Friday, April 16, 2021

கணக்கில் வராவிட்டாலும்

 


இன்றைய நாள் வாழ்வின் முக்கியமான நாள்.

முப்பத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு இதே நாளில்தான் எல்.ஐ.சி நிறுவனத்தில் பயிற்சி உதவியாளராக பணியில் சேர்ந்த நாள்.

நுழைவுத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றைக் கடந்து தேர்வாகி சென்னையில் உள்ள யுனைட்டெட் இந்தியா கட்டிடத்தில் 16.04.1986 அன்று 15 நாட்கள் பயிற்சி தொடங்கியது. அதன் பின்பு இரண்டரை மாதம் நெய்வேலி கிளையில் பயிற்சி. பிறகே தகுதி காண் பருவம் என்பது தொடங்கியது.

அப்போதெல்லாம் பயிற்சிக் காலம் என்பது பணிக்காலத்தில் சேர்த்துக் கொள்ளப்படாது. 1990 களில் இது மாறி விட்டது. பணிக்காலமாக கணக்கில் வரா விட்டாலும் எல்.ஐ.சி நிறுவனத்தில் என் பயணம் தொடங்கிய நாளை வாழ்க்கைக் கணக்கில் சேர்க்காமல் இருக்க முடியுமா?

அன்று மட்டும் பணியில் இணைந்தவர்கள் 125 பேர். அவர்களில் பலரும் ஓய்வு பெற்று விட்டார்கள். சிலர் நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள். சிறிய வயதிலேயே பணி கிடைத்து விட்டதால் எனக்கு இன்னும் நான்கு வருடம் மூன்று மாதம் பாக்கி உள்ளது.

அன்றைய நாளில் பசுமையாக இருப்பது ஒரு நிகழ்வுதான்.

அன்றைய பயிற்சி வகுப்பு முடிந்ததும் சங்கத்தின் சார்பில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தார்கள்.

மாலை ஐந்து மணிக்கு சங்கத்தை சேர்ந்தவர்கள் வந்தார்கள். அவர்கள் வருவதைப் பார்த்ததும் அங்கிருந்த அதிகாரிகள் அவசரம் அவசரமாக மைக்கை அப்புறப்படுத்தினார்கள்.

வெள்ளை சட்டை, வெள்ளை பேண்ட் அணிந்த ஒருவர் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு பேசத் தொடங்கினார்.

“மைக்கை அங்கேயே வையுங்கள் என்று எங்களால் சொல்லி இருக்க முடியும். ஆனால் எங்கள் குரல் இந்த அரங்கில் உள்ள உங்களை மட்டுமல்ல அதைத் தாண்டியும் செல்லும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு”

என்று அவர் ஆரம்பிக்க அப்படியே அனைவரையும் ஈர்த்துக் கொண்டார். எல்.ஐ.சி யின் பயணம் மட்டும் அன்று தொடங்கவில்லை. தொழிற்சங்கப் பயணமும் தொடங்கிய தருணம் அது.

இந்த திங்கட்கிழமை அன்று அவரை சென்னையில் அவரது வீட்டில் சந்தித்தேன். நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தேன்.

அவர் அன்றைய தென் மண்டல இணைச்செயலாளர் தோழர் எஸ்.ராஜப்பா.

 

பின்னாளில் தென் மண்டலப் பொதுச்செயலாளராகவும் அகில இந்திய துணைத்தலைவராகவும் செயல்பட்டு எண்பத்தி ஐந்து வயதை எட்டியும் இன்றும் ஒருங்கிணைக்கப்படாத பல துறைகளில் தொழிற்சங்கங்களை வழி நடத்திக் கொண்டிருப்பவர்.

 அவரிடம் அன்றைய நாளை நினைவு படுத்தினேன். அவர் வேறு ஒன்று சொன்னார் அது கடைசியில்.

 பொருளாதார ரீதியில் முன்னேற்றம் பெற  எல்.ஐ.சி காரணம் என்றால் அதனை எல்.ஐ.சி யிடமிருந்து பெற்றுக் கொடுத்தது அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம். கொஞ்சமே கொஞ்சமாவது சமூக பொறுப்புணர்வு, அரசியல் புரிதல் உள்ளதென்றால் அதற்கு முழு முதல் காரணம் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கமே.

 முப்பத்தி ஐந்து வருடங்களுக்கு முந்தைய இன்றைய நாள் எல்.ஐ.சி யின் கணக்கில் வராவிட்டால் என்ன! தொழிற்சங்கக் கணக்கில் வந்து விட்டது. அது போதும்.

 பிகு: இன்னும் நான்கு வருடங்களில் ஓய்வு பெறப் போகிறேன் என்று தோழர் ராஜப்பாவிடம் சொன்ன போது “ராமன் என்றால் இப்போதும் என் நினைவில் வருவது  நெய்வேலியில் பார்த்த அந்த சின்ன பையனைத்தான்” என்று சொன்னார். மனதளவில் நான் இன்னும் சின்னப் பையன் தானே!

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete