தமிழக முதல்வருக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பரிசளித்த நூல் தொடர்பான இரு பதிவுகளை பகிர்ந்து கொண்டுள்ளேன்.
புத்தகப்பரிசளிப்புக்கு பொங்கவேண்டாம் - தமுஎகச மாநிலக்குழு
அரசு நிகழ்வுகளிலும் பொது நிகழ்வுகளிலும் சிறப்பு விருந்தினர்களுக்கு புத்தகங்களை பரிசளிக்கும் பண்பு பரவலாகி வருகிறது. இந்த அறிவுச்செயல்பாட்டைப் போற்றிடும் விதமாக தமிழ்நாட்டின் முதல்வர், பொன்னாடை அல்லது பூங்கொத்துக்கு பதிலாக புத்தகங்களையே தனக்கு வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அவ்விதமே தனது விருந்தினர்களுக்கும், தான் சந்திக்கும் ஆளுமைகளுக்கும் புத்தகங்களையே பரிசாக வழங்கி நல்ல முன்னுதாரணத்தை உருவாக்கிவருகிறார். இதன் தொடர்ச்சியிலேயே புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஜூன் 8ஆம் தேதி வருகைதந்த முதல்வருக்கு அம்மாவட்ட ஆட்சியர் புத்தகமொன்றினை அன்பளிப்பாய் வழங்கியுள்ளார்.
“அறியப்படாத கிறிஸ்தவம் – தமிழ்நாட்டில் ஒரு வரலாற்றுத் தேடல்” என்ற அந்நூல், நிவேதிதா லூயிஸ் என்பவரால் தமிழ்நாடு முழுக்க கள ஆய்வு செய்து திரட்டப்பட்ட தகவல்களைக் கொண்டு எழுதப்பட்டது. தமிழ்ச்சமூகம், அரசியல் பொருளியல் பண்பாட்டுத்தளங்களில் அடைந்துள்ள முன்னேற்றங்களுக்கு கிறித்துவம் ஆற்றிய பங்கினை பேசுகிறது. அதேவேளை ஒரு மதம் என்கிற வகையில் அதனுள் இருக்கும் உள்முரண்களையும் மோதலையும் தீர்த்துக்கொள்ள முடியாமல் திணறுவதையும் ஓரச்சார்பின்றி பேசுகிறது. இந்த உண்மைகளை அறிந்துணராமல் புத்தகத்தின் தலைப்பில் கிறித்துவம் என்ற சொல் இருப்பதைப் பார்த்த மாத்திரத்திலேயே ஆத்திரமடைந்துவிட்ட பாரதிய ஜனதா கட்சியினர், அந்தப் புத்தகம் கிறித்துவத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யக்கூடியதென்றும் அதை முதல்வருக்கு கொடுத்ததன் மூலம் மதச்சார்பற்று பொதுவாக இருக்கவேண்டிய மாவட்ட ஆட்சியர் நடுநிலை தவறிவிட்டதாகவும் அபத்தமாக குற்றம்சாட்டத் தொடங்கியுள்ளனர். போகிறபோக்கைப் பார்த்தால் புத்தகங்களை மட்டுமல்ல, பொட்டலம் கட்டும் காகிதத்தைக்கூட தங்களிடம் காட்டி முன்தணிக்கைப் பெறவேண்டும் என்று பாஜகவினர் கொக்கரிப்பார்கள் போல.
சிறுபான்மை மதத்தவர் மீதான வெறுப்புணர்விலிருந்தும், தமிழக/ இந்தியச் சமூகத்திற்கு சிறுபான்மைச் சமூகங்கள் ஆற்றிய ஆக்கப்பூர்வ பங்களிப்புகளை இருட்டடிப்பு செய்யும் இழிநோக்கிலிருந்துமே அறிவுச்செயல்பாடுகளை அணுகும் பாஜகவின் நிலையை ஏற்க முடியாது. விரும்பும் நூலை எழுதவும் படிக்கவும் பரிமாறிக்கொள்ளவும் பரிசளிக்கவும் மக்களுக்குள்ள அடிப்படை உரிமையைப் பறிக்கும் பாஜகவின் இத்தகைய மிரட்டலையும் ஜனநாயக விரோதமான தலையீடுகளையும் கருத்துரிமையில் பற்றுள்ள யாவரும் கண்டிக்க வேண்டுமாய் தமுஎகச கேட்டுக்கொள்கிறது.
தோழமையுடன்
மதுக்கூர் இராமலிங்கம், Mathukkur Ramalingam மாநிலத்தலைவர் (பொ)
ஆதவன் தீட்சண்யா Aadhavan Dheetchanya , பொதுச்செயலாளர்
13.06.2022
No comments:
Post a Comment