Thursday, May 20, 2021

தடைகளைத் தகர்த்த மகத்தான வெற்றி

 



இடது முன்னணியையும் ஐக்கிய முன்னணியையும் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை மாறி மாறி ஆட்சிக் கட்டிலில் அமர்த்துவதே கேரள மக்களின் வாடிக்கையாக இருந்தது.

அந்த பழக்கத்திற்கு இம்முறை முடிவுரை எழுதி மீண்டும் இடது முன்னணியை ஆட்சியில் அமர்த்தியுள்ளனர் கேரள மக்கள். மீண்டும் முதல்வராக தோழர் பினராயி விஜயன் இன்று பொறுப்பேற்கிறார்.

இந்த ஐந்தாண்டுகளில் இடது முன்னணி அரசுக்கோ சோதனை மேல் சோதனை.

பெரு மழையும் வெள்ளமும் கேரளாவை நிலை குலைய வைத்தது. மத்தியரசோ சிறு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. அரேபிய நாடுகளில் வாழும் கேரள மக்களிடன் நிதி திரட்டுவதையும் சவுதி அரேபியா வழங்கிய உதவியையும் தடுத்தது. மாறாக காணாமல் போனவர்களை தேட அனுப்பிய ஹெலிகாப்டர்களுக்கு சேவைக் கட்டணத்தை ஈட்டிக்காரன் போல வசூலித்துக் கொண்டது.

சபரிமலையில் உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை வைத்துக் கொண்டு கலவரம் செய்தார்கள் சங்கிகள். அவர்களோடு கை கோர்த்துக் கொண்டார்கள் காங்கிரஸ் கட்சியினர்.

கொரோனா பரவலை தடுக்க அரசு நடவடிக்கைகள் எடுத்த போது அது பரவ வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு காங்கிரஸ் மற்றும் பாஜக முயற்சி செய்தார்கள்.

இறுதியாக தங்கக் கடத்தல் என்று பழி சொன்னார்கள். குற்றவாளிகளுக்கு காவிப் பின்னணி இருந்த போதும் கொஞ்சம் கூட  கூச்சமே இல்லாமல் பொய்ப் பிரச்சாரம் செய்தார்கள்.

ஒரு மக்கள் நல அரசை, முன்னுதாரண அரசை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் பாஜக கை கோர்த்துக் கொண்டு செயல்பட்டாலும் கேரள மக்கள் அவர்களை புறக்கணித்து இடது முன்னணி மீதும் தோழர் பினராயி விஜயன் மீதும் நம்பிக்கை வைத்து மக்கள் நல அரசை மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.

கடந்த முறை வென்றதைக் காட்டிலும் இன்னும் அழுத்தமாக வெற்றி பெற்றுள்ள இடது முன்னணியையும் அந்த வெற்றியை வழி நடத்திய அன்புத் தோழர் பினராயி விஜயன் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அனுபவஸ்தர்களும் புதியவர்களும் இணைந்ததாக அமைச்சரவை இருந்தால் இன்னும் நன்றாக இருக்குமே என்ற ஆதங்கம் இருப்பது வேறு விஷயம்.

தோழர் பினராயி விஜயன் அவர்களை பிரதமர் வேட்பாளராக முன் வைத்து அடுத்த மக்களவைத் தேர்தலை அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று பட்டு சந்தித்தால் மாற்றம் நிச்சயம் நிகழும் என்று உள்மனது சொல்கிறது.

 

அப்படி நடக்க வேண்டும் என்பதே ஒரு தேசத்தை நேசிப்பவனின் விருப்பமும் கூட.

 

 

 

No comments:

Post a Comment