Sunday, April 4, 2021

அவர்கள் தேர்தல்களில் வென்றதெப்படி?

 

நூல் அறிமுகம்

 


நூல்                                       : இந்தியத் தேர்தல்களை வெல்வது எப்படி?

ஆசிரியர்                            : சிவம் சங்கர் சிங்

தமிழில்                               :  இ.பா.சிந்தன்,

வெளியீடு                          :  எதிர் வெளியீடு, பொள்ளாச்சி

விலை                                :  ரூபாய்  320

 

நூலின் உள்ளடக்கத்திற்கு செல்லும் முன்பு நூலாசிரியர் பற்றிய அறிமுகம் அவசியம்.

 

அமெரிக்காவில் படித்த சிவம் சங்கர் சிங் அரசியல் களம் பற்றிய அனுபவம் வேண்டி ஒரு என்.ஜி.ஓ வின் பெலோஷிப்போடு சிக்கிம் எம்.பி ஒருவரோடு பதினோரு மாதங்கள் செயல்படும் வாய்ப்பை பெறுகிறார். பிறகு பிரசாந்த் கிசோர் ஐபாக் அமைப்பில் ஊழியராக வேலை பார்க்கிறார். காங்கிரஸ் கட்சிக்காக பஞ்சாப் சட்ட மன்றத் தேர்தலில் வேலை பார்த்த அவர் பிறகு பாஜகவில் உறுப்பினராகிறார். மணிப்பூர், திரிபுரா தேர்தல்களில் வேலை பார்த்த அவர் மோடியின் போலித்தனம் கண்டு ஏமாந்து பாஜகவிலிருந்து விலகி விட்டார்.

 

அவரது அனுபவங்களே இந்த நூல். “பாஜக தேர்தல்களில் வென்றது எப்படி?” என்ற தலைப்பு இன்னும் கூட பொருத்தமாக இருக்கும்.

 

இந்த நூல் தரும் படிப்பினைகளை சுருக்கமாக தருவது இன்றைக்கு மிகவும் அவசியம் என்று நினைக்கிறேன். இன்றைய நாளிதழ்களில் செய்திகள் போலவே அதிமுக அளித்துள்ள விளம்பரங்கள்தான் அதற்குக் காரணம்.

 

ஐபாக் நிறுவனத்தில் பஞ்சாபில் வேலை பார்க்கச் சென்ற நூலாசிரியர் தங்கள் பணி அங்கே வென்றதற்கு காங்கிரஸ் முதலமைச்சர் வேட்பாளர் அம்ரீந்தர் சிங்கிற்கு இருந்த மகாராஜா என்ற முத்திரை மக்களை அவரிடமிருந்து விலகியிருக்கச் செய்தது என்றும் அவரது பெயருக்கு முன்பிருந்த மகாராஜா என்ற அடைமொழியை நீக்கி கேப்டன் என்ற அடைமொழியை சேர்த்ததும் தொடர்ச்சியாக பல தொகுதிகளில் அவரை வைத்து நடத்திய கூட்டங்களுமே என்று விவரிக்கிறார். மக்களிடம் நெருக்கமாக செல்ல வேண்டிய அவசியத்தை இந்த அனுபவம் சொல்கிறது.

 

நேர்மறை பிம்பங்களை உருவாக்க தவறுகிற போது மிகச் சுலபமாக எதிர்க்கட்சிகள் எதிர்மறை பிம்பத்தை உருவாக்கிடுவார்கள். அதை போக்குவது மிகவும் கடினம். பெரும்பாலான அரசியல் தலைவர்கள் செய்யும் பிழைகளைத்தான் ராகுல் காந்தியும் செய்தார். அதை மிகைப்படுத்தி அவருக்கு “பப்பு” என்ற அடைமொழி கொடுத்து சிறுமைப்படுத்தியதை மாற்ற முடியவில்லை. அவருக்கு ஒரு நேர்மறையான பிம்பத்தை உருவாக்க காங்கிரஸ் தவறியதால் இந்த நிலை என்று சொல்லுகிறார். அதே நேரம் மோடிக்கு எளிமையானவர் என்ற பிம்பம் முன்பே உருவாக்கப்பட்டு விட்டதால் அவரது ஆடம்பரங்கள் பற்றிய உண்மைகள் பெரும்பாலான மக்களிடம் எடுபடுவதில்லை.

 

மணிப்பூர் தேர்தலில் 15 ஆண்டுகள் ஆண்ட காங்கிரஸ் முதல்வருக்கு எதிராக  நூறு குற்றச்சாட்டுக்களை மக்கள் மத்தியில் பரப்பிய போது அது எடுபட்டாலும் பாஜக பிரிவினைவாத சக்திகளோடு கூட்டு வைத்துள்ளது என்று அவரால் திசை திருப்ப முடிந்தது. பாஜக அங்கே தனிப்பெரும் கட்சியாக வர முடியவில்லை என்றாலும் குதிரை பேரம் நடத்தி ஆட்சிக்கு வர முடிந்தது.

 

திரிபுரா பற்றிய அவரது அனுபவம் மிகவும் முக்கியமாக நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று. மணிப்பூர் முதல்வருக்கு எதிராக குற்றப்பட்டியலை உருவாக்க முடிந்தது போல இடது முன்னணி ஆட்சிக்கு எதிராக, தோழர் மாணிக் சர்க்காருக்கு எதிராக அப்படி ஒரு பட்டியலை தயார் செய்ய முடியாத நேர்மையான ஆட்சியாக அது இருந்தது என்பதால் அங்கே கையாண்ட உத்தி வேறு. தீவிரவாத சக்திகளின் பிடியிலிருந்த மாநிலத்தை மீட்டு அமைதியை நிலவ வைத்தது இடது முன்னணி என்ற வரலாறு இளைஞர்களுக்குத் தெரியாதாததால் அவர்களை ஈர்க்கும் உறுதி மொழிகள், பாஜக ஆட்சி வந்தால்தான் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க முடியும் என்ற உறுதி மொழி, தனி மாநிலம் கேட்கும் கட்சியோடு கூட்டணி வைத்துக் கொண்டாலும் அதனை சில தொகுதிகளில் மட்டும் முன்னிறுத்தி சில தொகுதிகளில் அப்படி ஒரு கூட்டணி இருப்பதாகவே காண்பித்துக் கொள்ளாதது ஆகியவையே அங்கே பாஜகவின் வெற்றிக்கு காரணமாக அமைந்திருக்கிறது. வரலாற்றை நாம் தொடர்ந்து நினைவு படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்ற படிப்பினையை தருகிறது இந்த அனுபவம்.

 

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நடந்த ஊழல்களை பெரிது படுத்தி வளர்ச்சியை அளிப்போம் என்று வாக்குறுதி கொடுத்த பாஜக பிறகு அந்த கோஷத்தை 2019 ல் பயன்படுத்தவில்லை. மாறாக பாஜகவால் மட்டும்தான் இஸ்லாமியர்களிடமிருந்து இந்துக்களை பாதுகாக்க முடியும் என்ற வெறியை ஊட்டி பெரும்பான்மை மக்களை நம்பவும் வைத்தது. அதற்கு அது பயன்படுத்தியது சமூக ஊடகங்களைத்தான் என்பதை புள்ளி விபரங்களோடு ஆசிரியர் சொல்கிறார். அதனை தனியாக இணைத்துள்ளேன்.

 


துல்லிய தாக்குதல் போன்றவை கடந்த ஆட்சிக்காலத்திலும் நடந்துள்ளதென்றாலும் அதனை முதன் முதலில் செய்தவர் மோடிதான் என்ற பிம்பத்தை உருவாக்க முடிந்துள்ளது என்கிறார்.

 

தகவல் தொகுப்பாய்வு என்பது தேர்தலில் முக்கிய இடம் பிடிக்கிறது என்பதையும் அதன் மூலம் இடத்திற்கேற்ற உத்தியை பாஜக வகுத்துக் கொண்டது என்பதை விளக்கும் ஆசிரியர் நாம் இலவசமாக பயன்படுத்தும் முகநூல், வாட்சப் உள்ளிட்ட எல்லா நிறுவனங்களுமே நம் தகவல்களை வணிக நிறுவனங்களிடமும் அரசியல் கட்சிகளிடமும் விற்று வருகிறது என்பதையும் தெரிவிக்கிறார். ஆயிரக்கணக்கான வாட்சப் குழுக்களை உருவாக்கி செய்திகளை பரப்ப இத்தகவல்கள் உதவிகரமாக இருந்துள்ளன. அப்படி பரப்பப்படும் தகவல்களில் பெரும்பாலானவை போலிச்செய்திகள்.

 

போலிச்செய்திகளை உருவாக்குவது என்பதும் அவர்கள் தேர்தல் உத்தியாக இருந்துள்ளது. உண்மை என்னவென்று விளக்குவதற்கு முன்பாகவே அளவுக்கதிகமான பாதிப்பை அது உருவாக்கியிருக்கும். கன்னையா குமார் மீதான தேச விரோதக் குற்றச்சாட்டையும் வழக்கையும் நீங்கள் நூலிலிருந்து படிப்பது ஒரு புதிய வெளிச்சத்தை அளிக்கும்.

 

கவர்ச்சிகரமான முழக்கங்களை உருவாக்குவதும் எவ்வளவு முக்கியம் என்று பல உதாரணங்களோடு சொல்கிறார். உபி தேர்தலில் காங்கிரஸ் சமஜ்வாடி உருவாக்கிய முழக்கத்தில் மக்களுக்கானது என்று எதுவுமில்லாததால் அது மக்களை ஈர்க்கவில்லை என்று சொல்கிறார்.

 

ஊடகங்களை பயன்படுத்துவது என்பதில் பல முறைகளை கையாண்டுள்ளார்கள். பெரும்பாலான ஊடக முதலாளிகள் ஆளும் கட்சிக்கு சாதகமாகவே செயல்படுவதை கொள்கையாகவே கொண்டுள்ளார்கள். தொலைக்காட்சிகளில் மோடிக்கு பாதகமாக ஏதாவது செய்தி வெளியாகிறதா என்பதை கண்காணிக்கவே தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தில் 200 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர் என்பது இந்நூல் மூலம் கிடைக்கும் அதிர்ச்சி தகவல்.

 

பொருளாதாரச் செயல்பாடுகளை வைத்தோ சாதனைகளைச் சொல்லியோ எல்லாம் தேர்தலில் வெற்றி பெற முடியாது. மக்களின் உணர்வுகளின் மேலேறித்தான் தேர்தலில் வெல்ல முடியும் என்பதே பாஜகவின் கோட்பாடாக உள்ளது.

 

அதைத்தான் ஒவ்வொரு தேர்தலிலும் பயன்படுத்துகின்றனர் என்பதை விளக்கிச் சொல்லும் நூல் இது. தான் ஏன் பாஜகவிலிருந்து விலகினேன் என்று ஒரு நீண்ட பட்டியலில் குற்றச்சாட்டுக்களை நூலாசிரியர் முன் வைத்துள்ளார். அவை புதிதல்ல. இடதுசாரிக் கட்சிகள் தொடர்ந்து சொல்லி வருபவைதான். ஆனால் அதனை பாஜகவின் தேர்தல் ஆலோசகரே வழி மொழிந்துள்ளார்.

 

நேரமெடுத்து முழுமையாக படிக்க வேண்டிய நூல்.

 

தமிழாக்கம் செய்யப்பட்டது என்ற உணர்வே வராத படி நேரடியாகவே தமிழில் எழுதப்பட்ட நூல் என்ற அளவிற்கு சிறப்பாக தமிழாக்கம் செய்துள்ள தோழர் இ.பா.சிந்தனுக்கும் அர்பன் நக்ஸலைட்டுகள் என்று ஆட்சி மீது விமர்சனம் வைப்பவர்கள் வசை பாடப் படும் நேரத்தில் இந்த நூலை வெளியிட்ட எதிர் வெளியீடு தோழர் அனுஷிற்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

 

 

 

No comments:

Post a Comment