Thursday, April 8, 2021

ரோடுய்யா, சீமான் மேடை இல்லை



இன்று காலை அலுவலகம் வரும் போது பக்கத்திலேயே இன்னொரு இரு சக்கர வாகனம். வாகனத்தை ஓட்டியவர் பின்னால் அமர்ந்தவரிடம் உரத்த குரலில் கத்திக் கொண்டு வந்தார்.

 “அண்ணன் இல்லைன்னா இவனுங்க எல்லாம் யாருன்னு ஒரு நாய்க்குக் கூட தெரியாது. ஏதோ பெரிசா ரூம் போட்டானுங்கன்னு வீடியோ போடறானுங்க . . . ……

 ………………………….. அண்ணன் யாரு. அவரு எப்போ டைரக்ட் செய்யப் போனாலும் கோடிக் கணக்கா பணம்  கொட்டும். இந்த பிச்சைக்கார ……………….  எல்லாம் அண்ணனுக்காக செலவு செய்ய வேண்டிய அவசியமே கிடையாது”

 ரொம்பவுமே உணர்ச்சி வசப்பட்டு பேசிக்கிட்டு இருந்தாரு அந்த நாதக தம்பி. அதில ஒன்னும் பிரச்சினை இல்லை.

 ஆனால் மேடையில் பேசுவது போல ஒரு நொடி வலது கையை உயர்த்துவது, அடுத்த நொடி இடது கையை உயர்த்துவது. வானத்தை நோக்கி காற்றில் குத்து விடுவது என்ற அவரது செய்கைதான் பயம் கொடுத்தது.

 இதற்குள்ளாக எங்கள் பகுதியில் உள்ள சிறு பாலம் வந்து விட்டது. குண்டும் குழியுமாக உள்ள அந்த பாலத்தில் இரண்டு கைகளையும் வாகனத்தின் மீது வைத்திருந்தாலே பேலன்ஸ் கிடைப்பது சிரமம்! இதிலே ஒற்றைக் கையில் வண்டியைப் பிடித்து சாகஸம் காட்டுபவர் நம் மீது விழுந்தால் என்ன ஆவது என்ற அச்சம் வந்தது.

 வாட்சைப் பார்த்தேன். இரண்டு நிமிடம் நின்றாலும் கூட பத்து மணிக்கு முன்பாக அலுவலகத்திற்கு போய் விடலாம் என்று நம்பிக்கை வந்ததால் பொறுத்திருந்து அந்த தம்பிக்கும் எனக்கும் மத்தியில் பாதுகாப்பான இடைவெளியை உருவாக்கிக் கொண்டேன்.

பார்த்துப் போ என்று சொல்லலாமா என்று யோசித்தேன். உணர்ச்சி வேகத்தில் ஏற்கனவே அந்த தம்பி  புள்ளி வைத்த வார்த்தைகளாக பேசிக் கொண்டிருந்தது. எதற்கு தேவையில்லாமல் நாமும் …………………… வார்த்தைகளில் திட்டு வாங்க வேண்டும் என்று அமைதியாக வந்து விட்டேன்.

 இளைஞர்களில் ஒரு பகுதியை சீமான் சீரழித்து வைத்துள்ளார் என்பது வருத்தமானது.

 அவர்கள் தலைவர் ஆடம்பர வாழ்க்கை யாருடைய செலவில் என்பதைக் கூட புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளனர்.

  

No comments:

Post a Comment