Monday, June 13, 2022

புல்டோசர்கள் நாளை உங்களையும் .

 தோழர் சம்சுதீன் ஹீரா அவர்களின் கவிதையை வலியோடு பகிர்ந்து கொள்கிறேன். அவர் சொல்லியிருப்பது போல . காலம் கண்டிப்பாக மாறும். தாக்குதல்கள் தொடர்ந்தாலும் உங்களுக்கு அஞ்சாமல் நிற்கும் உறுதி இருக்கிறது. பெரும்பான்மை பலம் கொண்டு மிரட்டினாலும் நீ கொடூரம் என்று சொல்லும் நெஞ்சுரம் இன்னமும் உள்ளது. கண்டிப்பாக உன் இறுதி நாளை மக்கள் விரைவில் எழுதுவார்கள், தங்கள் ஆட்காட்டி பெரு விரல் மூலமாகவே. 



கேள்வியே மேலெழும்பாத
பெரும்பான்மை மௌனம்
இடுகாட்டுப் பிணமெரிந்து
எஞ்சிய சாம்பல்..
காணாமல் கடந்துசென்ற
மாந்தர்களின் உள்ளத்தில்
எரிந்த பிணத்தின் அழுகல் வாடை..
உள்ளங்கையில் மயிர் முளைத்த அதிகாரத் திமிரெல்லாம்
கணரக வாகணங்களாய்
வாசலில் நிற்கின்றன..
இப்படித்தான் ஹிட்லரும் நம்பிக்கொண்டிருந்தான்.
தானே இப்பிரபஞ்சத்தின்
இறுதி அதிகாரம் என்றும்
வீழ்த்தவே முடியாத
எஃகுக் கோட்டையென்றும் நம்பிக்கொண்டிருந்தான்.
இப்படித்தான் அன்றைய உலகமும் நம்பிக்கொண்டிருந்தது.
அவனே அனைத்துக்குமான
இறுதித் தீர்ப்பனாக
முறியடிக்கவே முடியாத
மாபெரும் சக்தியாக
உலகம் அஞ்சிக் கொண்டிருந்தது.
ஆனால் ஒருநாள் கதை மாறியது..
ஏ.. பாசிசக்குரங்குகளே..
நீங்கள் வீடுகளை இடிக்கலாம்
ஒருபோதும் அம்மக்களின் ஈமானை இடித்துவிட முடியாது..
இங்கும் ஒரு நாள் கதை மாறும்..
அப்போது புல்டோசர்கள் கரம் மாறும்..
அன்று இடிபாடுகளுக்குள் சிதிலமாய்க் கிடக்கும் உங்கள் பிணங்களின் மீது
வரலாறு காறி உமிழும்..!!

பிகு: போராட்டத்தில் ஈடுபட்டார் என்பதற்காக வீடு இடிக்கப்பட்ட ஜே.என்.யு மாணவி அஃப்ரீன் பாத்திமாவின் ஓவியம் மேலே உள்ளது. வரைந்தது திரைக் கலைஞர் தோழர் பொன்வண்ணன்.

No comments:

Post a Comment