Saturday, June 2, 2018

ரஜனியை படிக்கச் சொல்லுங்க . . .

முந்தைய பதிவின் தொடர்ச்சி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உண்மை அறியும் குழுவின் அறிக்கையினை பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அனில் அகர்வாலின் எடுபிடி மோடி
மோடியின் எடுபிடி எடப்பாடி

இந்த இரண்டு எடுபிடிகள் சொன்னதை அப்படியே கக்கிய திருவாளர் ரஜனிகாந்த் இந்த அறிக்கையை படிக்கட்டும். அப்போதுதான் யார் சமூக விரோதிகள் என்பது தெரியும். 

சமூக விரோதிகளை ஆதரித்த அவரும் ஒரு சமூக விரோதி என்பதும் புரியும்.







தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு உண்மை அறியும் குழு அறிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் 2018 மே 22, 23 தேதிகளில் போலீசாரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு,பாதிக்கப்பட்ட மக்கள், அவர்களது உடமைகளுக்கு ஏற்பட்ட சேதம் உள்ளிட்ட உண்மைகள் அறிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மனித உரிமை பாதுகாப்புக் குழு சார்பாக 2018 மே 27, 28 தேதிகளில் களஆய்வு நடைபெற்றது. ஜி.செல்வா (ஒருங்கிணைப்பாளர், மனித உரிமை பாதுகாப்புக் குழு) தலைமையில், வழக்கறிஞர் ஆர்.திருமூர்த்தி(சென்னை உயர் நீதிமன்றம்), பேராசிரியர் வி.பொன்ராஜ் (திருநெல்வேலி), நகர்மன்ற முன்னாள் தலைவர் ஆர்.மல்லிகா (கோவில்பட்டி),  எஸ்.அரிகிருஷ்ணன் (தென்சென்னை), சு.பேச்சிமுத்து  (தூத்துக்குடி), ஏ. பொன்னுதுரை (ஊடகக் குழு - சிபிஎம், சென்னை)  ஆகியோர் இந்தஆய்வில் ஈடுபட்டனர். 

கள ஆய்வில் சந்திப்பு மற்றும் ஆய்வு செய்யப்பட்ட இடங்கள்

துப்பாக்கிச் சூட்டால் உயிரிழந்த குடும்பத்தினர், துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடங்கள், மக்கள்திரளாக போராட்டத்தில் பங்கெடுத்த திரேஸ்புரம், பாளையங்கோட்டை ரோடு, மடத்தூர், குமரெட்டியாபுரம், அண்ணா நகர், மில்லர்புரம் ஆகிய பகுதிகள், மாவட்டஆட்சியர் அலுவலகம், ஸ்டெர்லைட் ஊழியர்கள் குடியிருப்பு, ஸ்டெர்லைட் ஆலை வாயிலில் கழிவுகள் கொட்டப்பட்ட இடம்; அரசு மருத்துவமனை டீன் உள்ளிட்ட மருத்துவர்கள், பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியம், வழக்கறிஞர் சுப்புமுத்துராமலிங்கம், வாலிபர் - மாணவர் - மாதர் சங்க நிர்வாகிகள், மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருபவர்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்கள், காவல்துறையினரால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள், பிணை மனு விசாரிக்கப்பட்ட நீதிமன்ற அமர்வு, கிறிஸ்தவவாழ்வுரிமை இயக்கத்தைச் சார்ந்த ஆயர்கள், செல்வராசு, சுந்தரமைந்தன் ஆகிய தனி நபர்கள், அமைப்புகள், இடங்கள் இக்கள ஆய்வுக்குழுவினால் விவரங்கள் சேகரிப்பதற்கான தளங்களாக அமைந்தன. 

போராட்டத்திற்கான பின்புலம்

தூத்துக்குடி மாவட்டத்தில் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை கடந்த 22 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. நிறுவனம் தொடங்கப்பட்டது முதல் ஆலைக்கு எதிராக மக்களின் கடும்எதிர்ப்பும் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. மனுக் கொடுத்தல், பொதுக்கூட்டம், கதவடைப்பு, பேருந்துநிறுத்தம், சாலை மறியல், மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு, பேரணி, முற்றுகை, நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பது எனப் பல வகையான இயக்கங்கள் பலதரப்பட்டவர்களால் நடத்தப்பட்டுள்ளன. ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்களின் கடும் அடக்குமுறை, தடியடி, கைது,சித்ரவதை, பழிவாங்கல் எனப் பல வகையான ஒடுக்குமுறைகளை மக்கள் எதிர்கொண்டு வந்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழலுக்கும் மக்களுக்கும் ஏற்பட்ட எண்ணற்ற பாதிப்புகளை ஆதாரத்துடன்அரசுக்கு அளிக்கப்பட்ட போதும், ஆலையை மூடுவதற்கான எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

உச்ச நீதிமன்ற ஆணையின்படி முனைவர் தியாகராஜன் தலைமையிலான கண்காணிப்புக் குழு அளித்த பல ஆய்வு விவரங்கள், ஸ்டெர்லைட் ஆலையால் வெளியேற்றப்படும் கழிவுகள் குறித்து ஏற்படும் பாதிப்புகளை விளக்கி 21.09.2004-ல் வெளியிட்ட அறிக்கைபெரும் அதிர்ச்சியை மக்களிடத்தில் உண்டாக்கியது. ஆனால், அதற்குப் பின்பும் ஆலையின் உற்பத்தியை 70,000 டன்னிலிருந்து 1,00,000 டன்னுக்கு ஸ்டெர்லைட் நிர்வாகம் அதிகரித்துள்ளது. பின்னர் படிப்படியாக நான்கு லட்சம் டன் உற்பத்தியாக எவ்வித விதிமுறைகளையும் பின்பற்றாமல் உயர்த்தப்பட்டது.மேலும் சிலிண்டர் வெடித்து தொழிலாளர்கள் காயம்,கந்தக அமிலக் குழாய் வெடித்து தொழிலாளி உயிரிழப்பு, நச்சுப் புகையால் ஆலையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் அவ்வப்போது மயங்கி விழுதல், குறிப்பாக பெண் தொழிலாளர்களுக்கு கருச்சிதைவு ஏற்படுதல், ஆலையை சுற்றியுள்ள பகுதிகளில் அடிக்கடி மூச்சுத்திணறல் ஏற்படுதல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்பு விளைவுகளை ஏற்படுத்தினாலும், தொடர்ந்து அரசின் உதவியோடு ஆலை விரிவாக்கத்தை ஸ்டெர்லைட் செய்து கொண்டே வந்தது.தேசிய பசுமைத் தீர்ப்பாயம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட நிபந்தனைகள் எதையும் ஆலை நிர்வாகம் மதிக்கவில்லை. மேலும் மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் இந்த ஆலையை மூடக் கோரி ஸ்டெர்லைட்ஆலை எதிர்ப்புக் குழு என்ற பெயரில் தொடர் போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டனர். 

ஆலையின் அருகாமையில் உள்ள குமரெட்டியாபுரம் மக்கள் தொடங்கிய தொடர்போராட்டம் தூத்துக்குடியில் 18-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் எதிரொலித்தது. மிக அமைதியான முறையில்ஆலையை மூடக் கோரி கிராமங்களில் மக்கள் போராட்டங்களை நடத்தி வந்தனர். இப்போராட்டங்களுக்கு ஆதரவாகபல்வேறு கட்சிகள், அமைப்புகள் செயலாற்றி வந்தன. போராட்டத்தின் 100-ஆவது நாளன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிப் பேரணி செல்வதெனஅறிவித்தனர். இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது; மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவு பிறப்பித்து ஆலைக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென கோரியது. அதையடுத்து மாவட்ட நிர்வாகம் ஆலோசித்து பதில் கூற வேண்டுமெனக்கூறி வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்தது. இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரால் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு போராட்டக் குழுவினருக்கு அழைப்பு விடுத்து கூட்டம் 20-ஆம் தேதியன்று நடைபெற்றது.

2018 மே 22, துப்பாக்கிச் சூடு

2018 மே 22 அன்று போராட்டத்தின் 100 ஆவது நாளையொட்டிய பேரணி குறித்து அனைத்து விவரங்களும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு நிர்வாகம் அறிந்து வைத்திருந்துள்ளன. பேரணிக்கு முன்பாக 20 ஆம் தேதியன்று சமாதானக்கூட்டம் என்ற பெயரில் ஒரு கூட்டத்தை ஆட்சியரும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் நடத்தி உள்ளனர். இதில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அனைத்து கிராமங்களின் பிரதிநிதிகள் அழைக்கப்படவில்லை. மேலும் போராட்டக்குழுவினரில் ஒரு பிரிவினர் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கும் இடத்தில், 21 ஆம் தேதி போராட்டம் நடத்துவது எனவும் மற்றொரு பிரிவினர் திட்டமிட்டபடி 22 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை எனவும் அறிவிக்கிறார்கள். 

21 ஆம் தேதியன்று எஸ்.எல்.வி. மைதானத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த காவல்துறை ஒருபிரிவினருக்கு அனுமதி வழங்கியுள்ளது. இது போராட்டத்தில் பங்கேற்கக்கூடியவர்கள் இடையே உள்ள ஒற்றுமையைப் பிளவுபடுத்துவதற்கும் முற்றுகைப் பேரணியில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் பங்கேற்பதை குறைப்பதற்கும் உதவுமென ஆட்சியரும் காவல்துறையும் கருதி இருக்கக்கூடும். 

ஸ்டெர்லைட் ஆலையை மூடு என்ற ஒரே கோரிக்கைக்காக 22 ஆம் தேதியன்று கடற்கரை அருகிலிருந்து பெண்கள், ஆண்கள், இளைஞர்கள், முதியவர்கள், மாணவர்கள், குழந்தைகள், மூன்றாம் பாலினத்தவர் என சகல பகுதி மக்களும் பாளையங்கோட்டை ரோடு வழியாக பேரணியாக சென்றனர். எந்த அமைப்பும் தங்களதுகொடிகளை எடுத்து வரக்கூடாது என முடிவு எடுத்திருந்ததனால் யாருடைய கைகளிலும் கம்போ பைப்போ எதுவும்  இல்லை. பேரணி தெற்கு காவல்நிலையத்தை அடைந்தபோது, பேரணிக்குள் காவல்துறையினர் மாடுகளை உள்ளே விரட்டியுள்ளனர். இதன் காரணமாக அங்கு சிறு குழப்பம் ஏற்பட்டுள்ளது. அடுத்து வி.வி.டி. சிக்னல் அருகில் போலீஸ் பேரிகாட் போட்டு தடுத்துள்ளனர். அதையும் மீறி மக்கள்பேரணி  செல்கிறது. மடத்தூர், மில்லர்புரம், பிஎன்காலனி உள்ளிட்ட பல கிராமங்களிலிருந்து மக்கள் பேரணியில் இணைய கூட்டத்தின் அளவு அதிகமானது. 

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இப்பேரணியைத் தடுக்க காவல்துறையினர் போதிய ஏற்பாடுகள் ஏதும் செய்ததாகத் தெரியவில்லை. பேரணியில் வந்த ஒரு பகுதியினர் ஆட்சியர் அலுவலக வளாக நுழைவு வாயிலுக்குச் சென்றனர். முதலில் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலுக்கு சென்ற பண்டாரம்பட்டி சந்தோஷ் என்பவர் காவல் துறையினரால் தாக்கப்பட்டு, அவரின் மண்டை உடைக்கப்பட்டு காவல் துறை வாகனத்தினுள்ளே தூக்கிப் போடப்பட்டார். அங்கு வாகனம் ஒன்று எரிவதை  சந்தோஷ் பார்த்துள்ளார். அந்நேரத்தில் மக்கள் யாரும் ஆட்சியர் அலுவலகத்தின் உள்ளே நுழையவில்லை. எனவே ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் வாகனத்தை எரித்ததாக சொல்வது பொய் என சந்தோஷ், மாணவர் சங்க நிர்வாகி கலைராஜிடம் தெரிவித்துள்ளார். 

சந்தோஷ் போலீஸ் வாகனத்திலிருந்து இறங்கிய போது, துப்பாக்கிக் குண்டு பாய்ந்து ஒருவர் இறந்து கிடப்பதைப் பார்க்கிறார். தன்னையும் போலீஸ் சாகடித்துவிடுவார்கள், காப்பாற்றுங்கள் என அவர் சொன்னது ஊடகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊடகங்களின் உதவியின் காரணமாகவே உயிர் பிழைத்து தான் சிகிச்சை பெற முயன்றதாக தெரிவித்துள்ளார். முதலில் மக்களை ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி முன்னேறவிட்டு, காவல்துறை பின்னோக்கி சென்றுள்ளது. 

இவ்வாறு இரண்டு, மூன்று முறை முன்னேறுவதும் பின்னே செல்வதுமாக இருந்துள்ளது. இந்நிலையில், ஆட்சியர் அலுவலகத்தில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென மக்களை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். லத்தியால் மட்டுமின்றி ரீப்பர் கட்டைகள், இரும்பு பைப்புகள், கற்களைக் கொண்டும் காவல்துறையினர் தாக்கியுள்ளனர்; பின்புறத்திலிருந்தும் பக்கவாட்டிலிருந்துமே போலீசார் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டாலும், அது மக்கள் அடர்த்தியாக இருந்த பகுதியில்தான் வீசப்பட்டுள்ளது. காவல்துறையின் நடவடிக்கையால் வெறுப்படைந்த மக்களில் சிலர், தற்காப்புக்காக கல்லெறித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சை

குண்டடிபட்டுக் காயமடைந்த மக்களை உரிய முறையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற காவல்துறை அனுமதிக்கவில்லை. குறிப்பாக 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை இயக்குவதை காவல்துறையினர் தடுத்துவிட்டதாக பாதிக்கப்பட்ட பலர் தெரிவித்துள்ளனர். பெரும்பாலும் பாதிக்கப்பட்ட மக்களை இரு சக்கர வாகனத்தின் மூலமாகவே பொதுமக்கள் அழைத்துச் சென்றுள்ளனர். இறந்தது யார்? அடிபட்டது யார்? என்கின்ற பதற்றத்தோடு மக்கள் மருத்துவமனைக்கு வந்தனர். அவர்களுக்கும் சேர்த்து பீதியூட்டும் வகையில் மருத்துவமனைக்கு வெளியே தடியடியையும் துப்பாக்கிச் சூட்டையும் 23.05.2018 அன்று காவல்துறை நடத்தியுள்ளது. இதில் வேடிக்கை பார்த்தவர்கள், அத்தெரு வழியே சென்றவர்கள் என பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களை பார்க்க வந்த உறவினர்கள், நண்பர்களும்காவல் துறையின் தாக்குதலுக்குத் தப்பவில்லை. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்கள் பலரும் சிகிச்சை முறையாகத் தரப்படுவதாகத் தெரிவித்தனர். சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு துணையாக இருந்தவர்களும் காவல் துறையினால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களிடம் ஏன் நீங்கள் சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை என கேட்டபோது, சிகிச்சை எடுத்தால் எங்களையும் போலீஸ் வழக்குல சேத்துடும். வீட்டுக்கு ஒருத்தர் மேல கேஸ் போட்டது போதாதா என தங்களுடைய ஆதங்கத்தைத் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட மக்களோடு போலீசுக்கும் சிகிச்சை கொடுத்தபோது, போலீஸைத் தொட்ட கையால எங்களைத் தொட்டுசிகிச்சை செய்யாதீங்க என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்ததாக மருத்துவமனை டீன் கூறினார். சிகிச்சைக்காக அரசு எந்தப் பணத்தையும் ஒதுக்கவில்லை. மருத்துவர்களின் சொந்த பணத்திலிருந்து ரூ.5,00,000 எடுத்து மருத்துவ உபகரணங்கள் மற்றும் இதர தேவைகளை நிறைவேற்றியதாகத் தெரிவித்தனர். அதேநேரத்தில் காவல்துறையின் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக மருத்துவமனைக்குள் வந்தவர்களை, சில மருத்துவர்களே போலீசிடம் பிடித்தும் கொடுத்துள்ளனர்.

 மருத்துவமனை டீன் மே 27 ஆம் தேதி தெரிவித்த தகவலின்படி 108 பேர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, 47 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கிக் குண்டுகள் எலும்புவரை பாய்ந்துள்ளதால் சிகிச்சை பெறவேண்டிய 6 பேர் வேறு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். 20 போலீசார் நெல்லை மருத்துவமனையில் சிகிச்சைபெறுகின்றனர். 2 பேர் தாங்களாகவே தனியார் (மதுரை வேலம்மாள், மீனாட்சி மிஷன்) மருத்துவமனைகளுக்கு சென்றுவிட்டனர்.

பாதிப்புகளை எதிர்கொண்டவர்கள் தெரிவித்தவை

l உயிருக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி 99 நாட்களாக கிராம அளவில் நடைபெற்ற அமைதிப் போராட்டததில் ஈடுபட்டவர்களை ஒருமுறை கூட மாவட்ட ஆட்சியர்  சந்திக்காதது ஏன்?

l தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த மக்களோடு பேச்சுவார்த்தை நடத்த முதல்வர், துணை முதல்வர்,
அமைச்சர்கள் என யாரும் முன்வராதது ஏன்?

l குழந்தைகளைக் கையில் ஏந்திக் குடும்பம் குடும்பமாக ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிப் பேரணி சென்ற மக்களை துப்பாக்கிக் குண்டுகளால் சுட்டு சாகடித்தது எந்த விதத்தில் நியாயம்?

l துப்பாக்கிச் சூடு நடத்துகிற பட்சத்திலும் முழங்காலுக்கு கீழே சுட்டு கூட்டத்தை கலைக்க வாய்ப்பிருந்தும் அதைச்செய்யாமல் உயிரை பறிக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு சுட்டுக்கொன்றது ஏன்?

l ஆட்சியர் அலுவலகத்தில் துப்பாக்கியால் மக்களை சுட்டுக் கொன்ற காவல்துறையினர், மேலும், மருத்துவமனை, திரேஸ்புரம், அண்ணா நகர், குடோன் பகுதியிலும் துப்பாக்கிச் சூடு நடத்தியது ஏன்?

l நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சட்டவிரோதமாகத் தெற்கு காவல்நிலையம், புதுக்கோட்டை, வல்லம்,துப்பாக்கிச் சூடு மைதானம் போன்ற இடங்களில் அடைத்து, அடித்து சித்ரவதை செய்யப்பட்டது ஏன்?

l மேலும் அவர்கள் அணிந்திருந்த நகைகள், வைத்திருந்த பொருட்கள், வாகனத்தின் சாவி போன்றவைகளை காவல்துறையினர் பிடுங்கி வைத்துக்கொண்டு தரமறுப்பது ஏன்?

l துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டது யார்?

இப்படியாக பல கேள்விகள் மக்களிடம் இருக்கின்றன. இதில் இருவரின் கருத்துக்கள் கவனத்திற்குரியவை. 

75 வயது முதியவர் ஒருவர் இப்போராட்டம் குறித்து தெரிவித்தது: முன் எப்போதையும்விட இப்போராட்டம் மூன்று விதங்களில் முக்கியத்துவம் உடையது. 

ஒன்று- சாதி, மதம் கடந்து அனைத்துப் பிரிவினரும் ஒன்றுதிரண்டு ஒற்றுமையாய் நடத்தியது. 

இரண்டு- அதிக எண்ணிக்கையில் பெண்களின் பங்கேற்பு, ஈடுபாடு, தலைமை வகித்து நடத்தியது.

மூன்று- வழக்கறிஞர்கள் ஒற்றுமையோடு பாதிக்கப்பட்டவர்களுக்காக  பணம் வாங்காமல்  வழக்காடியது. 

இக்கருத்தை வேறு ஒரு தளத்தில் ஆய்வாளர் பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியம் தெரிவித்தார். ஒரு சாதி, ஒரு மதப் பிரிவினரின் போராட்டம் என்ற அடையாளத்தைத் தாண்டி, அனைத்துப் பகுதி மக்களின் போராட்டமாக ஸ்டெர்லைட் போராட்டம் இந்த முறை மாறியது. அதுபோல ஒரு பகுதி மக்களின் போராட்டம் என்பதைத் தாண்டிமாவட்டம் தழுவிய போராட்டமாக விரிவடைந்தது. இதைஸ்டெர்லைட் நிர்வாகம் புரிந்துகொண்டது. எனவே, அடக்குமுறை மூலம் போராட்டத்தை ஒடுக்கத் திட்டமிட்டது என்றார்.


பரிந்துரைகள்

l உயர் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிறப்புப்
புலனாய்வு நடைபெற வேண்டும்.

l துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட அதிகாரி, காவல்துறையினர் ஆகியோரை பணிநீக்கம் செய்து, கொலை வழக்குப் பதிவு செய்து, துறைவாரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

l ஸ்டெர்லைட் ஆலை உள்ள இடத்தை அரசு கையகப்படுத்த வேண்டும்.

l இதுவரை சுற்றுப்புறச் சூழலுக்கு நேர்ந்துள்ள கேடுகளுக்கான இழப்பீட்டை ஸ்டெர்லைட் நிர்வாகத்திடமிருந்து பெற வேண்டும்.

l காவல்துறை தாக்குதலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தரமான இலவச சிகிச்சையும் இழப்பீடும் அளிக்கப்பட வேண்டும். குழந்தைகளின் கல்வி இடை நிற்றல் இன்றி தொடர்வதை உறுதி செய்ய வேண்டும்.

l ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவர்கள்மீதான அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்.


வெளியீடு

மனித உரிமைப் பாதுகாப்புக் குழு,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

5 comments:

  1. அடேங்கப்பா!

    ஒரு வீடியோ தொடுப்புக் கொடுத்து பார்க்கச் சொன்னா? கண்ண மூடிக்குவீங்க? ஆனால் நீங்க வாசிக்க சொல்ற எல்லாத்தையும் எல்லாரும் வாசிக்கணூம்??

    இல்லைனா நாங்க கல் எறீயத்தான் செய்வோம். அது எங்க உரிமை. போலிஸகாரன் அடி வாங்கிட்டு ஓடி ஒளீயனும்னு சொல்லுவீங்க.

    சரி உங்க கம்யூனிசம், ரஸ்யா, சைனா ல என்ன லெவெல்ல இருக்குனு தெரியுமா? ஏன் அங்கிள் சும்மா கண்ண மூடிக்கிட்டு/??

    ReplyDelete
    Replies
    1. போலீஸ் பரப்பிய கட்டுக்கதையை நம்ப கம்யூனிஸ்டுகள் ஒன்றும் ரஜனிகாந்த் மாதிரியான கூமுட்டை கிடையாது.

      உங்க ஆளு என்னிக்கு போலீஸிடம் அடி வாங்கப் போறாரோ?

      Delete
  2. Then why Balabharathi ex MLA was fighting to open the Sterlite few years back?

    ReplyDelete
    Replies
    1. அது கிஷோர் கே சாமி எனும் சமூக ஊடக பொறுக்கி பரப்பிய கட்டுக்கதை. அவனின் கற்பனையை காவிக்கயவர்கள் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். சில அப்பாவிகள் கேள்வி கேட்கிறார்கள்

      Delete
  3. எத்தனை கருத்து மாறுபாடுகள் இருந்தாலும் அனைத்து தரப்பு மக்களும் முற்போக்கு சக்திகள் மற்றும் கம்யூனிஸ்ட்டுகள் பக்கம் நிற்பதே இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கும்.. பத்ரிநாத

    ReplyDelete