Tuesday, November 22, 2022

கலகத் தலைவன் – பார்க்கலாம்

 



 

ஞாயிறன்று திரை அரங்கில் பார்த்த படம்.

 

கார்ப்பரேட்டுகளின் அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்த முனைவோர்களுக்கும் கார்ப்பரேட் ஏவி விடும் ஹைடெக் அடியாட்களுக்கும் இடையிலான போராட்டமே திரைப்படம்.

 

கார்ப்பரேட் நிறுவனங்களின் முறைகேடுகளை அம்பலப்படுத்தி பல படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த படம்தான் முதல் முறையாக CRONY CAPITALISM என்றழைக்கப்படுகிற கார்ப்பரேட் – அரசு கூட்டுக் களவாணித்தனத்தை அம்பலப்படுத்திய படமாக அமைகிறது. பொதுத்துறை நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கும் கார்ப்பரேட் நிறுவனம் அதன் ஊழியர்களை பணி நீக்கம் செய்வது, சங்கிலித் தொடராக எங்கேயெல்லாம் பாதிப்பு வருகிறது என்பதை ஒரு கதாபாத்திரம் வாயிலாக தெளிவாக சொல்கிறது படம்.

 

எரிபொருள் பயன்பாட்டை 50 % குறைக்கும் லாரியை அறிமுகம் செய்யப் போவதாக வஜ்ரா எனும் நிறுவனம் அறிவிக்க, அதன் பங்கு விலை கன்னாபின்னாவென்று உயர்கிறது. ஆனால் அது வெளிப்படுத்தும் மாசு அளவு , அனுமதிக்கப்பட்டதை விட பல மடங்கு அதிகமாக உள்ளது என்பது தெரியவந்தாலும் அதனை மூடி மறைக்கப்பார்க்கிறது. அந்த ரகசியம் வெளியாகி நிறுவனம் சிக்கலில் மூழ்கிறது.

 

ரகசியத்தை வெளியிட்டது யார் என்று கண்டுபிடிக்க நிறுவனம் ஈவு இரக்கமற்ற தலைவன் கொண்ட ஒரு குழுவிடம் வேலையை ஒப்படைக்கிறது. வில்லன் ஆரவ், ரகசியங்களை அம்பலப்படுத்தும் உதயநிதி ஸ்டாலினை திட்டமிட்ட, துல்லியமான முறையில் கண்டுபிடிப்பதுதான் படம்.

 

உதயநிதி ஸ்டாலினின் காதல் சொல்ல நினைக்கும் காட்சிகள (படு டீஸண்டான)  வேகமாக நகரும் படத்திற்கு ஸ்பீட் பிரேக்கர். வஜ்ராவின் ஒரு ரசாயன ஆலையால் பாதிக்கப்பட்டவர்கள்தான் உதயநிதி ஸ்டாலின், கலையரசன் ஆகியோர் என்பது கடைசியில் சொல்லப்படுகிறது. அந்த ரசாயன ஆலை தூத்துக்குடி ஸ்டெரிலைட்டை நினைவு படுத்தும் விதத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது.

 

பொதுவாக விறுவிறுப்பாக செல்லும் படம். மூடப்பட்ட ரசாயன ஆலையில் நடக்கும் க்ளைமேக்ஸ் சண்டையின் நீளத்தை வெட்டியிருக்க வேண்டும். நாயகனோடு செல்வதைக் காட்டிலும் ஏழை மக்களுக்கு மருத்துவம் செய்யும் என் கனவுதான் முக்கியம் என்று நாயகி முடிவெடுப்பது நல்ல காட்சி. ஆமாம், யார்  அவர்?

 

அதென்ன கலையரசனை புக் செய்யும் போதே உன் கேரக்டரை நடுவில் கொன்று விடுவோம் என்று சொல்லித்தான் புக் செய்வார்களோ!

 

வில்லன் ஆரவ் பட் மிரட்டல். உதயநிதி ஸ்டாலின், நான் இதற்கு முன்பு பார்த்த அவரது “மனிதன்” படத்தை விட  நடிப்பில் முன்னேறியுள்ளார்.

 

மகிழ் திருமேனியின் இன்னுமொரு பரபரப்பான, புத்திசாலித்தனமான படம் “கலகத்தலைவன்”

 

தைரியமாக பார்க்கலாம்.

No comments:

Post a Comment