“அவன் சாகட்டும், செத்து ஒழியட்டும்”
என்று சொல்லிக் கொண்டே
தரையில் காயங்களுடன் படுத்துக் கிடந்த ஒரு முதியவரின் வயிற்றில் தன்னுடைய காலால் ஓங்கி
மிதித்தார் ஒரு துறவி.
இது
எந்த திரைப்படத்தின் முதல் காட்சியுமல்ல, திரேந்திர கே.ஜா எழுதி தோழர் இ.பா.சிந்தன்
தமிழாக்கம் செய்த “ஆன்மீக அரசியல்” நூலின் தொடக்கமே இப்படித்தான் அமைகிறது.
அயோத்தியின்
பெரிய அரசியல் மையமான துறவிகள் குழுவான நிர்வானி அகாரா குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள அனுமார் கோயிலின் வாசலில் அந்த அகாராவின் துறவி, வாடகை கொடுக்காத பூக்கடை
வைத்திருந்த முதியவரைத்தான் அப்படித்தான் தாக்கினார்கள். அந்த குழு மிகவும் பிரசித்தி
பெற்ற குழுதான். அந்த குழுவைச் சேர்ந்த அபிராம்தாஸ் என்ற துறவிதான் பாபர் மசூதியில்
திருட்டுத்தனமாக ராமர் சிலையை வைத்தவர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
இந்த
நூல் இந்துத்துவ வெறியர்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய
ஒரு நூல். ஆன்மீக அரசியல் என்று பெயரிடப்பட்டுள்ள இந்நூல் சாமியார்களின் நிழல் உலகை
அம்பலப்படுத்துகிற நூல். சாமியார்கள் எப்படி ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் விஸ்வ ஹிந்து பரிஷத்
மூலமாக வளைக்கப்பட்டார் என்பதை சொல்கிற நூல்.
உங்களை
படிக்கத் தூண்டுவதற்காக நூலிலிருந்து சில தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன்.
துறவிகள்
குழுக்கள் அகாராக்கள் என்று அழைக்கப்படுகிறது. சைவத்தை, வைணவத்தை, சீக்கியத்தையும்
கூட பின்பற்றும் அகாராக்கள் உண்டு. அவற்றுக்குள் பிரிவினைகள் உண்டு, அவைகள்தான் கோயில்கள்,
மடங்களை நிர்வகிப்பவை. அகாராக்களின் தலைவர்களாக இருக்கும் மகந்துகள் என்பவர் அதி முக்கியமானவர்கள்.
அகாராக்களை ஒருங்கிணைக்கும் அமைப்பு அகில இந்திய அகாரா பரிஷத். உபி முதல்வர் யோகி கூட
கோரக்பூர் மடத்தின் மகந்து என்பதை நினைவில் கொள்க..
மல்யுத்தம்
கற்றுக் கொள்வதற்காக அகாராக்களில் இணைபவர்கள் உண்டு. முகலாய ஆட்சிக் காலத்திலும் பின்னர்
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அகாராக்கள் கூலிப்படை நடத்தி மன்னர்கள் சார்பாக போர்களுக்குச்
செல்வார்கள். இதிலே அவர்களுக்கு எந்த கொள்கையும் கிடையாது. ஒரு வருடம் ஆதரித்த அரசரை
அடுத்த வருடம் எதிர்த்த கதையும் உண்டு. காரணம் பணம்.
ஒரு
மடத்தின் வாரிசாக வருவது என்பதற்காக கொலையெல்லாம் நடந்துள்ளது. குருவை சீடன் கொல்வதும்,
ஒரு மடத்து விஷயத்தில் தலையிட இன்னொரு மடம் கொலையாட்களை அனுப்புவது ஆகியவையெல்லாம்
சர்வ சாதாரணமாக நடந்துள்ளது என்பதை நூலின் பல பக்கங்கள் சொல்கிறது.
ஒரு
சாமியார் இறந்து போய் விட்டார். அவரை யார் அடக்கம் செய்வது என்று இரண்டு கோஷ்டிகளுக்குள்
கம்பு, கத்தி, வாள் ஆகியவற்றைக் கொண்டு சண்டை நடக்கிறது. இந்த சண்டையில் ஒரு கோஷ்டிக்கு
ஆதரவாக சண்டையிட குதிரையில் வந்த ஒரு சாமியார் தன்னை பாதுகாத்துக் கொள்ள, எதிரணியினரை
தாக்க ஆயுதமில்லாமல் தவித்து புதிய ஆயுதத்தை கண்டறிகிறார். இறந்து போன சாமியாரின் சடலத்தை
கால்களைப் பிடித்து தூக்கி, அதனைக் கொண்டே அனைவரையும் தாக்குகிறார்.
இது
போல ஏராளமான சம்பவங்கள் நடக்கும் இடம்தான் அயோத்தி.
அனைத்து
அகாராக்களுக்கும் முக்கியமான நிகழ்வு கும்ப மேளா, அவர்கள் குளித்த பின்புதான் மற்றவர்கள்
குளிக்க முடியும். எந்த அகாராவில் அதிகமான நிர்வாண சாமியார்கள் உள்ளார்களோ, அவர்கள்தான்
வலிமையானவர்கள் என்று கருதப்படுவார்கள், வருமானமும் அதிகரிக்கும் என்பதால் பிச்சைக்காரர்களையும்
சாமியார்களாக அழைத்து வந்து கணக்கு காண்பிக்கிறார்கள் என்பதை சாமியார்களே வேதனையோடு
பகிர்ந்து கொள்கிறார்கள். நாக சாதுக்களுக்கும் பிச்சைக்காரர்களுக்கும் உள்ள வேறுபாட்டை
அந்த சாமியார்கள் எப்படி கண்டுபிடித்தார்கள் என்பதை நூலை படித்து அறிந்து கொள்ளுங்கள்.
அகாராக்கள்
சில சாமியார்களுக்கு “மகா மண்டலேஸ்வரர்கள்” என்று பட்டம் தரும். அப்படி பட்டம் கிடைத்த
சாமியாருக்கு பக்தர்கள் அதிகமாவார்கள், காணிக்கை பெருகும் என்பதால் பணம் வாங்கிக் கொண்டு
பட்டம் கொடுக்க மகாமண்டலேஸ்வரர்கள் எண்ணிக்கை இப்போது பெருகி விட்டது. ராதா மே என்ற
பெண் சாமியாருக்கு அப்பட்டம் தந்தது சர்ச்சையாகி உள்ளது. ஆனால் அப்படி எந்த சர்ச்சையும்
நித்தியானந்தருக்கு அளிக்கப்பட்ட போது உருவாகவில்லை.
இந்துக்களின்
மிகப் பெரிய மதத்தலைவராக கருதப்படுகிற சங்கராச்சார்யார்களுக்குள் நடக்கிற சர்ச்சை,
அரசியல், பிரச்சினைகள் குறித்து இந்த நூல் விரிவாக அலசுகிறது. ஆதி சங்கரர் உருவாக்கிய
சங்கர மடங்கள் ஜோதிர்மத், துவாரகை, பூரி, சிருங்கேரி ஆகிய நான்கு இடங்களில் உள்ளதாக
சொல்லப்படுகிறது. காஞ்சி மடம் தாங்களும் ஆதி சங்கரரால் உருவாக்கப்பட்ட மடம் என்று சொன்னாலும்
இதனை மற்ற நான்கு மடங்கள் ஏற்பதில்லை. ஜோதிர்மத் மடத்தின் சங்கராச்சார்யாராக முடி சூட்டிக்
கொண்ட அச்சுதானந்த தீர்த்தர் என்பவரை அகாராக்கள் எப்படி துரத்தியது என்பதை நூல் விவரிக்கிறது,
அது மட்டுமல்ல இப்போது கிட்டத்தட்ட 100 சங்கராச்சார்யார்கள் உள்ளார்கள் என்பதையும்
அம்பலப்படுகிறது.
சாமியார்களின்
துணை இருந்தால் அவர்கள் மூலம் பக்தர்களிடம் தங்கள் அரசியலை கொண்டு செல்லலாம் என்று
வி.ஹெச்.பி எடுத்த முயற்சிகள், அதன் ஒரு பகுதியாக முன்னுக்குக் கொண்டு வரப்பட்ட ராமர்
கோயில் பிரச்சினை, ஆரம்ப காலத்து முட்டுக்கட்டைகள், பின்னர் அவர்கள் எப்படி முன்னேறினார்கள்
ஆகியவை விவரமாக எழுதப்பட்டுள்ளது.
பாஜகவின்
மத அரசியலை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் அதன் பின்புலத்தில் உள்ள சாமியார்களின் நிழல்
உலகை புரிந்து கொள்ள வேண்டும். போதைப் பொருள் மாஃபியாவை விட மோசமான அந்த உலகை வெளிச்சம்
போட்டு காண்பித்துள்ளார் நூலாசிரியர் திரேந்திர கே.ஜா. மொழி பெயர்ப்பு என்ற உணர்வு
வராத வண்ணம் எப்போதும் போல மிகச் சிறப்பாக தமிழாக்கம் செய்துள்ளார் தோழர் இ.பா.சிந்தன்.
இப்படி
ஒரு சர்ச்சையான நூலை தைரியமாக வெளியிட்ட பொள்ளாச்சி எதிர் வெளியீட்டிற்கும் வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment