Tuesday, April 30, 2019

தடியடி, தோட்டா, தூக்கு . . .


இன்று மே தினம்.



உலகெங்கிலும் உள்ள உழைப்பாளி மக்கள் உணர்வுபூர்வமாக கொண்டாடும் ஒரு திருநாள். 

தியாகிகளை என்றும் மறக்காத ஒரே வர்க்கம் உழைப்பாளி வர்க்கம்தான்.

எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேர உறக்கம், எட்டு மணி நேர ஓய்வு என்ற முழக்கத்தை முன்வைத்து ஆளும் வர்க்கத்தின் தடியடி, தோட்டாக்கள் மற்றும் தூக்குத்தண்டனை பரிசு பெற்ற சிக்காகோ நகரத்து தியாகிகளை ஒரு நூற்றாண்டு கடந்த பின்பும் உழைப்பாளி மக்கள் மறக்கவில்லை. உலகின் எந்த பகுதியிலும் மறக்கவில்லை.

முன்னெப்போதையும் விட மே தினத்திற்கான தேவை இப்போதுதான் அதிகமாக தேவைப்படுகிறது.

ஆம்

சுரண்டல்கள் அதிகமாகி உள்ளது மட்டுமல்ல அவை புதிய புதிய வடிவங்களையும் அடைந்துள்ளது.

எட்டு மணி நேர வேலை என்பது பல இடங்களில் எட்டாக் கனவாகவே மாறி வருகிறது.

இருக்கும் வேலைகளைப் பறித்து விட்டு  அந்த இன்னலைக் கண்டு மகிழ்ச்சியடைகிற சேடிஸ்ட் முதலாளிகள் அதிகமாகி வரும் நாள் இது.

வேலையைப் பறிக்க முடியாவிட்டாலும் பெற்ற உரிமைகளை பறிக்க முயல்கிற முதலாளிகள், அவர்களுக்கு வால் பிடிக்கும் ஆட்சியாளர்கள் அதிகரித்துள்ள காலம் இது.

உலகெங்கும் இப்படிப்பட்ட நிலைமைகளை பார்க்க முடிகிறது. இந்தியாவிலும் கூட காண முடிகிறது.

ஆனால் இதையெல்லாம் அப்படியே ஏற்றுக் கொள்கிற அடிமைகளின் கூட்டமாக உழைப்பாளி வர்க்கம் இல்லை.

“தொழிலாளி கோடிக் கால் பூதமடா, கோபத்தின் ரூபமடா” என்ற ஜீவாவின் வாசகங்களுக்கு ஏற்ப போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

தங்களின் மீதான அடக்குமுறைக்கு எதிராக, தாக்குதல்களை தகர்த்திட உலகெங்கும் உழைப்பாளி மக்களின் போராட்டம் நடந்து கொண்டே இருக்கிறது.

அந்த போராட்டங்கள் என்றைக்கும் வீண் போகாது. தியாகங்கள் அர்த்தம் இழக்காது.

மே தினம் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல உழைப்பாளி மக்களுக்கு எழுச்சியும் உற்சாகமும் அளிக்கிற நாள்.

நீண்ட நெடிய போராட்டத்தின் இறுதியில் வெற்றி என்றைக்கும் உழைப்பாளி மக்களுக்கே!

அனைவருக்கும்  புரட்சிகர  மே தின வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment