Wednesday, May 5, 2021

மகிழ்ச்சியும் தயக்கமும்

தோழர் அ.கரீம், மூத்த வழக்கறிஞரும் இளம் எழுத்தாளருமானவர். "தாழிடப்பட்ட கதவுகள்" "சிதார் மரங்களில் இலைகள் பூப்பதில்லை" ஆகிய அவரது மனதை பாதிக்க வைக்கும் சிறுகதை தொகுப்புக்களைப் பற்றி ஏற்க்னவே இத்தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளேன். "அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி" என்ற புதிய தொகுப்பு இருண்ட காலத்தின் உண்மைகளை பேசுகிற ஒரு நூல்.

நாம் நேசிக்கிற ஒரு எழுத்தாளர் நம்முடைய நூலைப் பற்றி எழுதுவது பெருமைதானே! தோழர் அ.கரீம் நேற்று அவருடைய முக நூல் பக்கத்தில் "முற்றுகை" தொடர்பாக எழுதியிருந்ததை பகிர்ந்து கொள்கிறேன்.

அவரது பதிவு மகிழ்ச்சியளித்தது என்பது உண்மை. பகிர்ந்து கொள்ள வேண்டுமா என்ற தயக்கம் இருந்தது. "சரி, ஒரு விளம்பரம்தானே" என்று ஒரு குரல் மனதில் ஒலித்ததால் பகிர்ந்து கொண்டுள்ளேன்.

நன்றி தோழர் கரீம்


 நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் மேற்கு வங்காளத்தில் இடதுசாரி கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. கடந்த 60 ஆண்டு காலத்தில் இடதுசாரிகள் இல்லாமல் மேற்குவங்க சட்டமன்றம் அமைவது இதுவே முதல் முறை. மேற்கு வங்கத்தில் ஏராளமான தாக்குதல்களையும் கொலைகளையும் சந்தித்து தியாகத்தில் பிறந்துதான் ஜோதிபாசு தலைமையிலான இடது முன்னணி அரசு. கிட்டத்தட்ட 28 ஆண்டுகாலம் மேற்கு வங்காளத்தில் இடதுசாரிகள் ஆட்சி இருந்தது. தற்போது அவர்களுடைய பங்களிப்பு இல்லாமல் இருப்பது பேரதிர்ச்சியே.

28 ஆண்டுகாலம் இடது முன்னணி அரசு இருப்பதற்கு கடந்த காலத்தில் அவர்கள் செய்த சுதந்திரப்போராட்டதோடு இணைந்த பல்வேறு மக்கள் நல போராட்டங்கள். அதில் ஒன்றுதான் வேலூர் சுரா எழுதிய இந்திய இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கம் நடத்திய "இலாக்கோ விஜில்" போராட்டம் குறித்த புனைவு வரலாற்று நாவல் " முற்றுகை."

ஏற்கனவே வங்காளத்தில் நடந்த போராட்டங்கள் குறித்த ஒரு புனைவு வரலாற்று நாவலை ரவிச்சந்திரன் அரவிந்தன் தமிழில் மொழிபெயர்த்த "சமரம் " நாவல் மிக முக்கியமானது.( அவசியம் வாசிக்க வேண்டிய நாவல் )
Ravichandran Aravindhan
.

முற்றுகை நாவலை வாசிப்பதன் மூலம் கம்ப்யூட்டர் என்பது இந்தியாவில் அறிமுகமாகாத காலத்தில் அது வந்த போது எப்படியான விளைவுகளை தொழிலாளிகள் மத்தியில் உருவாக்கியதும் என்பதும், ஒரு கம்ப்யூட்டர் 10 ஆயிரம் பேருடைய வேலை இழப்பை உண்டாக்கக்கூடிய மோசமான இயந்திரமாக அறிமுகப்படுத்தப்பட்டது அது என்ன மாதிரியான விளைவுகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்படுத்தியதையும் கண்முன் ஒரு காட்சி படத்தைப் போல இந்த நாவல் விவரிக்கிறது.

1967ல் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாமல் இருந்த போது நேரு அவர்கள் அறிமுகப்படுத்திய சூப்பர் கம்ப்யூட்டர் இருக்கும் வேலையையும் பறிக்கும் ஒரு ஏற்பாடாக கொண்டு வந்து புகுத்தி அதை இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கம் நடத்திய ஒரு வீரம் செறிந்த போராட்டமே இந்த முற்றுகை நாவல்.

இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கம் நடத்திய இந்த போராட்டம் நியாயமானது என்று கல்கத்தாவில் இருக்கக்கூடிய அனைத்து தொழிற்சங்க மாணவர் வாலிபர் மாதர் சங்க அமைப்புகள் அனைத்தும் ஆதரவு தெரிவித்தும் ஒவ்வொரு அமைப்பும் ஒவ்வொரு நாள் அந்தப் போராட்டத்தில் பங்கு எடுப்பதாக உறுதி கொடுத்து பங்கெடுத்து பல மாதங்கள் தொடர்ச்சியாக நீடித்த ஒரு மாபெரும் போராட்டத்தையும் அப்போதைய அரசு மறைமுகமாக பெரும் நிறுவனங்களுக்கு ஆதரவைத் தெரிவித்ததையும் அந்த பின்னால் இருந்த சூதையும் அப்போது இருந்த உண்மையான தொழிற்சங்க தலைவர்களின் பாத்திரம் வழியே பேசுகிறது.

இதனிடையே துர்கா பூஜை வருவதையொட்டி அது அந்த மாநிலத்தின் கலாச்சார திருவிழாவாக இருப்பதினால் குடும்பத்துடன் இருக்கவே எல்லோரும் நினைப்பார்கள். அப்படி ஒருவேளை சென்று விட்டால் உடனடியாக கம்ப்யூட்டரை கொண்டுவந்து நிறுவனம் நிறுவி விடும்.
ஏற்கனவே ஒரு நிறுவனமானது இப்படி தொழிலாளர்கள் தங்களுடைய கோரிக்கைக்காக போராடிக் கொண்டு இருக்கும் போது, பண்டிகையொட்டி ஐந்து நாள் போராட்டத்தை ஒத்தி வைத்ததை வாய்ப்பாக பயன்படுத்தி அந்த நிறுவனம் ஒட்டுமொத்தமாக அலுவலகத்தை காலி செய்துகொண்டு பம்பாய்க்கு சென்றதை அனுபவ பாடமாக தொழிற்சங்கத் தலைவர்கள் உள்வாங்கிக்கொண்டு தொழிலாளர்கள் போராட்டம் நடக்க வேண்டும் அதே போல மக்களின் திருவிழாவும் கொண்டாட வேண்டும் என்ன செய்யலாம் என்று யோசித்த போது ஏன் துர்கா பூஜையை போராட்டப் பந்தலிலேயே கொண்டாடக் கூடாது என்று முடிவு செய்ததினால் அது ஒரு பண்பாட்டு போராட்டமாக மாற்றி, குடும்பத்துடன் பங்கேற்ற போராட்டமாக உருவெடுத்தது அன்றைய தினங்களில் மட்டும் அதிகமான கூட்டம் போராட்டத்தில் கலந்து கொண்டதும் பேசும் பகுதி நாவலில் சுவையாக உள்ளது.

நாங்கள் விஞ்ஞானத்துக்கு எதிரி அல்ல மாறாக விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் தொழிலாளிகளின் வேலைப்பளுவை குறைக்கத் தான் வேண்டுமே ஒழிய ஒட்டுமொத்தமாக வேலை இழப்பை ஏற்படுத்துவதாக இருக்கக்கூடாது என்று தொழிற்சங்கத் தலைவர்கள் பேசுவது முக்கியமான பகுதிகள்.

நவீன காலத்தில் கம்ப்யூட்டருடைய தேவை என்னவாக மாறி இருக்கிறது அதற்கு தகுந்தாற்போல் ஊழியர்கள் இன்சூரன்ஸ் துறையை எந்த அளவுக்கு நாட்டினுடைய வருமானத்தை கொடுக்கும் பெரிய நிறுவனமாக மாற்றினார்கள் என்பதோடு இந்த நாவல் முடிகிறது.

பல போராட்டங்கள் மூலமாகத்தான் மேற்கு வங்காளத்தில் இடதுசாரிகள் ஒரு பலமான அடித்தளத்தை அமைத்தார்கள் அந்த வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்வதற்கு முற்றுகை நாவல் உத்வேகம் அளிக்கும். மிக சிறப்பாக வேலூர் சுரா எழுதி உள்ளார் தோழருக்கு
வாழ்த்துக்கள்

. பாரதி புத்தகலாயம் வெளியிடு.

2 comments:

  1. வாழ்த்துக்கள் தோழர் ❤❤❤

    ReplyDelete
  2. no single communist MLA in WB. The reason may find in singur and nandigram

    ReplyDelete