் அன்றைய ஒரே தியேட்டரான “மாலா தியேட்டர்” உரிமையாளரும் ‘வேதம் நீ” பாட்டில் ஒரு நொடி தோன்றுவது கூட காரணமாக இருந்திருக்கலாம்.

சென்னையில் உள்ள ஒரு சபாவில் வினு சக்ரவர்த்தி நாதஸ்வரம் வாசிப்பது போல ஒரு காட்சி வரும். ஆனால் அது எடுக்கப்பட்டது என்னவோ இதே “மாலா தியேட்டரில்தான்” அப்போது மட்டும் “மாலா தியேட்டரில எடுத்துட்டு மெட்ராஸ்னு கதை விடறாங்க” என்ற கிண்டல் குரல்கள் ஊர்ப்பாசத்தைத் தாண்டியும் வரத்தான் செய்தது.

அந்த சென்னை சபாதான் கீழே உள்ள படத்தில் உள்ளது




6 comments:

  1. நல்ல பதிவு. மிகவும் பிடித்த பாடல். திருக்காட்டுப்பள்ளிக்காகவே மீண்டும் ஒரு முறை சமீபத்தில் பார்த்தேன். நானும் திருக்காட்டுப்பள்ளியில்தான் படித்தேன். சொந்த ஊர் மைக்கேல்பட்டி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி. நான் 1978 முதல் 1982 வரை சிவசாமி அய்யர் பள்ளியில் படிக்கையில் என் நெருங்கிய நண்பன் லூயிஸின் ஊர் மைக்கேல்பட்டிதான். அவனது தந்தை ஒரு வெற்றிலை வியாபாரி. இப்போது தொடர்பு இல்லை. உங்களுக்கு தெரியுமா?

      Delete
    2. லூயிஸை ஞாபகம் இருக்கின்றது. இப்பொழுது என்ன செய்கின்றார் என்று தெரியவில்லை. ஊரை விட்டு வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. நான் சிவசாமி அய்யர் பள்ளியில் 1991 வரை 7 ஆண்டுகள் படித்தேன்.

      Delete
  2. எனக்கும் சொந்த ஊர் திருக்காட்டுப்பள்ளியிலிருந்து இரண்டு மைல் தொலைவில் இருக்கும் கண்டமங்கலம்தான். எங்கள் அப்பா திருக்காட்டுப்பள்ளியிலிருக்கும் சிவசாமி அய்யர் உயர்நிலைப் பள்ளியில் சில காலம் பணியாற்றினார்.

    ReplyDelete
    Replies
    1. அப்படியா? அவர் பெயர் என்ன? நான் படித்த 78 -82 காலகட்டத்தில் பணியாற்றினாரா? என் அக்கா உமா டீச்சர் சில வருடங்களுக்கு முன்புதான் ஓய்வு பெற்றார்

      Delete
    2. கண்டமங்கலம் - நம்ம பக்கத்துக்கு ஊர்தான்....என் வகுப்பில் வெங்கட்ராமன்/வேணுகோபாலன் என்ற இரட்டையர்கள் என்னுடன் படித்தார்கள் கண்டமங்கலத்திலிருந்து

      Delete