கூட்டம் கூட்டமாக அந்த பள்ளிவாசலுக்குள் நுழைந்தார்கள்.
இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் பார்த்து மகிழ்ச்சியுடன் புன்னகைத்துக் கொண்டார்கள்.
இன்னும் கொஞ்ச நேரத்தில் அந்த மசூதி வளாகத்துக்குள் ஒரு வித்தியாசமான திருமணம் நடை பெறப் போகிறது.
முதல்முறையாக ஒரு இஸ்லாமிய மசூதி வளாகத்தில் ஒரு இந்து பெண்ணின் திருமணம் நடக்கப் போகிறது.
ஆம்...
நடந்து விட்டது.
2020 ஜனவரி 19 ல்
கேரள மாநிலம் ஆலப்புழை அருகிலுள்ள சேரவல்லி மசூதி வளாகத்தில் அஞ்சு என்ற மணமகளுக்கும், சரத் என்ற மாப்பிள்ளைக்கும் இந்து முறைப்படி திருமணம் சிறப்பாக நடைபெற்றது. நடத்தி வைத்தவர்கள் அந்த ஊர் ஜமாத்தை சேர்ந்த இஸ்லாமிய பெரியவர்கள்.
'அல்லாஹூ அக்பர்' என ஓதிய இடத்தில், அர்ச்சகர்களின் வேத மந்திரங்கள் முழங்க ஒரு இந்து திருமணம் இனிதே நடந்து முடிந்தது.
•
எப்படி நடந்தது இந்த மத நல்லிணக்க மங்கல வைபவம் ?
மணமகள் அஞ்சு ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவள்.
தந்தை தவறி விட்டார். தாய் பிந்து சிரமப்பட்டு மூன்று குழந்தைகளையும் வளர்த்து வந்தார். அதில் மூத்தவள்தான் அஞ்சு. அவளுக்குத்தான் திருமணம்.
அதற்காக ஒரு சில இடங்களில் கடன் கேட்டிருந்தார் பிந்து.
சரி என்று சொல்லி இருந்தவர்கள் கடைசி நேரத்தில் கை விரிக்க,
கலங்கிப் போய் விட்டார் பிந்து.
"என்னம்மா ஆயிற்று? ஏன் ஒரு மாதிரி இருக்கிறீர்கள்?"
ஆதரவாகவும் ஆறுதலாகவும் இப்படிக் கேட்டவர் நஜுமுதீன். பிந்துவின் பக்கத்து வீட்டுக்காரர். அந்த ஊர் முஸ்லிம் ஜமாத்தின் செயலாளராக இருக்கிறார்.
பிந்து தன் இக்கட்டான நிலைமையை நஜுமுதீனிடம் சொல்லி அழ...
நஜுமுதீன் நீண்ட நேரம் யோசித்தார். அதன் பின் பிந்துவிடம் சொன்னார்: "எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. ஆனால் அது எவ்வளவு தூரம் சாத்தியம் என்று தெரியவில்லை. எனினும் முயற்சி செய்து பார்க்கலாமே!"
நஜுமுதீன் சொன்னபடி பிந்து, ஜமாத்துக்கு உதவி கேட்டு கடிதம் எழுத, இஸ்லாமிய பெரியவர்கள் யோசித்தார்கள்.
அவர்களில் ஒருவர் கேட்டார்:
"நிதி உதவி மட்டும் கொடுத்து விட்டு ஒதுங்கிக் கொள்வதா? அஞ்சு நம் வீட்டு குழந்தையாக இருந்தால் என்ன செய்வோம்?"
இன்னொரு பாய் சொன்னார்:
"ஆம். கல்யாண செலவு முழுவதையும் நாமே ஏற்றுக் கொள்வோம். இந்தக் கல்யாணத்தை நாமே நடத்தி வைப்போம்."
அவ்வளவுதான். அந்த நொடி முதல் இந்து மணமகள் அஞ்சு, அந்த இஸ்லாமிய பெரியவர்களின் செல்லக் குழந்தையாக ஆகிப் போனாள்.
மசூதி வளாகத்துக்குள்ளேயே மணமேடை அமைக்கப்பட்டு, சீரோடும் சிறப்போடும் எந்தக் குறையும் இன்றி, இந்து மத சடங்குகளோடு, இஸ்லாமிய பெரியவர்களின் ஆசிகளோடு இனிதே நடந்து முடிந்தது அஞ்சுவின் திருமணம்.
பத்து பவுன் தங்க நகை, இரண்டு லட்சம் ரூபாய் பரிசுத் தொகை, ஆயிரக்கணக்கான மக்களுக்கு அறுசுவை விருந்து. எல்லாம் இஸ்லாமிய பெருமக்களின் அன்பளிப்பு!
சாப்பாட்டுப் பந்தியில் ஜமாத் உறுப்பினர்களும், இந்து மத புரோகிதர்களும் ஒன்றாக அமர்ந்து பேசியபடி சாப்பிடும் காட்சியை பார்க்கும்போது,
மன நிறைவும் மகிழ்ச்சியும்
ஏற்படுகிறது.
தொடரும் காலங்களிலும்
இது போன்ற நிகழ்வுகள் தொடர வாழ்த்துவோம்.
இந்த நல்லதொரு தொடக்கத்தை ஆரம்பித்து வைத்த கடவுளின் சொந்த தேசத்து சகோதரர்களுக்கு நன்றி !
Kerala...
“God's own country”..!
வாழ்க வாழ்க.. !
John Durai Asir Chelliah
(மீள் பதிவு)
Even though it's an old post it is meanibgFUL(L) and timely
ReplyDelete