Tuesday, June 21, 2022

அக்னிபாத் – மனு தர்ம சதி

 



 

அக்னிபாத் திட்டத்தினை கொண்டு வருவதில் மிகப் பெரிய மனு தர்ம சதி அடங்கியுள்ளது.

 ராணுவத்தில் சிப்பாய் வேலைகளுக்கு செல்பவர்கள் யார்?

 பத்து வருடங்களுக்கு முன்பாக எங்கள் நிறுவனத்தில் “ஐந்தாண்டுகளுக்கு மேலாக சார் பணியாளராக, நான்காம் பிரிவு பணியில்  பணியாற்றியவர்களுக்கு” உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நிரந்தரப் பணி அளிக்கப்பட்டது. எங்கள் கோட்டத்தில் கிட்டத்தட்ட நூறு பேர் பணி நிரந்தரம் பெற்றனர். அவர்களின் சமூக பின்னணியை ஆய்வு செய்த போது பாதிக்கும் மேற்பட்டவர்கள் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களாகவும் மீதியுள்ளவர்கள் இதர பிற்படுத்தப்பட்டவர்களாகவுமே இருந்தார்கள். முற்பட்ட வகுப்பினர் என்று சொல்லக் கூடியவர்கள் ஒருவர் கூட இல்லை. பிற கோட்டங்களிலும் இதே நிலைமைதான்.

 அதாவது தற்காலிக சார்பணியாளராக நான்காம் பிரிவு பணியில் வேலை பார்க்க ஒரு முற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் கூட முன்வரவில்லை. இதற்கு முன்பாக 1993 ல் நிரந்தரப் பணி நியமனத்தின் போது விண்ணப்பித்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணும் அளவில்தான் இருந்தது.

 ராணுவத்தில் முற்படுத்தப்பட்டவர்கள் யாருமே கிடையாதா?

 இருக்கிறார்கள்.

 அவர்கள் அதிகாரிகளாக நியமனம் பெற்றவர்கள். அதிகாரத்தின் படிக்கட்டுக்களில் மேலே மேலே செல்பவர்களும் அவர்கள்தான்.

 ராணுவத்தில் சிப்பாயாக வேலைக்கு சேர்பவர்களில் அனைவரும் தேச பக்தியால் உந்தப்பட்டு சேர்பவர்கள்தான் என்று நாம் நினைத்தால் அதை விட பெரிய தவறு எதுவுமில்லை.

 மேற்படிப்பிற்கு வாய்ப்பில்லாமல், வேலைக்கான சந்தையில் மிகவும் சிரமப்பட்டு ராணுவத்தில் சேர்ந்தாலாவது நம் பிரச்சினைகள் தீரும் என்ற நம்பிக்கையில் வருபவர்கள். ஓய்வூதியமும் பணி ஓய்வுக்குப் பிறகு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் முன்னாள் ராணுவத்தினருக்கு அளிக்கப்படும் முன்னுரிமையுமே ராணுவத்துக்கான ஈர்ப்பு சக்தி.

 இன்று அரசுத்துறையிலும் பொதுத்துறையிலும் பணி நியமனம் என்பது கானல் நீராக மாறி வரும் சூழலில் ஓய்வூதியமே அவர்களுக்கான ஒரே பிடிப்பு.

 அவர்கள் பட்டப்படிப்பு படித்தவர்களாக இருப்பார்கள், குறைந்த பட்சம் பனிரெண்டாவது தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள்.

 17 வயதில் அக்னி வீரனாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவனிடமிருந்து பள்ளி மேல் நிலைக் கல்வியும் கல்லூரிக் கல்வியும் பறிக்கப்படுகிறது. நான்கு வருடத்திற்குப் பிறகு அவன் வீட்டிற்கு திருப்பி அனுப்பப்படுகிற போது கல்விக்கான காலம் கடந்து போயிருக்கும். மறு வேலை வாய்ப்பு என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதைதான். அரசுத்துறைகளிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் பணி நியமனம் என்பதே இல்லாத நிலையில் இந்த மந்திரிகளின் முன்னுரிமை அறிவிப்பெல்லாம் வழக்கமான ஜூம்லாதான். 0*10 % எவ்வளவோ அவ்வளவுதான் இவர்கள் தரும் மறு வேலை வாய்ப்பு.

 புதிய கல்விக் கொள்கை மூலம் குலக் கல்வி திட்டத்தை கொண்டு வரலாமா என்று சதி செய்கிற ஆட்சியாளர்கள், சாதாரண இள நிலை படிப்பிற்குக் கூட நீட் தேர்வை அறிமுகம் செய்ய உத்தேசித்துள்ள ஆட்சியாளர்கள், இளைஞர்களின் நான்கு வருட உழைப்பைச் சுரண்டி அவர்களின் கல்வியைப் பறித்து பின்பு நடுத்தெருவில் நிற்க வைக்கும் சதியே அக்னிபாத் திட்டம்.

 நான்கு வருடத்துக்குள் அவர்களுக்கு தேச பக்தி ஊட்டப்படும். அதனால் அவர்கள் வேலை கேட்டோ, ஓய்வூதியம் கேட்டோ போராட மாட்டார்கள் என்று பெருமிதமாக கதையளக்கிறார்கள் சங்கி மூடர்கள்.

 தங்களின் வாழ்வைத் தொலைத்து விட்டு நடுத்தெருவில் நிற்கும் போது அவர்களின் தேச பக்தியை விட பட்டினியும் வறுமையுமே அவர்களை வழி நடத்தும். வெயிலிலும் பனியிலும் நேரம் காலம் பார்க்காமல் தங்கள் உழைப்பைச் சுரண்டியவர்கள் மீதுதான் அந்த கோபம் இயல்பாகவே திரும்பும். இந்த சிறு உண்மை கூட சங்கிகளின் முட்டாள் மூளைக்கு எட்டவில்லை.

 மொத்தத்தில் அக்னிபாத் என்பது ஒடுக்கப்பட்ட இனங்களைச் சேர்ந்த வாலிபர்களின் கல்வியை பறித்து ஒப்பந்தக் கூலியாக்கி பின்பு நடுத்தெருவில் நிற்க வைக்கும் மனு தர்ம சதி. சிக்கன நடவடிக்கை என்று சொன்னாலும் உண்மையில் அரசின் நோக்கம் வாலிபர்களின் வாழ்வோடு விளையாடுவதுதான்.

 ராணுவம் போன்ற அமைப்புக்களில் நிரந்தரமான சிப்பாய்கள் இல்லாமல் போனால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவார்கள். நாட்டின் பாதுகாப்பிற்கே ஆபத்து ஏற்படும்.

 எனவே அக்னிபாத்தை கொண்டு வந்தவர்களும் ஆதரிப்பவர்களும்தான் தேசத் துரோகிகள்.

 எதிர்ப்பவர்கள் மட்டுமே தேச பக்தர்கள். . . .

1 comment:

  1. ஏழ்மையும் வறுமையும் ஒரு மனிதனை எதிரியிடம் மண்டியிடச் செய்யும் என்பது பழமொழி.
    ஏழ்மையும் வேலையில்லாத் திண்டாட்டமும் மனித மனங்களை அடிமைத்தனத்தை நோக்கி நகர்த்தும்.

    ReplyDelete