சிபிஎம் உண்மை அறியும் குழு குற்றச்சாட்டு
உண்மை அறியும் குழுவின் அறிக்கையை உ.வாசுகி உள்ளிட்ட தலைவர்கள், வழக்கறிஞர்கள் வெளியிட்டனர்.
திருச்சிராப்பள்ளி, ஜூன் 1-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மனிதஉரிமை பாதுகாப்புக்குழு சார்பில் தூத்துக் குடி துப்பாக்கிச் சூடு குறித்த உண்மை அறியும் குழுவின் அறிக்கை வெள்ளியன்று திருச்சியில் வெளியிடப்பட்டது. கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மனித உரிமை பாதுகாப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜி.செல்வா, குழுவின் உறுப்பினர்கள் சுவாமிநாதன், அபிராமன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, வழக்கறிஞர்கள் ரங்கராஜன், லலிதா, திருமூர்த்தி ஆகியோர் அறிக்கையை வெளியிட்டனர்.
பின்னர் உ.வாசுகி நிருபர்களிடம் கூறியதாவது:- ஸ்டெர்லைட் போராட்டம் என்பது கடந்த 22 ஆண்டுகளாக நடைபெறுகிறது. இந்தஆலையின் விரிவாக்கத்திற்கு நிலங்களை வழங்கியதால் தான் மக்கள் இந்த போராட்டத்தை துவக்கினர். போராட்டம் துவங்கிய நாளில் இருந்து 100-வது நாள் வரை மாவட்ட ஆட்சியர் போராட்ட மக்களை சந்திக்கவில்லை என்பது மிகப்பெரிய குற்றச்சாட்டாக உள்ளது. 100-வது நாள் அன்று பேரணியில் இவ்வளவு மக்கள் வரப் போகிறார்கள் எனத் தெரிந்தும் திட்டமிட்டு காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளது. பாதிக்கப்பட்டவர்களும், உயிரிழந்தவர்களின் உறவினர்களும் எங்களிடம் கூறியது இன்னும் எவ்வளவு பெரிய இழப்புகளையும் நாங்கள் சந்திக்கத் தயார்; ஆனால் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பதுதான். இதுதான் மக்களின் ஒருமித்த கருத்தாக இருக்கிறது.
துப்பாக்கிச் சூட்டிற்கு துணை தாசில் தார்கள் உத்தரவிட்டார்கள் என அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பார்க்கும் போது முன்தேதியிட்டு போலியாக ஆவணங்கள் தயாரிக்கப் பட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முன்வைக்கிறோம். மாவட்ட ஆட்சியர், டிஆர்ஓ, பிஏ(ஜெனரல்), சப்-கலெக்டர், தாசில்தார் யாரும் துப்பாக்கிச்சூட்டிற்கு கையெழுத்து போடவில்லை. இவர்களை விட்டு விட்டு துணை தாசில்தாரை கையெழுத்து போட வைப்பது என்பது தயாரிக்கப்பட்ட ஆவணமாக - நடந்த துப்பாக்கிச் சூட்டைநியாயப்படுத்துகிற விசயமாக இருக்கிறது.
தேடுதல் வேட்டை என்ற பெயரில் இரவு நேரங்களில் மின்சாரத்தை நிறுத்தி விட்டுவீடுகளில் புகுந்து இளைஞர்களை இழுத்து செல்லும் நிலைஉள்ளது. மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வியாழன் அதிகாலை 3 மணிக்கு கதவை தட்டி மாணவர் சங்கத்தினர் உள்ளே இருக்கின்றார்களா என விசாரணை நடத்தியுள்ளார்கள். காவல்துறையினர் மக்களை துன்புறுத்துகிற, சித்ரவதை செய்கிற படங்களை பத்திரிகையாளர்கள் எடுத்து விட்டால் பத்திரிகையாளர்கள் மீதும் தாக்குதல்நடக்கிறது.கடந்த 25-ஆம் தேதி சுமங்கலி கல்யாண மண்டபம் அருகில் தீக்கதிர் செய்தியாளர் குமார், செய்தி சேகரிக்கச் சென்றுள்ளார். திருநெல்வேலி எஸ்.பி.அருண்சக்திகுமார் உள்பட போலீஸ் பட்டாளம் அங்கு இருந்துள்ளனர். மண்டபத்தில் தங்கி இருந்த சிலரை கைது செய்ததை குமார் படம் பிடித்துள்ளார். உடனே அவரைத் தாக்கி செல்போனைப் பறித்து, படங்களை அழித்து விட்டு திரும்பி பார்க்காமல் ஓடு என மிரட்டியுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக நடந்த துப்பாக்கிச் சூடு, கலெக்டர், டிஆர்ஓ உள்ளிட்ட செயல்பாடு; இவர்கள் மீது கொலை குற்றம் சாட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை பலியான, காயம் அடைந்த ஒவ்வொருவருக்கும் தகுதியான பொருத்தமான இழப்பீடு வழங்க வேண்டும்; குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை எல்லாம் இணைத்து ஜூன் 4-ம் தேதி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளோம்.
இவ்வாறு உ.வாசுகி கூறினார்.
நன்றி - தீக்கதிர் 02.06.2018
முழுமையான அறிக்கை - அடுத்த பதிவில்
No comments:
Post a Comment