Friday, November 11, 2022

அறுவர் விடுதலை - வரவேற்பும் எதிர்பார்ப்பும்

 

தோழர் சம்சுதீன் ஹீரா அவர்களின் பதிவை பகிர்ந்து கொள்கிறேன். அறுவர் விடுதலை போல நீண்ட காலமாக சிறையில் வாடும் இஸ்லாமியர்களின் விடுதலையும் மிக முக்கியமானது. அது மட்டுமல்ல, மோடியை கொலை செய்ய திட்டமிட்டார்கள் என்று அபாண்டமாக குற்றம் சுமத்தப்பட்டு UAPA சட்டத்தின் கீழ் பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டு இன்னும் குற்றப்பத்திரிக்கை கூட தாக்கல் செய்யப்படாமல் மூன்றாண்டுகளாக சிறையில் வாடும் அண்ணல் அம்பேத்கரின் உறவினர் தோழர் ஆனந்த் டெல்டும்ப்டே உள்ளிட்ட தலித், மனித உரிமை செயற்பாட்டாளர்களின் விடுதலையும் கூட அவசியமானது. 



மாநில அரசின் முயற்சியில் பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து இந்த அறுவர் விடுதலையும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். இதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.

இதன் நீட்சியாக, அடிப்படை உரிமைகள்கூட மறுக்கப்பட்ட நிலையில் வாடுகிற இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலை குறித்து ஆய்வுசெய்ய அமைக்கப்பட்டுள்ள ஆணையம், அரசுக்கு சரியான அறிக்கை வழங்குமென்றும், இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலை என்கிற 'சட்டப்படியான' நோக்கம் நிறைவேறும் என்றும் நம்புகிறேன்.

இஸ்லாமிய சிறைவாசிகள் குறித்துப் பேசினாலே 'தீவிரவாதிகளுக்கு?' ஆதரவாகப் பேசுவதைப்போன்றும், ஏதோ இஸ்லாமிய சிறைவாசிகளுக்குச் சிறப்புச் சலுகைகளைக் கேட்பது போன்றும் ஒரு பொது மனநிலை ஏற்படுத்தப் பட்டிருக்கிறது. அந்த மனநிலைக்குப் பயந்தே பேசவேண்டியவர்களும் கூட பேசத்தயங்குகிறார்கள்.

முன்முடிவுகளோடு கட்டுண்டுபோய்க் கிடக்கும் அந்த மனநிலைக்குள் உணமையைக் கொண்டு சேர்ப்பது சவாலானதுதான்.

1. இஸ்லாமியரல்லாத மற்ற சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் அதே உரிமையை ( கவனிக்கவும், சலுகையல்ல) இஸ்லாமிய சிறைவாசிகளுக்கும் வழங்கு என்பதுதான் கோரிக்கை.

2. இந்திய அரசியலமைப்புச் சட்டம் கைதிகளுக்கு வழங்கியுள்ள உரிமையை மத வேறுபாடு பாராமல் எல்லாக் கைதிகளுக்கும் ஒரே தராசில் வழங்கவேண்டும் என்றுதான் கேட்கிறோம்.

3. அரசும், சிறைத்துறையும், நன்னடத்தை போர்டுகளும் நிர்னயித்துள்ள 'முன் விடுதலைக்கான தகுதிக் குறியீட்டின்' அடிப்படையில் மற்ற சிறைவாசிகளை விடுதலை செய்வதுபோல இஸ்லாமிய சிறைவாசிகளையும் விடுதலை செய். பாகுபாடு காட்டாதே என்பதுதான் கோரிக்கை.

4. மற்ற கைதிகளுக்கெல்லாம் எஸ்கார்ட் இல்லாத பரோல் வழங்கப்படும்போது இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு மட்டும் எஸ்கார்டுகளோடு பெயில் வழங்கி பதட்டப்படுத்துவது எந்த வகையில் நியாயம் என்பதுதான் கேள்வி?

இதுபோல சொல்லிக்கொண்டே போகலாம்.

என் கேள்வியெல்லாம் இந்திய அரசியலைப்புச்சட்டம் சிறைவாசிகளுக்கென உறுதிப்படுத்தியுள்ள உரிமைகளை வழங்காமல், அவர்கள் சார்ந்துள்ள மதத்தின் அடிப்படையில் பாராபட்சம் காட்டப்படுவதைச் சகித்துக்கொண்டு கடக்கும் நாம் நம்மை நாகரீகச் சமூகம் என்று சொல்லிக்கொள்ள எதாவது முகாந்திரம் இருக்கிறதா..? என்பது மட்டும்தான்.

No comments:

Post a Comment