வாசிப்பை நேசிக்கிற அனைவருக்கும் உலக புத்தக தின வாழ்த்துக்கள். இன்று காலையில் நான் படித்த ஒரு முகநூல் பதிவு உடனடியாக என்னை பகிர்ந்து கொள்ள தூண்டியது.
முதலில் பதிவை படியுங்கள்.
எழுதியது யார் என்பதை பிறகு சொல்கிறேன்.
பிரான்சிஸ் டேயும், ஆண்ட்ரூ கோகனும் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் சார்பாக சென்னப்ப நாயக்கரிடம் 1639ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி சென்னப் பட்டினத்தை வாங்கியபோது, அந்தப் பத்திரத்தில் சாட்சிக் கையெழுத்திட்டவன் நானல்ல.
திருவாவடுதுறை சைவ ஆதீனத்தில் தமிழ் படித்துக் கொண்டிருந்த உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் குமாரர் வேங்கடராமனுக்கு அவனது குருநாதர் மஹாவித்வான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சுவாமிநாதன் என்று பெயரை மாற்றிய போது, அவருக்கு அருகில் விசிறியால் வீசிக் கொண்டிருந்த சிஷ்யப் பிள்ளை நானாக இருந்திருக்கவில்லை.
1893 ஜீன் மாதம் ஏழாம் தேதி இரவு, பெரிடோரியாவிற்குப் போய்க் கொண்டிருந்த ரயிலின் முதல் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்த அந்த குஜராத்தி வழக்கறிஞரை இனவெறி பயணச்சீட்டுப் பரிசோதகன் பீட்டர்மார்டிஸ்பர்க் ஸ்டேஷனில் ரயிலிலிருந்து தள்ளி விட்டபோது, உதவிக்கு ஓடிவந்த கறுப்பினச் சிறுவனாக நான் இருக்க வாய்ப்பே இல்லை.
இந்தியாவில் பல்லாண்டுகள் பயணித்தபின், கிபி 645ல் 657 அரிய புத்தகங்களை 520 பெட்டிகளில் வைத்து, அவற்றை 20 குதிரைகளில் ஏற்றிக் கொண்டு யுவாங் சுவாங் சீனநாட்டிற்குத் திரும்பிய போது, அந்தக் குதிரையோட்டிகளில் ஒருவனாக நான் இருந்திருக்க முடியுமா?
கொலம்பஸின் கடற்சாகசப் பயணத்திற்கு ஸ்பெயின் தேசத்து அரசர் ஃபெர்ட்டினாண்டும், அரசி இஸபெல்லாவும் நிதியுதவி அளிப்பதற்கான சாசனத்தைத் தயாரித்த எழுத்தன் நானாக எப்படி இருக்க முடியும்?
ஷாஜஹானின் மூத்த புதல்வன் தாரா ஷிகோ பெரும் பண்டிதர்களான ஜகந்நாத மிஸ்ரா, பன்வாலிதாஸ், கவீந்தாச்சார்யா ஆகியோருடன் விவாதித்து. பகவத்கீதையையும், உபநிஷதங்களையும் பாரசீக மொழியில் மொழிபெயர்த்த போது, அவருக்கு அருகில் இருந்து மதுவை ஊற்றிக் கொடுத்த அடிமைப் பெண்ணாக நான் ஒருவேளை இருந்திருப்பேனா?
அலெக்சாண்டர் கிரஹாம் பெல் 1876 மார்ச் மாதம் 10ம் தேதி தான் புதிதாய் கண்டுபிடித்திருந்த தொலைபேசி என்ற கருவியின் வழியாக, ‘மிஸ்டர் வாட்சன், இங்கே வாருங்கள், உங்களைச் சந்திக்க விரும்புகிறேன்,‘ என்றதையும், வாட்சன் அதே கருவியில் ‘இதோ வந்துவிட்டேன்‘ என்று பதில் கூறியதையும் யாருமே நேரில் பார்த்திருக்கவில்லைதான்.
1904ம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணியின் சிவில் பொறியாளர் சி.ஓ.ஓர்டெல் காசிக்கு அருகே உள்ள சாரநாத்தில் அகழ்வாராய்ச்சி செய்த போது கிடைத்த நான்கு சிங்கங்கள் கொண்ட அசோகச் சின்னம் பிற்காலத்தில் சுதந்திர இந்தியாவின் தேசியச் சின்னமாக ஆகப் போகிறது என்பதை அறியாமலேயே அவர் அதை பத்திரமாகப் பாதுகாத்த போது, அந்த நினைவுச் சின்னத்தைச் சுமந்து சென்ற கூலியாட்களில் ஒருவனா நான்? இருக்க முடியாது.
சிஸ்டைன் தேவாலயத்தின் விதானங்களில் ஓவியங்கள் வரைய போப்பாண்டவர் இரண்டாம் ஜீலியஸின் உத்தரவின் பேரில் வேலையை ஆரம்பித்த மைக்கேலேஞ்சலோ செலவிற்குப் பணம் கேட்டு, கைகட்டி நிற்க, சர்ச்சிற்கு வாங்கித் தான் பழக்கம், கொடுத்துப் பழக்கமில்லையே என்று பொக்கிஷதார் ஏளனம் பேசியபோது, தலைகுனிந்தவாறு சர்ச் தரையைக் கூட்டிக்கொண்டிருந்த துப்புரவுத் தொழிலாளி நானல்ல.
நீருமா என்னைக் கைவிட்டுப் போய்விட எண்ணுகிறீர்? என்கிறாள் குந்தவை. பழையாறையின் சிறையில் அடைபட்டிருக்கும் வந்தியத்தேவன், நான் எப்படித் தங்களைக் கைவிட முடியும்? இராஜாதி ராஜாக்கள் தங்களுடைய மணிப் பொற்கரத்தைக் கைப்பற்றத் தவம் கிடக்கிறார்கள். நானோ குற்றவேல் செய்ய வந்தவன்….என்கிறான். இளையபிராட்டி இப்போது தன்னுடைய திருக்கரத்தை நீட்டினாள். இது கனவா, நனவா எனற தயக்கத்துடன் வந்தியத்தேவன் அந்த மலர்க்கரத்தைத் தன் இரு கைகளாலும் பற்றிக் கண்களில் ஒற்றிக் கொண்டான். அப்போது அதைப் பார்க்காதது போல முகத்தைத் திருப்பிக் கொண்ட காவலாளி சத்தியமாக நானல்லன்.
1493 செப்டம்பர் 25ம் தேதி, நீண்ட யோசனைக்குப் பின் போப் ஆறாம் அலெக்ஸாண்டர் உலக வரைபடத்தில் அட்லாண்டிக்கிற்கு குறுக்கே வடக்கு தெற்காக ஒரு கோட்டைக் கிழித்து, உலகை போர்ச்சுக்கலுக்கும், ஸ்பெயினுக்கும் பங்கிட்டுத் தந்த வேளையில் அவரருகே நின்றிருந்த மெய்க்காப்பாளனாக நான் இருந்திருக்க முடியுமா என்ன?
பாழடைந்து போன மாமல்லபுரத்தின் அரைகுறை சிற்பங்களுக்கு நடுவில், அந்த நள்ளிரவில், தீவட்டியின் மங்கலான ஒளியில், அந்த சிற்ப நகரம் பற்றி, ஆயனச் சிற்பி பற்றி, சிவகாமியின் நடனம் பற்றி, அவள் அழகு பற்றி, அவள் மீதான தனது காதல் பற்றி, புலிகேசியின் படையெடுப்பால் அத்தனையும் தகர்ந்தது பற்றி துயரத்தோடு சிவனடியார் வேடத்தில் இருந்த நரசிம்ம பல்லவன் சொன்ன வரலாற்றை சோழ இளவரசன் விக்கிரமனையும், அவனது குதிரையையும் தவிர வேறு எவரும் கேட்டிருக்க முடியாது.
இவை மட்டுமா? இன்னும் எத்தனை எத்தனையோ, நான் நேரில் பார்த்திருக்க முடியாத சம்பவங்கள், …வரலாறுகள்…. டைனாஸோர்களின் காலத்தில் நான் பிறந்திருக்கவில்லை. பெர்லின் சுவர் கட்டப்பட்ட போதும், பின்னர் தகர்க்கப்பட்ட போதும், புத்தபிரானுக்கு சுஜாதை முதன்முதலாக பிட்ஷை அளித்த போதும், மார்க்ஸ் ஜென்னி இருவரும் உயிருக்குயிராய்க் காதலித்த போதும், மார்க்கோ போலோ மதுரையின் வீதிகளில் திரிந்த போதும், பென்னி குக் பெரியார் அணையைக் கட்டியபோதும் கூட நான் இருந்திருக்கவில்லை. ஆனால் இவையனைத்தும் நேரில் பார்த்ததைப் போல் நான் அறிவேன்.
காலம் ஒரு நதி…. புத்தகங்கள் அதில் படகுகள். பல படகுகள் அதில் பயணித்தாலும் நதியின் வேகம் தாங்காது பல நொறுங்கிப் போகின்றன. ஒருசில, மிக ஒருசில மட்டுமே காலத்தின் வேகத்தைத் தாங்கி, நம்மை ஆசீர்வதிக்க. இன்று நம் காலம் வரை தொடர்ந்து பயணித்துள்ளன.
அப்படிப் பயணித்து வந்த புத்தகங்கள் எனக்குக் காட்டிய வரலாறுகள், கதைகள், புதிய வெளிச்சங்கள்தான் மேலே கூறப்பட்ட அனைத்தும். அவை இல்லையெனில் நான் இல்லை. எங்கெங்கோ நடந்த சம்பவங்கள், நாம் பார்த்தறியாத மனிதர்கள், இடங்கள், கட்டிடங்கள், உண்மை, கற்பனைச் சம்பவங்கள் எல்லாவற்றையும் நமக்கு காட்டித் தருவது புத்தகங்கள்தான்.
அனைவருக்கும் உலக புத்தக தின
வாழ்த்துகள் !
வாசிப்புலகிற்கு உங்களை கை பிடித்து கூட்டிச் செல்லும் இந்த வசீகர எழுத்துக்களுக்குச் சொந்தக் காரர் எழுத்தாளரும் எங்கள் மதுரைக் கோட்டத் தோழருமான தோழர் ச.சுப்பாராவ்.
வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்திய ஒரு முக்கியமான உரையை இங்கே மீள் பதிவு செய்கிறேன். எங்கள் மகத்தான தலைவர் தோழர் சரோஜ் சவுத்ரி அவர்கள் இறுதியாக பங்கேற்ற அகில இந்திய மாநாட்டில் ஆற்றிய உரை. நேரில் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது எனது பாக்கியம்.
தாகூர் பற்றி நான் குறிப்பிட விரும்புகிறேன். அவர் தனது எண்பதாவது பிறந்த நாளின் போது விடுத்த செய்தியை சொல்ல விரும்புகிறேன். அதற்கடுத்த சில மாதங்களில் அவர் இறந்து விட்டார். “ மனிதனின் மீது நம்பிக்கை இழப்பது மிகப்பெரிய பாவம் “ என்கிறார் அவர். எவ்வளவு மகத்தான செய்தி இது! தாகூரால் மட்டுமே இப்படி சொல்ல முடியும். “முறையற்ற வழிகள் மூலம் நீங்கள் செய்கிற செயல்கள் உங்களுக்கு தற்காலிகமாக பயனளிக்கலாம். ஆனால் நீங்கள் தரைமட்டத்திற்குச் சென்று விடுவீர்கள்” என உபனிஷத்திலிருந்து அவர் மேற்கோள் காண்பிக்கிறார். அவர் யாருக்கு ஆதரவாக உள்ளார்? யாரை தட்டி எழுப்புகிறார்?
சுரண்டலுக்கு உட்படுத்தப்பட்ட, கொடுமைக்குள்ளான மக்களின் குருதியால் ஆதிக்கவாதிகளால், வெற்றி பெற்றவர்களால் சேறாக்கப்பட்ட வரலாற்றின் சாலைக்கு, வரலாற்றுச் சக்கரத்தை எடுத்து வந்த சாமானிய அடிமை மனிதனுக்கு அவர் வேகம் அளிக்கிறார். வரலாற்றுச்சக்கரம் முன்னோக்கி எடுத்துச் செல்லப்பட வேண்டும் என அவர் பேசுகிறார். நாகரீக உலகின் அனைத்து வளங்களையும் உருவாக்கியது மனிதன். உலகெங்கும் நாம் பார்க்கிற அனைத்து அற்புதங்களும் பிரம்மாண்டங்களும் மனிதனின் அபாரமான படைப்புக்கள். அறிவியல், தொழில் நுட்ப முன்னேற்றங்களுக்கு பின்னணியில் இருப்பது மனிதன்தான். தாகூர் இதை நன்கறிந்தவர். அதனால்தான் அவர் சாமானிய மனிதனுக்கு எழுச்சியூட்டுகிறார். ஏனென்றால் நாளைய உலகை வெல்லப்போவது அவன்தான். இதுதான் இன்றைய நிலையும் கூட. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அவர்கள் நம் நம்பிக்கையை கொள்ளையடிக்கப் பார்க்கிறார்கள், நம் எதிர்காலத்தை பறிக்க விழைகிறார்கள். நம்முடைய உறுதியை சிதைக்க எண்ணுகிறார்கள். நம்முடைய வளங்களை சூறையாட நம்மிடமிருந்து அனைதையும் பறிக்கப்பார்க்கிறார்கள். எனவே தோழர்களே, மாநாட்டிலிருந்து நாம் செல்கையில் நம்முடைய உறுதியை தக்க வைக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். எதிர்காலத்தின் மீது நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். நமக்கு எதிரான நடவடிக்கைகள் திட்டமிட்டு செயல்படுத்தப்படுகின்றன. எனவே அனைத்து தோழர்களையும் அதிலும் குறிப்பாக இளைய தோழர்களை, உலகம் எத்திசை வழியில் செல்கிறது என்பதை அறிந்து கொள்ள மேலும் மேலும் படியுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
வியட்னாமின் வரலாற்று நாயகரை நான் நினைவு கொள்கிறேன். யார் அவர்?
(அரங்கிலிருந்து ஹோசிமீன் “ என்று குரல்கள்), ஆம் ஹோசிமீன், அவரது பெயர் இன்னும் நினைவில் உள்ளது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. வியட்னாமின் விவசாயிகள் தங்களின் மிக்ச்சாதாரண ஆயுதங்களோடு மிக உயர்தர, நவீன ஆயுதங்களை உடைய அமெரிக்கர்களோடு வாழ்வா- சாவா என்று யுத்தம் நடத்திக் கொண்டிருந்தார்கள். தோழர் ஹோசிமீன் எப்போதெல்லாம் போர் முனைக்கு தனது வீரர்களை சந்திக்க செல்கின்றாரோ, அப்போதெல்லாம் அவர் அவர்கள் மத்தியில் உரையாடுவார். அப்படிப்பட்ட சில உரைகளைப் படித்து நான் ஆச்சரியப்பட்டுள்ளேன்.
அதிகமான படைகளையும் அதி நவீன ஆயுதங்களும் கொண்ட அமெரிக்கப் படையோடு அற்பமான ஆயுதங்களைக் கொண்டு போரிடும் வீரர்கள் மத்தியில் அவர் பேசுவார்.” தோழர்களே நாம் மிகவும் நன்றாக போரிடுகின்றோம். இந்த நாடு உங்கள் அனைவரையும் மிகவும் பாராட்டுகின்றது, போற்றுகிறது. ஏனென்றால் நீங்கள் உங்கள் உயிர்களை தியாகம் செய்கின்றீர்கள். இந்த தேசத்தின் சுதந்திரத்திற்காக, ஜனநாயகத்திற்காக நீங்கள் உங்கள் உயிரையே பலி கொடுக்க துணிந்துள்ளீர்கள். எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் படியுங்கள். கடவுளுக்கு அடுத்தபடியாக உங்களிடம் உள்ள மிக முக்கியமான ஆயுதம் புத்தகம்தான்” என்பார்.
அதிகம் படியுங்கள். மனித குல வரலாறு எப்படி முன்னேறுகிறது என்பதை படியுங்கள். தயவு செய்து மேலும் மேலும் படியுங்கள்.
No comments:
Post a Comment