வாரம் ஒரு நூல் அறிமுகம்
இந்த வாரம் 17.10.2022
நூல் : சிறகொடிந்த வலசை
ஆசிரியர் : புதிய மாதவி
சென்னை – 11
விலை : ரூபாய் 150.00
அறிமுகம் செய்பவர் : எஸ்.ராமன், வேலூர்
கொரோனா கால பின்னணியில் மும்பை தாராவியின் பின்புலத்தில் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட பெண்ணின் துயர முடிவையும் உறவினர்களின் போலித்தனத்தையும் சொல்கிற நாவல் இது.
நான் இதுவரை வாசித்த வரை மும்பை தாராவி பகுதியின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியுள்ள முதல் நூல் இதுதான் என்பேன்.
நெல்லை மாவட்டத்தில் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டு தாராவியில் வாழ்கிற தனம் என்ற பெண்ணின் கணவர் கொரோனாவில் இறக்கிறார். வாழ வழியின்றி சொந்த ஊர் திரும்ப முயல்பவர்களோடு இணைந்து பேருந்துக்கு பணம் கொடுத்து ஏமாந்து கால்நடைகள் போல லாரியில் குழந்தைகளோடு பயணித்து வழியில் கர்னாடகா காவல்துறையில் மடக்கப்பட்டு மட்டமான ஒரு கட்டிடத்தில் அடைக்கப்பட்டு பாதிப்புக்களுக்கு உள்ளாகி மரணிக்கிறார். அவரோடு பயணித்த பெண் குழந்தைகளை மாமன் வீட்டில் ஒப்படைக்கிறார்.
ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட தங்கையின் குழந்தைகளை வீட்டில் சேர்க்க அவன் மனைவி மறுக்க, ஏற்கனவே தோட்டத்திற்கு துரத்தப்பட்ட பாட்டியோடு சேர்கின்ற குழந்தைகள். கொரோனாவால் இறந்தவர்களுக்கு தரப்படும் இழப்பீட்டுத் தொகையை பெற பாச நாடகம் ஆடி பணத்தை சுருட்டிக் கொள்கிறான் மாமன். கணவன் இல்லாமல் வேறொருவருடன் வாழ்வதாக சமூகத்தால் இழிவு செய்யப்படுகிற பெண் இக்குழந்தைகளுக்கு அடைக்கலம் தர, தன்னால் வாழ்வில் முன்னேற முடியும் என்ற நம்பிக்கையோடு அந்த ஒன்பதாவது படிக்கும் பெண் குழந்தை சொல்வதோடு நிறைவடைகிறது நாவல்.
பொதுவான குடும்பக் கதை டெம்ப்ளேட்டில்தான் இந்த நாவல் இருந்தாலும் தாராவி பின்னணி, கொரோனா கால துயரம், மணியடித்தல், விளக்கேற்றுதல், ஹெலிகாப்டரில் பூ தூவுதல், போன்ற அரசு கோமாளித்தனங்களை சாடுவது, புலம் பெயர் தொழிலாளர்கள் சந்தித்த சோகம், உறவுகளின் போலித்தனம் ஆகியவற்றால் இந்த நாவல் முக்கியமான ஒன்றாகி விடுகிறது. கதை முழுதுமே சோகத்தை பிழிந்தெடுத்தாலும் இறுதியில் நம்பிக்கையோடு முடித்துள்ளதுதான் நாவலின் சிறப்பு.
மாஸ்க் அணிந்த மோனாலிசா ஓவியம், புலம் பெயர் தொழிலாளர்கள் நடந்த கதை ஆகியவற்றை உள்ளடக்கிய முகப்புப் படம் அருமை.
செவ்வானம்
மிக்க நன்றி
ReplyDelete