இன்றும் நாளிதழ்களில் தேர்தல் விளம்பரம் வந்துள்ளது. இருந்தாலும் என் பதிவில் நான் நேரடியாக யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்றெல்லாம் எழுதப் போவதில்லை
எங்கள் கோட்ட இதழான "சங்கச்சுடர்" மார்ச் 2021 இதழில் எழுதிய கட்டுரையை கடைசி வரியை மட்டும் மாற்றி பகிர்ந்து கொள்கிறேன்.
இலவசங்களும் ஊக்கத் தொகைகளும்
எஸ்.ராமன்,
வேலூர்
தமிழக
சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குறுதிகளில் அதிகம் பேசப்பட்டவையாக இல்லத்தரசிகளுக்கு மாதம்
ஆயிரம் ரூபாய் தருவோம் என்று திமுக சொன்னதும் நாங்கள் 1500 ரூபாய் தருவோம் என்று அதிமுக
சொன்னதும்தான்.
இலவசங்கள்
மூலமாக மக்களை பிச்சைக்காரர்களாக வைத்திருக்க முயல்கிறார்கள் என்ற கூக்குரல் சத்தமாகவே
கேட்கிறது. இந்த வாக்குறுதியை நான் முழுமையாக வரவேற்கிறேன்.
ஏன்?
“எல்லா
பெண்களுமே உழைக்கும் பெண்கள்தான், ஆனால் வீட்டிற்கு வெளியேயும் செய்யும் உழைப்புக்காக
சில பெண்கள் ஊதியம் பெருகின்றனர்” என்று எப்போதோ படித்தது நினைவுக்கு வந்தது. சலிப்பூட்டும்
வீட்டு வேலைகளிலிருந்து வெளியே வராமல் பெண்கள் விடுதலை சாத்தியமில்லை என்று நூறு வருடத்திற்கு
முன்பே தோழர் லெனின் கூறினார். உங்கள் மனைவி என்ன செய்கிறார்கள் என்ற கேள்விக்கு வேலைக்குப்
போகாத மனைவியைக் கொண்ட கணவர்களில் பெரும்பாலானவர் அளிக்கும் பதில் “சும்மாதான் இருக்காங்க”
அப்படி
சும்மா இருப்பவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டவர்களின் உழைப்பிற்கு மிகச் சிறிய அங்கீகாரமாகவே
இந்த வாக்குறுதியை பார்க்க வேண்டும்.
ஏன்
மிகச்சிறிய அங்கீகாரம்?
21.03.2021
அன்று இணைய வழியில் நடைபெற்ற மகளிர் மாநாட்டை துவக்கி வைத்து பேசிய அகில இந்திய இன்சூரன்ஸ்
ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளர் தோழர் எம்.கிரிஜா அவர்கள் பகிர்ந்து கொண்ட தகவல்களை
நினைவு படுத்துவது அவசியம் என்று கருதுகிறேன்.
வீட்டு
வேலைகளுக்காக ஆண்கள் ஒரு நாளைக்கு 52 நிமிடங்களை செலவிடுகிறார்கள் என்றால் பெண்கள்
செலவழிக்கும் நேரம் 352 நிமிடங்கள். முதியவர்களையும் குழந்தைகளையும் பராமரிப்பதற்காக
செலவிழக்கப்படும் நேரத்தை ஊதியத்தை ரூபாய் மதிப்பில் மாற்றினால் அது 19 ட்ரில்லியன்
(19 லட்சம் கோடி ) ரூபாயாக, ஒட்டு மொத்த உற்பத்தியில் 3.1 % ஆக இருக்கும். நான்கு மாத
மகப்பேறு விடுப்புக்குப் பிறகு வேலைக்குத் திரும்பும் பெண்களில் 48 % தங்கள் குழந்தைகளைப்
பார்த்துக் கொள்வதற்காக வேலையை விட்டு விடுகின்றனர்.”
இப்போது
சொல்லுங்கள் ரூபாயாக கணக்கிடப்படாத அவர்களின் உழைப்பிற்கு இது ஒரு சிறிய அங்கீகாரம்தானே!
அது
மட்டுமல்ல எதற்கும் அரசின் தலையீடு அவசியமல்ல. எல்லாவற்றையும் சந்தையே பார்த்துக் கொள்ளும்
என்ற உலகமயக் கோட்பாட்டிற்கு முரணானது இந்த வாக்குறுதி என்பதாலும் இதனை வரவேற்கிறேன்.
அரசு
ஏழை எளிய மக்களுக்கு ஏதாவது சிறிய உதவி செய்தால் அதனை இலவசம் என்று கொச்சைப்படுத்துபவர்கள்
யாராவது பெரும் செல்வந்தர்களுக்கு அரசு அள்ளித்தரும் சலுகைகளும் இலவசம் என்று சொல்வதுண்டா?
ஒரு
தொழிற்சாலை தொடங்குவதற்கு தடையில்லா மின்சாரம், விலையில்லை இடம், இடையறா தண்ணீர், வருமான
வரி விடுமுறை என்ற சொல்லாடல்களில் அளிக்கப்படும் சலுகைகள் எல்லாமும் பெரு முதலாளிகளுக்கு
அளிக்கப்படும் இலவசங்கள் என்று ஏன் சொல்வதில்லை?
மூன்று
சதவிகிதம் கார்ப்பரேட் வரியை குறைத்ததன் மூலம் அரசு இழந்த 1,50,000 கோடி ரூபாயை பெரும்
நிறுவனங்களுக்கு அரசு அளித்த பிச்சை என்று யாராவது கூறுவதுண்டா?
வங்கிக்
கடனை திருப்பிக் கட்டாமல் ஏய்ப்பவர்களுக்கு உதவ அவற்றை தள்ளுபடி செய்யும் தாராள மனதிற்கு
என்ன பெயர்?
பெரு
முதலாளிகள் அனுபவிக்கும் எந்த ஒரு சலுகையும் அவர்களின் ஊழியர்களுக்கோ அல்லது அவர்களின்
நுகர்வோருக்கோ வந்தடைவதில்லை. அவர்களின் செல்வப் பெருக்கிற்கு மட்டுமே உதவுகிறது,.
அதனால்தான் பெருந்தொற்று காலத்தி;லும் அம்பானி, அதானி ஆகியோரின் சொத்து மதிப்பு பல
மடங்கு உயர்ந்துள்ளது.
ஆனால்
ஏழை மக்களுக்கு அளிக்கப்படும் தொகையோ மீண்டும் சந்தைக்கே வரும். பொருளாதார சுழற்சிக்கே
உதவும். அதனால் ஏழை மக்களுக்கு அளிக்கப் படும் சலுகைகள் பெரும் செல்வந்தர்களுக்கு அளிக்கப்படும்
சலுகைகளை விட மேலானது.
1000
ரூபாய் அளிப்போம் என்ற கட்சியை விட 1500 ரூபாய் அளிப்போம் என்றும் ஆறு சிலிண்டர்கள்
கொடுப்போம் என்று சொல்லும் கட்சி மேல் அல்லவா என்றும் ஒரு கேள்வி வருகிறது.
ஆட்சியில்
இருந்த போது கொரோனா ஊரடங்கின் போது ஒருங்கிணைக்கப்படாத தொழிலாளர்களுக்கு மாதம் ஆறாயிரம்
அளியுங்கள் என்ற இடதுசாரிக் கட்சிகளின் கோரிக்கையை உதாசீனம் செய்தவர்கள். மாநில அரசு
வரியை குறைத்திருந்தால் பெட்ரோல், டீசல், சிலிண்டர்
விலைகளை குறைத்திருக்க முடியும். அது மட்டுமல்ல தமிழகத்திற்கு வர வேண்டிய ஜி.எஸ்.டி
பாக்கியைப் பெற சின்ன முணுமுணுப்பு கூட செய்யாதவர்கள். போட்டிக்கு வாக்குறுதி அளிப்பவர்களை
எப்படி நம்ப முடியும்? மத்திய சர்வாதிகார ஆட்சியோடு கூட்டணி வைத்துள்ளவர்களை வீழ்த்தினால்தானே
தமிழகத்தி;ல் ஜனநாயகம் பாதுகாப்பாக இருக்கும்! அதனால் நம் வாக்கை சரியாக பயன்படுத்துவோம்.
நல்லதொரு கருத்தும் விளக்கமும்!
ReplyDelete