Tuesday, June 7, 2022

விக்ரம் – இருட்டும் ரத்தமும்

 



6.30 மணிக் காட்சிக்கு முன்பதிவு செய்திருந்த நிலையில் 6 மணியிலிருந்தே நல்ல மழை. முன்பதிவு செய்தது வேஸ்டாகிவிடும் என்றுதான் தோன்றியது. 6.25 க்கு மழை நிற்க வேகமாக சென்றாலும் படம் ஆரம்பித்து கமலஹாசன் “வெத்தல, வெத்தல ”(ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தின் “வெத்தல வெத்தல கொழுந்து வெத்தலையோ பாடல் வரிகள் மனதில் பதிந்தது போல பத்தல, பத்தல என்ற வரிகள் மனதில் நிற்கவில்லை) என்று பாடி, ஆடிக் கொண்டிருந்தார்.

 

கைதி போலவே படத்தின் பெரும் பகுதி இருட்டில்தான் நடக்கிறது. அந்த இருட்டிலும் ரத்தம் பீறிட்டு தெறிக்கிறது. பின்னணி இசைக்கு வேலை இல்லாமல் தோட்டாக்களின் சத்தம்தான் பெரும் இரைச்சல். இருட்டு, ரத்தம், தோட்டா, போதை,இதற்குள்ளாகத்தான் படமே.

 

ஆனாலும் போரடிக்காமல் போவதுதான் படத்தை ஓட வைத்துள்ளது. ஃபகத் ஃபாஸில் தன் இயல்பான நடிப்பால் படத்தின் முதல் பாகம் முழுதையும் சுமக்கிறார். இடைவேளையில்தான் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்ட கமலஹாசன் வருகிறார்.

 

கைதியில் போலீஸிடம் பிடிபட்ட 900 கிலோ போதைப் பொருளை வில்லன் விஜய் சேதுபதி மீட்க துடிக்கிறார். அந்த போதை பொருளை கைப்பற்றிய போலீஸான மகன் கொல்லப்பட்டதால் அதற்கு காரணமானவர்களை வரிசையாக கொல்கிறார் கமலஹாசன். கொலைகாரர்களை தேடும் ரகசிய ஏஜெண்ட் ஃபகத் ஃபாஸில் ஆகியோருக்குள் சுழல்கிறது கதை. இதற்குள் செண்டிமெண்டிற்காக இதய நோயுள்ள கமலின் பேரக்குழந்தை.

 

படம் பார்க்கலாமா?

 

கைதியின் தொடர்ச்சியாய் சரியாக இணைத்திருப்பது, அதன் முக்கியப் பாத்திரங்களை இங்கே கொண்டு வந்தது. (எஸ்.பி ஆபிஸில் போலீஸால் அடிபட்டு இருந்த அர்ஜூன் தாஸ் எப்படி கடைசி காட்சியில் வந்தார் என்றுதான் தெரியவில்லை)

 

போலீஸ் – கிரிமினல் கூட்டணியை அம்பலப்படுத்துவது.

 

வேலைக்காரப் பெண்மணி  ஏஜெண்டாக மாறி சண்டை போடுவது, அதுபோலவே குமாரலேலும் சந்தான பாரதியும் கூட ஏஜெண்டுகளாக இருப்பது,

 

குழந்தையின் உயிரைக் காக்க ஃபகத் ஃபாஸில் நடத்தும் போராட்டம்,

 

கடைசி நிமிடத்தில் வந்து ஈர்க்கும் சூர்யா.

 

இவை அனைத்துக்கும் மேலாக வயதுக்கு ஏற்ற பாத்திரத்தில் கலக்கிய கமலஹாசன்,

 

ஆகியவை விக்ரமை பார்க்கலாம் என்று சொல்ல வைக்கிறது.

 

படத்தின் குறைகளாக நான் கருதுவது.

 

போதைப் பொருட்களின் தீமையை உணர்ச்சிமயமாக சொல்லும் படத்தில் படம் முழுக்க யாராவது சரக்கடிப்பது, போதைப் பொருள் எடுத்துக் கொண்ட விஜய் சேதுபதி சக்திமானாக மாறுவதெல்லாம் நெருடல்.

 

பீரங்கி உட்பட அனைத்து ஆயுதங்களும் பிரயோகிக்கப்படுகிறது. விக்ரம் 3 வந்தால் ஏவுகணை, சப்மரின் கொண்டுதான் சண்டை போட வேண்டும்.

 

நம் கையிலேயே ரத்தப் பிசுக்கு ஒட்டியிருப்பது போல ஒரு ஃபீலிங்.

 

தராசில் வைத்துப் பார்த்தால் இன்னொரு விறுவிறுப்பான படத்தை அளிப்பதில் லோகேஷ் கனகராஜ் வெற்றி பெற்றுள்ளார். இசை எனக்கு திருப்தியளிக்கவில்லை.

 

இதிலே ஒரு திருப்தியான விஷயம் என்னவென்றால் எங்கள் பகுதியில் உள்ள ஸ்ரீனிவாசா தியேட்டர் நவீனமயமாக்கப்பட்டதுதான்.

3 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. பதிவுக்கு சம்பந்தமில்லாத பின்னூட்டம் என்பது மட்டுமல்ல பொய்ப்பிரச்சாரத்துக்கு இங்கு இடமில்லை

      Delete
    2. அருமையாக விமர்சனம்

      Delete