கோவிட் பாதிப்புக்குப் பிறகு கடந்த இரண்டாண்டு காலத்தில் முதன் முறையாக சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரத்தில் கடந்த மே 23, 24 தேதிகளில் உலகின் பெரும் கோடீஸ்வரர்கள் கூடிய உலக பொருளாதார மாமன்ற உச்சி மாநாடு நடைபெற்றது. கோவிட்-19 நோய்த்தொற்று காலத்தில், இந்த மெகா கோடீஸ்வரர்களின் மலையளவு சொத்துக்களின் மதிப்பு இதற்கு முன்னெப்போதும் இருந்திராத, திகைக்கச் செய்யும் உயரத்தை எட்டிவிட்டன. மனிதகுலத்தின் பெரும்பாலானோருக்கு துயரங்கள் நிறைந்ததாக இருந்த நோய்த்தொற்று காலம், பெரும் முதலாளி வர்க்கத்தினருக்கு வரலாற்றிலேயே சிறந்த தருணங்களில் ஒன்றாக இருந்தது.
நியூயார்க் முதல் புதுதில்லி வரை உலகெங்கிலும், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் துன்புற்று வருகின்றனர். கோதுமை மாவு, சமையல் எண்ணெய், எரிபொருள், மின்சாரம் ஆகியவற்றின் விலை எல்லா இடங்களிலும் அதிகரித்து வருகிறது. தங்களது தேவைகளை வெட்டிச் சுருக்கிக் கொள்ள உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். தங்களது தட்டில் உணவு இருப்பதை உத்தரவாதம் செய்திட - தங்களது உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதை புறந்தள்ளுமாறு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். தங்களது குழந்தைகளில் யாரை தங்களால் பள்ளிக்கு அனுப்ப இயலும் என தேர்ந்தெடுக்க அவர்களின் பெற்றோர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்படுத்தியுள்ள நெருக்கடிகளில் வாழ்க்கைச் செலவு தொடர்பான நெருக்கடி முதன்மையானதாக இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் மிக அதிக அளவில் அதிகரித்துள்ள அதீத வறுமையைத் தடுக்க அரசுகளும், உலகச் சமூகமும் தவறியுள்ளன. இத்தோல்வியை ‘மாபெரும் பேரழிவு’ என விவரித்திடலாம். உலகெங்கும் 2 கோடிக்கும் கூடுதலான மக்கள் கோவிட் நோய்த்தொற்றால் உயிரிழந்துள்ளனர். அசமத்துவத்தின் ஒவ்வொரு பரிமாணமும் விண்ணை நோக்கி உயர்ந்துள்ளது.
இத்தகைய அசமத்துவமானது, ஒவ்வொரு நான்கு நிமிடங்களுக்கும் குறைந்தபட்சம் ஒரு நபரின் இறப்புக்குக் காரணமாகிறது. கோடீஸ்வரர்களாக உள்ள பணக்காரர்கள் மட்டுமே நோய் எதிர்ப்புச்சக்தியோடு உள்ளனர். அதுமட்டுமின்றி, இத்தகைய பல வகையான நெருக்கடிகளிலிருந்து குறிப்பாக பலனடைபவர்களாகவும் இந்த கோடீஸ்வரர்கள் உள்ளனர். இவர்களது சொத்துக்கள் மலையளவு பெருகியுள்ளன. இத்தகைய உயர்வுக்கான காரணம். உலகப் பொருளாதாரத்தினுள் வியக்கத்தக்க அளவிலான தொகையை அரசுகள் ‘மீட்பு நிதி’ என்ற பெயரில் உட்செலுத்தியதே ஆகும். இந்த தொகை அப்படியே கோடீஸ்வரர்கள் கைக்குப் போய்விட்டது.
உணவுப்பொருட்கள், மருந்துகள் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் உள்ள மகா கோடீஸ்வரர்களும், கார்ப்பரேட் நிறுவனங்களும் எப்படியெல்லாம் சுரண்டிக் கொழுத்துள்ளன; பெருவாரியான உலக மக்களின் துயரில் எப்படி லாபம் சம்பாதித்துள்ளன என்பதை, டாவோஸ் மாநாட்டையொட்டி, “ஆக்ஸ்பாம்” அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் மிக விரிவாக அலசியுள்ளது.
அதிகரிக்கும் உலகளாவிய அசமத்துவம் மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வின் அதிர்ச்சி ஆகியவற்றால் 2022ஆம் ஆண்டில் 25 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் கூடுதலாக தீவிர வறுமை நிலைக்குச் செல்லக் கூடும்.
தங்களது பெருஞ்செல்வம் கடந்த 23 ஆண்டு களில் எந்த அளவிற்கு அதிகரித்தனவோ அதே அளவிற்கான அதிகரிப்பை வெறும் 24 மாதங் களில் மகாகோடீஸ்வரர்கள் கண்டுள்ளனர்.
உணவுப் பொருட்கள் மற்றும் எரிசக்தித் துறைகளில் உள்ள மகாகோடீஸ்வரர்கள் தங்களது பெருஞ்சொத்துக்கள் ஒவ்வொரு 2 நாட்களுக்கும் 100 கோடி டாலர்கள் அதிகரிப்பதைக் கண்டுள்ளனர்.
கடந்த பல பத்தாண்டுகளில் இதற்கு முன் னெப்போதும் இருந்திராத அளவிற்கு உணவுப் பொருட்கள் மற்றும் எரிசக்தியின் விலை அதிகரித்துள்ளது. உணவுப்பொருட்கள் துறையில் மட்டும் 62 புதிய மகாகோடீஸ்வரர்கள் உருவாக்கப் பட்டுள்ளனர்.
கோவிட்-19 நோய்த்தொற்று, அதிகரிக்கும் அசமத்துவம் மற்றும் உணவுப் பொருட்களின் அதிகரிக்கும் விலைவாசி ஆகியவற்றின் ஒட்டுமொத்த நெருக்கடியானது, இதற்கு முந்தைய பல பத்தாண்டுகளில் எட்டிய வளர்ச்சியைப் பின்னுக்குத் தள்ளி 2022ஆம் ஆண்டில் சுமார் 263 மில்லியன் மக்களை (அதாவது 26.3 கோடிப் பேர்) அதீத வறுமையின் பிடியில் தள்ளக் கூடும். அதாவது ஒவ்வொரு 33 மணி நேரத்திலும் பத்து லட்சம் மக்களை வறுமையின் பிடியில் சிக்க வைத்திடும்.
கோவிட் நோய்த்தொற்று காலத்தின் போது சராசரியாக ஒவ்வொரு 30 மணி நேரத்திற்கும் ஒரு புதிய மகாகோடீஸ்வரர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
கோவிட் நோய்த்தொற்று காலத்தில் ஒரு புதிய பெரும் கோடீஸ்வரரை உருவாக்கத் தேவைப்பட்ட சராசரி கால அளவில், இந்த ஆண்டு 10 லட்சம் பேர் அதீத வறுமையின் கோரப்பிடியில் தள்ளப்படக் கூடும்.
கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டிய லாபம்
பல பத்தாண்டுகளாகச் செயல்படுத்தப்பட்ட நவீனதாராள வாத பொருளாதாரக் கொள்கைகள், பொதுச் சேவை களை தனியார்வசமாக்கின. மேலும், கார்ப்பரேட் அதிகாரத்தின் பெருமளவிலான குவியல் மற்றும் அதிக அளவிலான வரி ஏய்ப்பு ஆகியவற்றை நோக்கிய நகர்வை ஊக்குவித்தன. தொழிலாளர் களின் உரிமைகள் பறிக்கப்படுவதோடு, செல்வந்தர்களின், கார்ப்பரேட் நிறுவனங்களின் வரி விகிதங்கள் குறைக்கப்பட வேண்டுமென்றே இக்கொள்கைகள் செயல்பட்டன. நமது பூமிப்பந்து தாங்கிக் கொள்ள இயலாத அளவிற்கான சுரண்ட லுக்கு சுற்றுச்சூழலையும் திறந்துவிட்டன. கோவிட்-19 நோய்த்தொற்று பரவலின்போது, உலகப் பொருளாதாரத்தை, திவாலாகாமல் காப்பாற்றும் நோக்கத் தோடு மத்திய வங்கிகள் பல டிரில்லியன் டாலர்களை உலகெங்கி லும் பொருளாதாரத்தில் உட்செலுத்தின. ஒட்டுமொத்த பொரு ளாதாரச் சரிவை இது தடுத்தது என்பதால் இது இன்றியமையாத தாகவும் இருந்தது. இருந்தபோதும், சொத்துக்களின் மதிப்பை இது வியக்கத்தக்க வகையில் அதிகரிக்கச் செய்தது. மேலும், இதன் மூலம் மகாகோடீஸ்வரர்கள் மற்றும் உடைமை வர்க்கங்களின் சொத்துக்களின் நிகர மதிப்பையும் அதி கரிக்கச் செய்தது. மகாகோடீஸ்வரர்களின் சொத்துக்கள் மிகப் பெரிய அளவு அதிகரிப்பு என்பது இத்தகைய பணம் உட்செலுத்தப் பட்டதன் நேரடி விளைவாகும்.
மகாகோடீஸ்வரர்களின் சொத்துக்கள் அதிகரித்ததோடு மட்டுமின்றி, உணவுப்பொருட்கள், எரிபொருட்கள், மருந்து கள் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளைச் சார்ந்தவர் களுக்கு நோய்த்தொற்று காலத்தில் லாபம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டியது. கார்ப்பரேட் ஏகபோகங்கள் குறிப்பாக இத்துறைகளில் பெருமளவில் காணப்படுகின்றன. இந்நிறு வனங்களின் கணிசமான பங்குகளை தங்கள் வசம் வைத்துள்ள மகாகோடீஸ்வரர்கள் தங்கள் சொத்துக்கள் இன்னும் கூடுதலாக ஊதிப் பெருத்துள்ளதைக் கண்டுள்ளனர். இதற்கிடையில், அதி கப்படியான கார்ப்பரேட் லாபமும், அதிகாரமும் விலைவாசி அதிகரிப்பிற்கு பங்களிப்பு செய்கின்றன. உதாரணத்திற்கு, அமெரிக்காவின் பணவீக்கத்தில் 60 சதவீத அதிகரிப்பிற்கு அந்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் பெருகி வரும் லாபங்கள் காரணம் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதீத சொத்தானது நமது அரசியலையும், ஊடகத்தையும் சீர ழித்து வருகிறது. கற்பனை செய்ய இயலாத அளவிலான, கணக் கிட இயலாத அளவிலான அதிகாரத்தை உலகளாவிய ஆளும் வர்க்கமாகிய சிறு குழுவின் கைகளில் கொண்டு சேர்க்கிறது. தனது வாழ்நாள் முழுவதும் ஆடம்பரமாக செலவு செய்தாலும் கூட அதை விட கூடுதலாக உள்ள - மகாகோடீஸ்வரர்கள் சேர்த்து ள்ள டிரில்லியன்கணக்கான டாலர்களைப் பயன்படுத்தி அரசுகள் வறுமையை ஒழித்துக் கட்டுவதோடு, உலகெங்கிலும் உள்ள மக்களை பாதுகாத்திடலாம். அதீத செல்வம் என்பது அரசுக் கொள்கைகளின், மக்களின் வரிப்பணத்தின் நேரடி விளைவேயாகும். எனவேதான், மக்கள் நலனுக்காக இத்தகைய அதீத சொத்துக்களை திரும்பப் பெறுவதற்கான பலவிதமான நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.
‘வெறுங்கையோடு திரும்பினேன்’
உணவுப்பொருட்கள் வர்த்தகத்தில் உலகின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்களில் ஒன்றாக உள்ள கார்கில் நிறுவனத்தின் பங்குகளில் பெரும்பாலானவை இரண்டாம் ஜேம்ஸ் கார்கில் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமாக உள்ளன. கோவிட்-19 நோய்த்தொற்று துவங்கியதிலிருந்து, இவர்களது சொத்துக்களின் மதிப்பு நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 2 கோடி அமெரிக்க டாலர்கள் அதிகரித்துள்ளது. 2021ல் கார்கில் நிறுவனத்தின் நிகர வருமானம் சுமார் 5 பில்லியன் (500 கோடி ) டாலர்கள் ஆகும். தனது 150 கால வரலாற்றில் மிகப்பெரிய லாபத்தை ஈட்டியுள்ளது. 2020ல் 1.13 பில்லியன் (113 கோடி) டாலர்களை டிவிடெண்டாக பங்குதாரர்களுக்கு இந்நிறுவனம் அளித்ததில் பெரும்பகுதி அதன் விரிவடைந்த குடும்ப உறுப்பினர்களையே சென்றடைந்தது. லாபத்தை ஈட்டுவதில் இந்நிறுவனம் தனது முந்தைய ‘சாதனையை’ முறியடித்து 2022ல் மீண்டும் புதிய ‘சாதனையை’ படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மலாவி நாட்டின் லும்பாட்சி நகரத்தில் ஆரம்பப் பள்ளி ஆசிரியராகப் பணி புரியும் நெல்லி குமாம்பலா, தனது கணவர், இரண்டு குழந்தைகள் மற்றும் வயதான தாயாருடன் வசித்து வருகிறார். உலகளாவிய உணவு சங்கிலியில் கார்கில் போன்ற நிறுவனங்களுக்கு சொந்தக்காரர்களாக இருப்பவர்களிடமிருந்து மறுமுனையில் நெல்லியும், அவரைப் போன்ற பல லட்சக்கணக்கானவர்களும் அந்நிறுவனப் பொருளின் நுகர்வோராக அதன் மூலம் அந்நிறுவனத்தின் லாபத்திற்கு தனது பணத்தை அளிப்பவர்களாக உள்ளனர். “கடந்த மாதத்தில் விலைவாசி கடுமையாக அதிகரித்துள்ளது. கடந்த மாதம் 2600 க்வாச்சாக்களாக (மலாவி நாட்டின் நாணயம்) இருந்த 2 லிட்டர் சமையல் எண்ணெய்யின் விலை, தற்போது 7500 க்வாச்சாக்களாக அதிகரித்து உள்ளது. சமையல் எண்ணெய் வாங்க நேற்று கடைக்குப் போன நான், கையில் அவ்வளவு பணம் இல்லாததால் அதை வாங்காமலேயே வீடு திரும்பினேன். ‘நாங்கள் எல்லாரும் சாப்பிட வேண்டுமானால் நான் என்ன செய்யவேண்டும்?’ என்று எனக்குள்ளேயே யோசித்துக் கொண்டு, வீட்டிலிருப்பவர்களுக்கு எப்படி உணவளிப்பது என நாள்தோறும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன்” என்கிறார் நெல்லி.
தொடரும் , , , ,
நன்றி
தீக்கதிர் 14.06.2022
No comments:
Post a Comment