Sunday, June 5, 2022

விக்ரம் - என் பார்வையில்

 


புதிய விக்ரம் இன்னும் பார்க்கவில்லை. இன்று 6.30 மணி காட்சிக்கு முன்பதிவு செய்துள்ளேன்.

புதிய விக்ரம் வந்துள்ள சூழலில் பழைய விக்ரமை ஆகா, ஒகோ என பலரும் புகழ்ந்து கொண்டுள்ளார்கள். நிஜமாகவே பழைய விக்ரம் சூப்பர் படமா?

நினைவுகளை ஓட விட்டு எழுதுகிறேன்.

குமுதத்தில் தொடராக வந்து ஆவலை உருவாக்கிய படம். 

அதற்கு சில வருடங்கள் முன்பாக அது போல குமுதத்தில் தொடராக வந்த படம் பாக்யராஜ் எழுதி இயக்கிய "மௌன கீதங்கள்" அந்த சமயம் திருக்காட்டுப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். திருக்காட்டுப்பள்ளி பெரிய அக்கா வீட்டிலிருந்து புதுக்கோட்டை இரண்டாவது அக்கா வீட்டுக்கு தஞ்சாவூர் வழியாக சென்று தஞ்சாவூர் பேருந்து நிலையம் அருகிலிருந்த தியேட்டரில் வீட்டுக்குச் சொல்லாமல் கருப்பில் பார்த்த படம் அது. பிடிக்கவே பிடிக்காத வாத்தியாரும் அந்த காட்சிக்கு வர அவர் கண்ணில் படக்கூடாது என்பதற்காக எல்லோரும் வெளியேறும் வரை காத்திருந்து கடைசியாக வெளியே போனது நினைவுக்கு வந்தது.

விக்ரம் வந்த போது எல்.ஐ.சி பணியில் நெய்வேலியில் சேர்ந்திருந்தேன். அங்கே அப்போதிருந்த அமராவதி தியேட்டரில் எந்த ஒரு புது படமும் ஆறு மாதத்திற்குப் பிறகே வரும்.

விக்ரம் வெளியான சமயம் கும்பகோணத்தில் என் கடைசி அக்காவின் திருமணம் நடந்தது. மண்டபத்தை சுற்றி சுற்றி விக்ரம் பட போஸ்டர்கள்தான். ஆனால் திருமண வேலைகள் காரணமாக திரைப்படம் பார்க்க நேரம் கிடைக்கவில்லை.

ஆகவே அமராவதி தியேட்டரில் வரும் வரை காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை. 

மூன்றே மாதத்தில் வந்து விட்டது. அதுவே அப்படம் பெரிதாக ஓடவில்லை என்பதற்கான சான்று.

கடுமையான தண்டனை அறிவிக்கப்பட்டதைக் கூட காது கொடுத்து கேட்காமல் ஆடுபுலி ஆட்டம் விளையாடும் குற்றவாளிகள், அந்த குற்றவாளிகள் மூன்று மதங்களையும் சார்ந்தவர்களாக காண்பித்தது, அக்னிபுத்திரன் ஏவுகணையை சுகிர்தராஜா எனும் சத்யராஜ் கடத்துவது, அதை கண்டுபிடிக்க விக்ரமை கேட்பது, வில்லன் ஆட்கள் விக்ரமின் மனைவியைக் கொல்வது, உளவுத்துறை அலுவலகத்திலேயே வில்லனின் உளவாளி இருப்பது, அவன் மூலமாக வில்லன் யார் என்பதை அறிவது, பரபரப்பான சேஸிங் காட்சிக்குப் பின் சினிமா தியேட்டர் நியூஸ் ரீல் மூலமாக வில்லன் இருப்பது சலாமியா என்று கண்டறிவது வரை தீயாய், பரபரப்பாய் படம் செல்லும்.

அதன் பிறகு சலாமியாவுக்குப் போன பிறகு படம் படுத்து விடும். ஜனகராஜ் திருநங்கையாக செய்யும் காமெடிகள் எரிச்சலூட்டும். டிம்பிள் கபாடியை எவ்வளவு தூரம் கவர்ச்சியாக காண்பிக்க முடியுமோ, அந்த அளவு காண்பிப்பது, ஷோலே வில் நடுங்க வைத்த அம்ஜத்கானை காமெடியனாகக் காண்பித்த பரிதாபம் என்றெல்லாம் இரண்டாவது பாகம் மிகவுமே சோதித்து விடும்.

அதிலும் கிளைமேக்ஸ் கொடூரம். சத்யராஜ் செல்லும் விமானத்தின் மீது தாவி, அவர் கீழே குதிக்கையில் அவர் மீது பாய்ந்து அவரது பாராசூட்டைப் பறித்து அந்தரத்தில் பறந்த கதாநாயகியையும் சேர்த்துக் கொண்டு கீழே வருவதெல்லாம் மிகப் பெரிய காமெடி. அதிலும் பாவம் அப்போது கிராபிக்ஸ் தொழில் நுட்பம் வேறு சரியாக வராமல் ஒழுங்காக ஒட்டாமல் பிசிறு பிசிறாக இருக்கும். உதாரணம் கீழே உள்ளது.



இரண்டாவது பாதியில் கதையை விட கவர்ச்சிக்கு முன்னுரிமை கொடுத்ததால் சொதப்பலாகிப் போன படம்தான் விக்ரம். 

இளையராஜாவின் இசை, சில வசனங்கள், சத்யராஜ், ராஜஸ்தான் அரண்மனைகளின் அழகு ஆகிய நல்ல அம்சங்கள் இரண்டாவது பகுதியின் சொதப்பலை தாங்க வைத்தது.

பார்ப்போம் புதிய விக்ரம் எப்படி இருக்கிறதென்று . . .

கைதி தந்த நம்பிக்கையில் செல்கிறேன்...

முடிந்தால் நாளை அது பற்றி எழுதுவேன்.

1 comment:

  1. தோழர் விடுபட்ட சில விஷயங்கள்...
    கதை திரைக்கதை வசனம் என்று அந்த காலகட்டத்துக்கு பத்து வருடம் தாண்டி சிந்தித்த எழுத்தாளர் சுஜாதாவின் கைவண்ணம்.
    கமலின் ஒரு கோடி ரூபாய் கனவு என்ற பெயரில் படக்கதையாக ஒரு புத்தகம் வெளியானது.

    ReplyDelete