Wednesday, April 17, 2019

இந்தியக் குடியரசை மீட்டெடுப்போம்



புதிய மக்களவையையும் புதிய அரசையும் தேர்ந்தெடுப்பதற்காக ஏழு கட்ட வாக்குப் பதிவை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏபரல் 11 அன்று தொடங்கும் வாக்குப்பதிவு மே 19 அன்று நிறைவடையவுள்ளது. வாக்கு எண்ணிக்கை 23 மே 2019 அன்று நடைபெறவுள்ளது. முடிவுகளும் அன்றே  வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவைத் தேர்தல் உடன் ஆந்திரப் பிரதேசம், ஒடிஷா, சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப் பேரவைத் தேர்தல்களும் நடைபெறவுள்ளது.  நீண்ட காலத்திற்கு முன்பே சட்டப்பேரவை கலைக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சட்டப் பேரவைத் தேர்தலை நடத்துவதில்லை என்று தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. இது ஏமாற்றமளிக்கிறது.  முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய இயலாமை என்று அம்மாநிலத் தேர்தலை தாமதப்படுத்துவதற்கான காரணமாக சொல்லப்பட்டாலும்  அரசியல் காரணிகளே பிரதானமாக இருக்கிறது.

நாட்டின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமான தேர்தல் இது. நாடு சந்திக்கும் பிரச்சினைகளைப் பற்றி விவாதிப்பதற்கான வாய்ப்பாக இத்தேர்தல் அமைந்துள்ளது. அப்பிரச்சினைகளை தீர்ப்பது குறித்து அரசியல் கட்சிகளின் பார்வை என்ன என்பதை மக்களும் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பாகவும் அமையவுள்ளது. எண்ணற்ற பிரச்சினைகள் கொட்டிக் கிடக்கிறது. பொருளாதார, சமூக, பண்பாட்டுத் தளங்களில் ஆழமான சிக்கல் நிலவுகிறது. பொருளாதார வளர்ச்சி என்பது இருப்பினும் கடந்த நாற்பத்தி ஐந்து வருடங்களில் காணாத அளவிற்கு வேலையின்மை பிரச்சினை முற்றியுள்ளது. வளர்ச்சியின் பயன்கள் சில செல்வந்தர்களை மட்டுமே சென்றடைவதால் செல்வப் பகிர்வில் மிகப் பெரிய அசமத்துவ நிலை உருவாகியுள்ளது.

உழைக்கும் மக்களில் ஐம்பது சதவிகிதத்தினர் நம்பியுள்ள விவசாயத்துறை இது வரை காணாத சிக்கலில் மூழ்கியுள்ளது. அதனால் கிராமப்புற இந்தியா பெரும் பாதிப்படைந்துள்ளது. “மேக் இன் இந்தியா” என்றொரு முழக்கம் இருப்பினும் உற்பத்தித் துறை உயிரோட்டம் பெறுவதற்கான அறிகுறியே இல்லை. பண மதிப்பிழப்பு மற்றும் அவசர கதியிலான ஜி.எஸ்.டி அமலாக்கம் ஆகிய இரட்டைத் தாக்குதலில் முறை சாரா தொழில்களில்  லட்சக்கணக்கான வேலைகளை கொன்று விட்டது. இந்தியாவின் தொழில்துறைக்கும் சுயசார்பு பொருளாதாரத்திற்கும் அடித்தளம் அமைத்துக் கொடுத்த பொதுத்துறை நிறுவனங்கள் திட்டமிட்டு சிதைக்கப்படுகின்றது, தாக்கப்படுகின்றது. பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதும் அன்னிய மூலதனத்தையே நம்பியிருப்பதும்தான் இந்த நவீன தாராளமயமாக்கல் அரசை வழி நடத்தும் அடிப்படைக் கொள்கையாக இருக்கிறது.

இந்தியக் குடியரசை கட்டியமைப்பதற்கான அடித்தளமாக விளங்கும் அரசியல் சாசனமே இன்று கேள்விக்குறியாக மாறியுள்ளது. அரசியல் சாசனத்தை மாற்றியமைக்க வேண்டுமென்று வலதுசாரிகள் கூக்குரலிடுகின்றனர். கருத்துரிமை போன்று அரசியல் சாசனத்தால் உறுதியளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் பெரும்  தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. நீதித்துறை மற்றும் ஜனநாயக அமைப்புக்களின் சுதந்திரம் சிதைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படைகளும் அரசியல்மயமாக்கப்படுகின்றன. இந்திய சமூகம் மத ரீதியாகவும் ஜாதிய ரீதியாகவும் கட்டமைக்கப்படுகிறது. மத, மொழி, கலாச்சார பன்முகத் தன்மை மீது அதிகரித்து வரும் தாக்குதல்கள் இந்தியாவின் ஒற்றுமைக்கு மிகப் பெரிய அபாயமாக உருவெடுத்துள்ளது. உணவு மற்றும் உடை விஷயத்தில் சிறுபான்மையினரை மிரட்ட  வலதுசாரிக் குழுக்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களும் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

இப்பிரச்சினைகள் குறித்தெல்லாம் தேசம் விவாதிக்க வேண்டும். அந்த விவாதங்கள் வாக்காளர்கள் உரிய முடிவெடுப்பதற்கு உதவிகரமாக இருந்திட வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக தேசமெங்கும் நடக்கும் விவாதங்களிலிருந்து இந்த முக்கியமான பிரச்சினைகள் காணாமல் போய் விட்டது. ஊடகங்கள் அதிலும் முக்கியமாக காட்சி ஊடகங்கள் இந்திய மக்களை வஞ்சித்து விட்டன.  ஊடகங்களில் பெரும்பகுதியினர் தங்களின் சுதந்திரத்தை பறி கொடுத்து விட்டு அரசின் ஊது குழல்களாக மாறி விட்டனர். கடந்த ஐந்தாண்டுகளில் ஊடகங்கள் ஆட்சி பற்றி ஆராய்ந்து விமர்சிப்பதற்குப் பதிலாக எதிர்க்கட்சிகளைப் பற்றி ஆய்வு செய்து கொண்டிருக்கின்றன. மூர்க்கத்தனமான உணர்வுகளையும் போலி தேசியவாதத்தையும் உசுப்பேற்றி விடுவதில் ஊடகங்கள் இன்று மும்முரமாக உள்ளது. சலுகைசார் முதலாளித்துவ அரசின் பயனாளிகளான ரிலையன்ஸ் மற்றும் அதானி போன்ற பெரு நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலேயே இன்றைய ஊடகங்கள் இருப்பதால் இது ஒன்றும் ஆச்சர்யமளிக்கக் கூடியதல்ல. ஒரு முதலாளிக்கு பயனளிக்கக்கூடிய விதத்தில் விதிகள் மீறப்பட்டு தேசத்தின் நிதி அள்ளிக் கொடுக்கப்பட்ட ரஃபேல் ஒப்பந்தம் ஒரு சீரிய உதாரணம்.

பிரதமர் கவர்ச்சிகரமான முழக்கங்களை கண்டுபிடிக்கும் திறன் படைத்த சிறந்த பேச்சாளர். “நான் காவல்காரன்’ என்ற பிரச்சாரம் அபத்தமானது, சத்தற்றது. காவல் காரனாக பணியாற்ற இந்நாட்டில் ஏராளமான அமைப்புக்கள் இருக்கிறது. இந்தியாவிற்கு பிரதம மந்திரிதான் தேவையே தவிர காவல் காரர் அல்ல. ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் கண்ணியமாக வாழ வளர்ச்சியை எப்படி அனைத்து மக்களுக்கும் பகிர்ந்தளித்து இந்திய சமூகத்தை எப்படி கட்டமைப்பது என்று தொலை நோக்கு பார்வையோடு சிந்திக்கிற தலைவர்தான் தேவை. ஆனால் பிரதமரோ அரசாங்கத்தின் தலைவர் என்ற பாத்திரத்திற்குப் பதிலாக எதிர்க்கட்சித் தலைவர் பாத்திரத்திலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். காங்கிரஸ் தனது ஆட்சிக்காலத்தில் செய்தது என்ன, செய்யத் தவறியது என்ன என்பது அனைவருக்கும் தெரியும். பிரதமரும் அவரது கட்சியும் ஐந்தாண்டு காலத்தில் செய்தது என்ன என்பதை அறிந்து கொள்ளவே தேசம் விரும்புகிறது. வேலை வாய்ப்புக்களை உருவாக்குவது, கறுப்புப் பணத்தை மீட்டு நல்ல நாளை கொண்டு வருவது போன்ற உறுதிமொழிகளை ஏன் காப்பாற்றவில்லை என்று தெரிந்து கொள்ள விழைகிறது.

பிரதமர் தன் செயல்பாட்டின் அடிப்படையில் வாக்குகளை கோர வேண்டுமே தவிர முந்தைய அரசுகளின் தோல்வி என்று குற்றம் சுமத்தி அல்ல.  தான் இந்த நாட்டின் தலைவர், வெறும் பிரச்சாரகர் மட்டும் அல்ல என்பதையும் பிரதமர் புரிந்து கொள்ள வேண்டும். தேர்தல் ஆதாயத்திற்காக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்துவதிலிருந்தும்  மத ரீதியான அணி சேர்க்கை செய்வதிலிருந்தும் அவர் தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும்.  நம் பாதுகாப்புப் படைகளை அரசியலாக்குவது என்பது ஜன்நாயகத்திற்கு மிகப் பெரிய அபாயமாகும். தீவிரவாதத்தை முறியடிப்பதில் அரசின் தோல்வியை தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் மூடி மறைக்க  முயல்வது அவமானகரமானது. மக்களின் உண்மையான பிரச்சினைகளை தேசத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதற்குப் பதிலாக பிரதமருக்கு எத்ர்வினையாற்றி அவர் விரித்த வலையில் எதிர்க்கட்சிகள் சிக்கிக் கொண்டது துரதிர்ஷ்டவசமானது. மக்களுக்கு மிகவும் முக்கியமான அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் மீது எதிர்க்கட்சிகள் தங்களின் கவனத்தை செலுத்திட வேண்டும்.

நடைபெறவுள்ள தேர்தலில் உழைக்கும் வர்க்கத்திற்கு அளப்பறிய பொறுப்பு இருக்கிறது. நவீன தாராளமயமாக்கல் ஆட்சிகளுக்கு எதிராக உழைக்கும் வர்க்கம் இடையறாத போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறது. இப்போராட்டங்கள் நவீன தாராளமயமாக்கல் செயல்திட்டத்தின் வேகத்தை மட்டுப்படுத்தியிருக்கிறது. தொழிலாளர் விரோத. மக்கள் விரோத கொள்கைகளை திரும்பப் பெறுவது மட்டுமல்லாது மாற்றுக் கொள்கைகள் குறித்த விவாதத்தை முன்னெடுத்துச் செல்லவும் இப்போராட்டங்கள் தொடர்ந்திட வேண்டும். தொழிலாளர்களுக்கான கோரிக்கை சாசனத்தை உருவாக்கி இதிலே ஒரு துவக்கத்தை முன்னெடுக்கலாம்.

இடதுசாரிகளை வலிமைப்படுத்தவும்  தேசத்தினை கட்டும் பணியில் அவர்களின் குரல் ஒலிக்க தொழிலாளர்களின் தலைவர்களில்  அதிகமானவர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பவும் ஒரு நல்ல வாய்ப்பை இத்தேர்தல் அளித்திருக்கிறது. மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளை வலிமைப்படுத்துவதை நோக்கி  உழைக்கும் மக்களின் இயக்கம் பயணிக்க வேண்டும்.

நவீன தாராளமயமாக்கலை பின்பற்றுகிற, மதரீதியாக மக்களை பிளவுபடுத்துகிற தற்போதைய ஆட்சியாளர்களுக்கு எதிரான பிரச்சாரத்தில் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு அவர்களை  தோற்கடிப்பதற்காக பணியாற்ற வேண்டும். இதுதான் உழைக்கும் மக்கள் முன்னுள்ள முக்கியமான பணி. இந்தியக் குடியசரசை மீட்டெடுப்பதற்காக உழைக்கும் மக்களுக்கும் முற்போக்கு சக்திகளுக்கும் கிடைத்திருக்கிற வரலாற்றுச் சந்தர்ப்பம் இது.

(இன்சூரன்ஸ் வொர்க்கர் ஏப்ரல் 2019 இதழின் தலையங்கத்தின் தமிழாக்கம்)


வெளியீடு


காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம்,
வேலூர் கோட்டம்

No comments:

Post a Comment