Friday, April 16, 2021

கோழி கூவாவிட்டால் கீழ்வானம்??????


 


 13.04.2021 அன்று எங்கள் வேலூர் கோட்டம் சார்பில் நடைபெற்ற டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் இணைய வழி சிறப்புக் கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றிய தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத்தலைவர் தோழர்  கே.சுவாமிநாதன் அவர்களின் உரையில் சில பகுதி இங்கே எழுத்து வடிவில்.

 முழுமையான உரையை கேட்க இந்த யூட்யூப் இணைப்பிற்கு செல்லவும்

 


 

*நாளொரு கேள்வி: 15.04.2021*

 

தொடர் எண் *319*

 

*அண்ணல் அம்பேத்கர்! தலை வணங்குகிறோம்!*

 

இன்று நம்மோடு தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் *.சுவாமிநாதன்*

######################

 

*கோழி கூவாவிட்டால் கீழ்வானம் சிவக்காதா!*

 

*கேள்வி:*

 

அண்ணல் அம்பேத்கர்  வாழ்க்கை, வழித்தடம் நமக்கு தரும் செய்தி என்ன?

 

*.சுவாமிநாதன்*

 

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் என்றுமே ஓர் துயர் தரும் சூழலிலேயே அனுசரிக்கப்படுகிறது. இவ்வாண்டும் அதற்கு விதி விலக்கல்ல. நேற்று நாடு முழுவதும் *துயரோடும், துயரை எதிர் கொள்ளும் உறுதியோடும்* உணர்வு பூர்வமாக அனுசரிக்கப்பட்டுள்ளது அம் மாமனிதரின் பிறந்த நாள்.

 

இரண்டு இளைஞர்களை கோரமான படுகொலையால் இழந்த இரு கிராமங்களின் கண்ணீர் உலராத சூழலில் அம்பேத்கரின் பிறந்த நாள் வந்திருக்கிறது. *சோகனூர், செம்பேடு என்ற அந்த இரண்டு கிராம மக்கள் இழக்கக் கூடாத வயதில் அந்த இளைஞர்களை இழந்திருக்கிறார்கள்.* அந்த இருவரின் இணையர்கள், ஒருவரின் 7 மாதக் குழந்தை, இன்னொருவரின் வயிற்றில் சுமந்து கொண்டிருக்கும் இன்னும் பூமியைப் பார்க்காத 3 மாதக் கரு... இவர்களுக்கெல்லாம் இந்த சமூகம் என்ன பதில் சொல்லப் போகிறது

 

இது அம்பேத்கரின் 131 வது பிறந்த நாள். இன்றைய இந்தியக் கிராமங்களே இவ்வளவு ஒடுக்குமுறைகள் நிறைந்ததாக இருந்ததெனில் அம்பேத்கர் எவ்வளவு நெருப்பு வளையங்களைத் தாண்டி வந்திருப்பார்

 

அம்பேத்கர் என்றால் "அரசியல் சாசன சிற்பி" என்ற ஒரே பிம்பம்தான் பள்ளிக் கூடங்களில், பாடப் புத்தகங்களில் காட்டப்பட்டு வந்துள்ளது. "அரசியல் சாசன சிற்பி" என்பது ஒன்றும் சாதாரண பணி அல்ல. *அவரின் உளியால் செதுக்கப்பட்ட அந்த பெருங்கோட்டையே இன்றும் பிற்போக்கு சிந்தனையாளர்களால் எவ்வளவு முயன்றாலும் சிதைக்கப்பட முடியாததாக திகழ்கிறது.* அதற்கு காரணம் அம்பேத்கரின் அற்புதமான எழுத்து வன்மை மட்டுமல்ல. அவரின் தெளிந்த சிந்தனை மட்டுமல்ல. அவற்றை இந்திய மக்களின் சமூக எழுச்சியை, எதிர் பார்ப்புகளை உள் வாங்கி உருவாக்கியதுதான். *காலம் தனக்கான மனிதர்களைத் தேடும். அது போல கால மகளும் தான் சாய்ந்து கொள்ள தேடிய தோள்களில் ஒன்று அம்பேத்காருடையது.* 

 

அவர் டாக்டர் பட்டம் பெற்றது பொருளாதாரத்தில்... அவர் தொழிலாளர் நலனுக்காக குரல் கொடுத்தவர்... பாலின சமத்துவத்திற்கான முனைப்பில் மத்திய அமைச்சர் பதவியையே தூக்கி எறிந்தவர்... காலமெல்லாம் சாதிய ஒடுக்குமுறையற்ற சமுகத்திற்காக தன்னை அர்ப்பணித்தவர். நவீன இந்தியாவின் உருவாக்கத்தில் அவரின் கருத்துக்கள் பெரும் பங்களிப்பை நல்கியவை. என்றாலும் அவரைப் பற்றிய முழு சித்திரம் பொதுச் சமூகத்திற்கு கிடைக்கவில்லை. *இது இந்தியச் சமூகத்தின் முக்கியமான முரணின் வெளிப்பாடு.*

 

1991 ல் அம்பேத்கரின் நூற்றாண்டு கொண்டாடப்படுகிற வரை பல அறிவு ஜீவிகளின் சிந்தனை வளையத்திற்குள் கூட அம்பேத்கர் வராமல் இருந்தார். *கோழி கூவாவிட்டால் கீழ்வானம் சிவக்காமல் இருந்து விடுமா?* ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சி சமூகத்தின் மனச் சாட்சியை அதன் வேர்களைப் பிடித்து உலுக்கியது. பொதுச் சமூகத்தின் முன்பு, அதன் சிந்தனைப் போக்குகள் முன்பு அம்பேத்கரின் பேருருவம் கம்பீரமாக எழுந்து நின்றது

 

அம்பேத்கர் பற்றி பொதுப் புத்திக்குள் சொருகப்பட்ட *"அரசியல் சாசன சிற்பி"* என்ற பிம்பம் கூட ஏதோ ஒரு வகையில் அவரை சித்தரிக்க வேண்டுமே என்ற கட்டாயத்தில் உருவானதுதான். ஆனால் "அரசியல் சாசன சிற்பிக்கு" துவக்க கட்டத்தில் அரசியல் நிர்ணய சபைக்குள் நுழைகிற வாய்ப்பே கூட அவ்வளவு எளிதாக அமையவில்லை என்பதே கசப்பான வரலாறு.

 

அம்பேத்கர் அவ்ரின் சொந்த மாநிலமான மகாராஷ்ட்ராவில் இருந்து அரசியல் நிர்ணய சபைக்கு முதலில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அவ்வாறு அவர் தேர்ந்தெடுக்கப்படுவதை வல்லபாய் படேலும், அன்றைய மும்பை தலைமை அமைச்சரான பி.ஜி.கெர் ரும் விரும்பவில்லை என அம்பேத்கரின் *"பீமாயணா"* வாழ்க்கை வரலாற்று நூலின் ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளனர். ஆகவே அவர் கிழக்கு வங்காளத்தில் இருந்த *ஜெசோர்- குல்னா* தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார். *யாருடைய ஆதரவோடு...* முஸ்லீம் லீக் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்களில் ஒருவரான ஜோகேந்திர நாத் மண்டல் ஆதரவோடு...

 

இன்று அம்பேத்கரை இஸ்லாமிய சமுகத்திற்கு எதிராக நிறுத்த முயற்சிகள் நடக்கின்றன. ஆனால் வரலாறு எனும் அக்னிப் பரிட்சையில் இப் பொய்களெல்லாம் பொசுங்கிப் போய் விடும்! (நமக்கு சொல்லப்பட்டு வந்துள்ள அக்னிப் பரிட்சைகள் எல்லாம் அநீதிகளை நிலை நாட்டவே இருந்திருக்கின்றன என்பது தனிக் கதை.)

 

பிரிவினையின் போது 51% இஸ்லாமியர் வாழ் பகுதிகள் பாகிஸ்தானுக்கு தரப்பட்டன. ஆனால் அம்பேத்கரைத் தேர்ந்தெடுத்த ஜெசோர்- குல்னாவும் 50% க்கும் கீழே இஸ்லாமியர் வாழ்கிற பகுதியாக இருந்தும் கூட பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டது. *இது அம்பேத்கர் இந்திய அரசியல் சாசன சபையில் இடம் பெறுவதையே கேள்விக் குறியாக்கியது.* நாடு முழுமையும் எழுந்த சந்தேகம், கேள்விகள், சர்ச்சைகள் அம்பேத்கருக்கு வழி ஏற்படுத்தி தந்தது. மஹாராஷ்ட்ராவில் எழுந்த ஒரு காலியிடம் வாயிலாக அம்பேத்கர் அரசியல் சாசன நிர்ணய சபையில் இடம் பெற்ற கதை இதுதான்.

 

*296 உறுப்பினர்களில் ஒருவராய் அரசியல் நிர்ணய சபைக்குள் நுழைய இவ்வளவு தடைகளைத் தாண்டிய அம் மாமனிதர் அரசியல் சாசன வரைவுக் குழுவின் தலைவராக உயர்ந்ததுதான் அவருக்கு பெரிய சிம்மாசனத்தை மக்கள் மனங்களில் போட்டு அமர வைத்துள்ளது.*

 

அம்பேத்கார் வரைந்த அரசியல் சாசனம் உருவாக்கிய நாடாளுமன்றத்திற்கான தேர்தல்களில் 1952, 1954 இரண்டு முறைகளும் அவர் வெற்றி பெறவில்லை. ஆனால் இன்று நாடாளுமன்ற ஜனநாயகம் தாக்கப்படும் போது அம்பேத்கர் அதைக் காப்பதற்கான ஆயுதமாக நம் கைகளில் தவழ்கிறாரே அதுவே அவரது வெற்றி. *விடியலுக்கான கருத்தியலை, ஆதிக்கத்திற்கு எதிரான போராளிகளை சமகாலம் புரிந்து கொள்ளத் தவறினாலும் எதிர் காலம் கொண்டாடும் என்கிற நம்பிக்கையைத் தருகிற உதாரணம் இது.* அரசியல் சாசனத்தின் முன்னுரையை வீதிகளில் உறுதி மொழியாக ஏற்று அதன் விழுமியங்களைப் பாதுகாக்க முற்போக்காளர்கள் கை கோர்க்கும் காலம் இது

 

அம்பேத்கர் இந்திய ஜனநாயகம் மிளிர, வளர ஆற்றியுள்ள அறிவார்ந்த பங்களிப்பு அற்புதமானது. அவர் தனி நபர் வழிபாட்டை மறுதலித்தார்

 

*"ஒருவருக்கான நன்றி பாராட்டுவதற்கு எல்லைகள் இருக்கின்றன. ஐரிஷ் அறிஞர் டேனியல் கானலின் வார்த்தைகளில் ஒரு மனிதன் தனது சுயமரியாதையை இழந்து நன்றி பாராட்டலாமா? ஒரு பெண் தன்னையே இழந்து நன்றி பாராட்ட முடியுமா? ஒரு தேசம் சுதந்திரத்தை இழந்து நன்றி பாராட்ட இயலுமா?"* என்ற அவரின் கேள்வி இன்றும் நமக்கு வெளிச்சம் தருவது

 

அரசியலில் தேவதூதர்கள் வருகைக்கு ஏங்குவது, ஒற்றை நாற்காலிகளை மேடையில் போட்டு உட் கட்சி சனநாயகத்தை மறுப்பது, நிதி வரத்தின் மூலம் மறைத்து டிஜிட்டல் ஸ்கிரீன்களில் பளிச்சிடுவது, ஹெலிகாப்டர்களில் வலம் வந்து 'பதினோராவது' அவதாரம் எடுப்பது... ஆகிய மயக்கங்களையெல்லாம் தெளிவிக்கும் வார்த்தைகள் அவை

 

அவர் *"ஒரு மனிதர் ஒரு வாக்கு"* என்கிற அரசியல் உரிமை மட்டும் போதாது. அவர் *"ஒரு மனிதர் ஒரு மதிப்பு"*  என்கிற சமத்துவம் எட்ட்ப்படாத வரை இந்த ஜனநாயகம் உண்மையானதாக இருக்காது என்றார். இன்று தேர்தல் களத்தில் வாக்குக்கு பணம், கார்ப்பரேட்டுகளின் தலையீடுகளுக்கு வழி வகுக்கும் தேர்தல் பத்திரம், ஊடக செய்திகளுக்கு கைம்மாறு, அடித்தள அரசியல் செயல்பாடுகளை கார்ப்பரேட் மயமாக்குவது ஆகிய போக்குகள் அம்பேத்கரின் எச்சரிக்கையை நமக்கு நினைவூட்டுகின்றன

 

இன்று நாடாளுமன்ற ஜனநாயகம் காயப்படுகிறது. *பெரும்பான்மை* என்பது மூர்க்கத்தனமாக மாற்றுக் கருத்துக்களை மறுதலிக்கிறது. *பெரும்பான்மை இருக்காதோ என்றால்* வாக்கெடுப்பே மறுக்கப்படுமென்பதுதான் விவசாய சட்டங்கள் மாநிலங்களவையில் சந்தித்த அவலம். *தனி மசோதாக்களாக வர வேண்டியவை கூட* நிதி மசோதாக்களுக்குள் சொருகப்பட்டு அவற்றின் மீதான கூர் கவனம் தவிர்க்கப்படுமென்பதற்கு எல்..சி பங்கு விற்பனை முடிவு உதாரணம். *நாடாளுமன்ற நிலைக் குழுக்கள் செயல் இழந்து காட்சி அளிப்பது* நீர்ப்பிற்கு சாட்சியம்

 

அம்பேத்கர் சொன்னார். *"அரசியல் சாசனம் நல்லதா கெட்டதா என்பதை விட அதை அமலாக்குகிற பொறுப்பில் அமர்த்தப்படுபவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா? என்பதே முக்கியம்"*

 

தீர்க்க தரிசனமான வார்த்தைகள் இன்று நம் முன் நிதர்சனமாய்...

 

அரசியல் சாசன சிற்பி என்பது அவரைப் பற்றிய முழுப் பரிணாமமாக இல்லாவிடினும் அந்த ஒரு கீற்றே இன்று பிரம்மாண்ட வெளிச்சம் தருகிறதென்பது அவரது வாழ்க்கையின் வெற்றி

 

இதை விட என்ன செய்தி வேண்டும் அவரின் பிறந்த நாளில்?

 

தலை வணங்குவோம்

 

******************

*செவ்வானம்*

 

No comments:

Post a Comment