Tuesday, April 6, 2021

பள்ள இடையம்பட்டி தேர்தல் அனுபவங்கள்

 



2011 சட்டமன்றத் தேர்தலில் மைக்ரோ அப்சர்வராக பட்ட அவஸ்தைகள் குறித்து முந்தைய பதிவில் முன்பு எழுதியிருந்தேன்.  வாக்குச்சாவடி அனுபவம் எப்படி இருந்தது என்று முன்பு எழுதிய பகிவை மீண்டும் பகிர்ந்து கொள்கிறேன். 2011 க்குப் பிறகு அடுத்து வந்த தேர்தல்களில் என்னவோ எங்களை அழைக்கவில்லை.

புதிதாக உருவான ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம். ராணிப்பேடை கிளைகளில் உள்ள ஊழியர்கள் மட்டும்  இத்தேர்தலில் மைக்ரோ அப்சர்வர்களாக பணியாற்ற அழைக்கப்பட்டுள்ளனர். 

 மைக்ரோ அப்சர்வர்களாக பணியாற்ற விரும்புபவர்கள் தங்கள் பெயரை அளிக்க வேண்டும் என்று கேட்ட போது வாக்குச்சாவடிக்கு உள்ளே இருக்கும் அனுபவம் வேண்டும் என்பதால் இப்பணிக்கு விருப்பம் தெரிவித்திருந்தேன். தமிழக  சட்ட மன்றத் தேர்தலில்  அணைக்கட்டு  தொகுதிக்கு  உட்பட்ட   பள்ள இடையம்பட்டி  கிராமத்து  வாக்குச்சாவடிக்கு நுண் பார்வையாளராகபணிக்கு சென்றிருந்தேன். வேலூர் நகருக்கு மிக அருகாமையில் உள்ள கிராமம்தான்.   காலை ஐந்தரை மணிக்கு  இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டு ஆறே கால் மணிக்கெல்லாம்  சென்று விட்டேன்.  அடுத்த கிராமமான மேட்டு இடையம்பட்டியாக  இருந்தால் வண்டியில்  செல்வது சிரமமாக இருக்கும் என்றார்கள். நான் வசதியாகவே போய் விட்டேன்.   

 

வாக்குப்பதிவு  தொடங்கும்   நேரத்திற்கு  முன்பாகவே  மக்கள்  வாக்களிக்க  திரண்டு வந்து விட்டனர்.  நான் பணியில் இருந்த வாக்குச்சாவடி அமைந்திருந்த பள்ளியிலேயே   இன்னும் ஒரு வாக்குச்சாவடியும்  அமைந்திருந்தது. அங்கே இன்னும்   அதிகக் கூட்டம். 

 

மாதிரி வாக்குப்பதிவு, பெட்டிக்கு சீல் வைத்தல்  போன்ற சடங்குகள் எல்லாம்  முடிந்து  எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் எட்டு மணிக்கெல்லாம்  தேர்தல்  வாக்குப்பதிவு  தொடங்கியது. வரிசையில்  நிற்பதற்கோ அல்லது வரிசை மெதுவாக நகர்ந்தாலோ   ஒரு சின்ன  முணுமுணுப்பு  கூட  இல்லாமல்  அமைதியாய்  இருந்தனர். வயதானவர்கள்,   கைக்குழந்தைகளோடு   வந்தவர்களை   முன்னதாக  வாக்களிக்க   அனுமதித்ததை    ஒருவர் கூட ஆட்சேபிக்கவில்லை.  நகரங்களில்  இது சாத்தியமில்லை  என்றே கருதுகிறேன். 

 

தேர்தல் தொடர்பாக  நாங்கள் கண்காணிக்க வேண்டியவை  என்று  ஒரு  படிவம் முப்பத்தி ஒன்பது கேள்விகளாக  தரப்பட்டிருந்தது.  அதைத்தவிர  எனது பார்வையில்  நான் கண்ட சில காட்சிகள். 

 

எண்பத்தி ஐந்து சதவிகித வாக்குப்பதிவு  நடைபெற்றிருந்தது. 638  வாக்காளர்களில்  540  பேர் வாக்களித்திருந்தனர். இதில் பெண்கள்தான்  அதிகம். 279 பெண்கள், 261  ஆண்கள்.  

 

பெண்களில் பெரும்பாலானவர்கள்  சுகாதாரமான, சத்தான உணவு  கிடைக்காதவர்கள். வறுமையின் பிடியில்  தவிப்பவர்கள். மஞ்சள்  கயிற்றைத்தவிர  வேறு நகைகள்  எதுவும்  அணியாதவர்கள்.  ஆனால்  வாக்களிக்க ஆர்வம் காண்பித்தார்கள்.

 

ஆண்கள்   ரொம்ப யதார்த்தமாகத்தான்  இருந்தார்கள். மடித்துக் கட்டிய  வேட்டியையோ, கைலியையோ  கீழே இறக்கி விடாமல்தான் நின்றார்கள்,  வந்தார்கள், வாக்களித்தார்கள், சென்றார்கள். குறைந்த பட்சம்  ஐம்பது சதவிகித ஆண்கள்  குடித்து விட்டுத்தான்  ஒட்டு போடவே  வந்திருந்தார்கள்.  விடுப்பில் இருந்த  ஒரு போலீஸ்காரர் மட்டும்தான்   போதையில் தகராறு  செய்தாரே தவிர மற்ற குடிமக்கள் அமைதியாகவே  வந்து போனார்கள்.

 

பல இளைஞர்கள்  வாக்களித்த பிறகுதான் பாட்டிலை    தொட வேண்டும் என்று வாக்களிப்பதை  ஏதோ  விரதம் இருப்பது போல  பேசிக்கொண்டிருந்தார்கள்.  டாஸ்மாக் விடுமுறைக்கெல்லாம்  எந்த  மரியாதையும் இல்லை  என்று புரிந்தது. வோட்டு போட்டு வந்தவர்களுக்கெல்லாம் டாஸ்மாக் டோக்கன் தரப்படுவதாக உதவி தேர்தல் அதிகாரி தகவல் சொன்னார். மதுவை ஒழிக்க அவதாரம் எடுத்துள்ளதாக சொல்லும் கட்சிதான் டோக்கன் அளித்த கட்சி.

 

வெப் காமரா மூலம் ஒவ்வொருவரும் படம் பிடிக்கப்பட்டனர். அதன்   விளைவு என்னவானது என்றால் பலரும் கையில் மையிட்டு, கையெழுத்தோ,  கைநாட்டோ  போட்ட  பின் வெப் காமரா பக்கம்   போனார்களே  தவிர, வாக்களிக்கும்  இடத்திற்கு செல்லவில்லை. வோட்டு போட வேண்டாமா என்று சொல்லி சொல்லி அனுப்ப வேண்டியிருந்தது. 

 

குறைந்தது அறுபதிலிருந்து  எழுவது  பேராவது  அடையாள மையை   அழித்து விட்டார்கள். அவர்களை திட்டி மீண்டும்  ஒரு முறை மை  வைக்க வேண்டியிருந்தது.  

 

பாமக, தேமுதிக ஆகியோர் போட்டியிட்ட தொகுதி அணைக்கட்டு தொகுதி.  இரு கட்சிகளின் முகவர்களும்  வாக்கு பதிவு தொடங்கும்  போது அக்னி நட்சத்திரம் பிரபு கார்த்திக் போல உர் உர்  என்று  முறைத்துக் கொண்டே இருந்தாலும் போக போக நெருக்கமாகி விட்டனர்.

 

ஒரே ஒரு கல்லூரி மாணவன் மட்டும் வாக்களிக்க விருப்பமில்லை, 49 ஒ   பயன்படுத்தப் போகின்றேன்  என்றான். தேர்தல் அலுவலர் ஒருவர் அம்மாணவனை  சமாதானப்படுத்தி   வாக்களிக்க வைத்து விட்டார். 

 

ஏன்  அப்படி செய்தீர்கள்  என்பதற்கு அவர் அளித்த விளக்கம் என்ன தெரியுமா?  49  ஒ போட்டால்  ஏராளமான பணி இருக்கிறது. இரண்டு மூன்று ரிஜிஸ்தர் எழுத வேண்டும், பல புள்ளி விபரம் தர வேண்டும்.   இந்த சனியனேல்லாம்  எதுக்கு ? என ஒரே போடாக  போட்டார். 

 

ஏழ்மை நிலையில் உள்ளவர்கள்தான் வாக்களிப்பதில்  ஆர்வமாக உள்ளனர்  என்பதுதான்  எனது அனுபவம்  சொல்லும் உண்மை. 


பிகு " ஏழு மணிக்கு தேர்தல் வாக்குப் பதிவு முடிந்த பின்பு நன்றி தெரிவிக்கும் படம் போடுவதற்கெல்லாம் நடவடிக்கை கிடையாதல்லவா ஆபிஸர்ஸ்?


1 comment:

  1. ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் தான் வாக்களிப்பதில் ஆர்வமாக உள்ளனர் என்பது தான் உண்மை. ஓர் எதிர் பார்ப்பு.

    ReplyDelete