Friday, May 28, 2021

மீண்டதால் வேண்டுகிறேன்.

 


இருபத்தி இரண்டு நாட்களுக்குப் பிறகு நேற்றுதான் அலுவலகம் சென்றேன்.  

ஆம் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி வீட்டிலேயே தனிமைப் படுத்தலில் இருந்தேன்.

 06.05.2021 வியாழன்.  ஐம்பது சதவிகித ஊழியர்கள் மட்டுமே அலுவலகம் வர வேண்டும் என்ற ஊரடங்கு கட்டுப்பாடு அன்றுதான் தொடங்கியது. அன்றைக்கு நான் அலுவலகம் செல்ல வேண்டிய முறை கிடையாது. இருப்பினும் சில மாறுதல்கள் தொடர்பாக தொழிலுறவு மேலாளரிடம் பேச வேண்டியிருந்ததால் கொஞ்சம் நிதானமாக பதினோரு மணி போல அலுவலகத்திற்குச் சென்றேன். கடுமையான வெயில். இரண்டு மணி நேரம் கழித்து வீட்டிற்கு திரும்புகையில் இன்னும் கடுமையான வெயில்.  வீட்டுக்கு வந்தால் சோர்வு கூடவே வந்தது. அன்றும் தொடர்ந்தது. மறு நாளும் தொடர்ந்தது, கூடவே காய்ச்சலும் இணைந்து கொண்டது.

 கடும் வெயிலின் பாதிப்பு என்று சமாதானப்படுத்திக் கொண்டாலும் கோவிட் சோதனை செய்து கொள்வது நல்லதென்று தோன்றியதால் 08.05.2021 சனிக்கிழமை காலை சி.எம்.சி மருத்துவமனைக்குச் சென்று மாதிரி கொடுத்து விட்டு வந்தேன். அன்று மாலை ஆறு மணிக்கு மேல் பத்து நிமிடத்திற்கு ஒரு முறை மருத்துவமனை இணையத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். இரவு ஒன்பது மணிக்கு பரிசோதனை முடிவு “பாஸிட்டிவ்” என்று வந்து விட்டது.

 மறு நாள் காலை மருத்துவமனையிலிருந்து அழைப்பும் வந்து விட்டது. வெப்ப அளவு, ஆக்ஸிஜன் அளவு ஆகியவற்றை சோதனை செய்த பிறகு “அடிப்படைகள் எல்லாம் சரியாகவே உள்ளதால் மருத்துவமனையில் சேர வேண்டிய அவசியம் இல்லை. வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லுங்கள்” என்று சொல்ல மகிழ்ச்சியோடு வீட்டுக்கு வந்து விட்டோம்.

 வீட்டுக்கு வந்த பின்பு வெப்ப அளவு ஒரு நாள் கட்டுக்குள் இருந்தது. மறு நாளில் இருந்து அது மாறிக் கொண்டே இருந்தது.  மருத்துவ மனைக்கு தொலை பேசி செய்து கேட்கையில் மனதை எந்த செய்தியும் பாதிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தினார்கள். அப்படி எது நம்மை பாதித்தது என்று யோசித்து அந்த சுமையை மனதிலிருந்து இறக்கி வைத்த பின்பு  பல தோழர்கள் அனுப்பிய செய்திகள் நம்பிக்கையை அளித்ததால்  கொஞ்சம் முன்னேற்றம் இருந்தது.

 ஆனால் அந்த முன்னேற்றம் ஒரு நாள் மட்டுமே நீடித்தது. தனிமைப் படுத்தலின் போது நேரத்தை கடத்தும் கருவியாக சமூக வலைத்தளம்தான் முதலில் இருந்தது. ஆனால் வாட்ஸப்பிலும் முக நூலிலும் ஓயாமல் வந்து கொண்டிருந்த இறப்புச் செய்திகள் நெஞ்சை கொஞ்சம் ஆட்டம் காண வைத்து விட்டது. எந்த மோசமான சம்பவமாக இருந்தாலும் அதனை ஒரு அனுபவம் என்றே கருதுகிற மன நிலை கொண்டவனாக இருந்தாலும் கூட உள்ளத்தில் அச்சம் எட்டிப்பார்த்தது உண்மை.

 மனம் முழுதும் கவலையை சுமந்த படி வீட்டு வேலைகளோடு என்னையும் பராமரித்துக் கொண்டிருக்கும் என் மனைவிக்கு என் மன உணர்வுகள் தெரியாமல் பார்த்துக் கொள்வது மிகவும் சிரமமான பணியாகவே இருந்தது.

 ஒரு புறம் பாரசிட்டமால் மாத்திரைகளை முழுங்கிக் கொண்டிருக்க இன்னொரு புறம் இசைக்கடலில் விழுந்து விட்டேன். செம்பை வைத்தியநாத பாகவதர். எம்.எல்.வசந்தகுமாரி, பால முரளி கிருஷ்ணா, யேசுதாஸ், மதுரை சோமு என்று கர்னாடக இசையிலும் இளையராஜா இசையில் எஸ்.பி,பி, சித்ரா பாடல்களிலும் என்னை மறந்தேன். கிரேசி மோகனும் கொஞ்சம் கை கொடுத்தார்.  சீரியஸான புத்தகங்கள் படிக்க முடியவில்லை.  ஜெயமோகன் பற்றிய புத்தகத்தை புரட்டிப் பார்த்தேனே தவிர உள்ளே செல்லவில்லை. சுகாவின் “தாயார் சன்னதி” கொஞ்சம் இளைப்பாறலை அளித்தது.

 இவையெல்லாம் உடல் நிலையில் மீண்டும் முன்னேற்றத்தை அளித்தது..  19, மே அன்று வந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் உண்மையிலேயே தெம்பை கொடுத்தது.  பாரசிட்டமால் மாத்திரை சாப்பிடுவதை நிறுத்திய பிறகும் வெப்ப அளவு கட்டுக்குள்ளேயே இருந்தது. 22 ம் தேதி தனிமைப்படுத்தல் முடிந்தது. ஊரடங்கு விதிகளின் படி 33 % ஊழியர்கள்தான் பணிக்கு வர வேண்டும் என்பதால் நேற்றுதான் அலுவலகம் சென்றேன்,

 உடலில் ஒரு சோர்வு இருந்த போதிலும் கூட வழக்கமான பணிகள் செய்வதில் எந்த பாதிப்பும் நேரிடவில்லை.  கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விடுவேன் என்று நம்பிக்கை உள்ளது.

 கொரோனா வைரஸின் தொற்றுக்கு ஆளாகி அதிலிருந்து மீண்டவன் என்ற அடிப்படையில் சில வேண்டுகோள்களை முன் வைக்கிறேன்.

 எந்த ஒரு நோயோ, அல்லது பிரச்சினையோ அதிலிருந்து வெளி வர மன உறுதி என்பது மிகவும் முக்கியம்.

 இரண்டாவது அலையில் உயிரிழப்புக்கள் என்பது அதிகம். தெரிந்தவர்கள், நண்பர்கள், சுற்றத்தினர் என அனைவருமே பலரை இழந்துள்ளோம். அந்த இழப்புக்கள் பற்றிய செய்தியை பொது வெளியில் பகிர்ந்து கொள்ள வேண்டியது அவசியமா என்று முதலில் ஒரு கணம் சிந்தியுங்கள். அப்படி அவசியம் இல்லையெனில் யாருக்கு தெரிய வேண்டுமோ அவர்களுக்கு மட்டும் தெரிவியுங்களேன். பொது வெளியில் பகிர்ந்து கொள்ள வேண்டியது அவசியம் என்றால் கொரோனா பாதிப்பு என்பதையாவது சொல்லாமல் தவிருங்கள்.

 நான் ஏற்கனவே சொன்னது போல மன உறுதி கொண்ட என்னைப் போன்றவர்களையே இச்செய்திகள் அசைத்து விட்டது என்றால் கொரோனா தொற்று வந்து விட்டதே என்று மனதளவில் நொறுங்கிப் போனவர்கள் நிலை என்ன ஆகும்? நாம் பகிர்ந்து கொள்ளும் செய்தியால் அடுத்தவர் உடல் நலன், மன நலன் பாதிக்கப்படும் என்பதை நாம் அறியாமலேயே கூட இருக்கலாம். பாதிக்கப்பட்டவன் கூறுகிறேன். கொஞ்சம் நிதானமாக செய்திகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

 இரண்டாவதாக சொல்ல விரும்புவது

 அவசியம் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். அதைத் தவிர வேறு சிறந்த வழி ஏதும் இருப்பதாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை.  முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் எனக்கான பாதிப்புக்கள் குறைவு என்பதே மருத்துவரின் கருத்தாக இருந்தது. அதனால் அழுத்தமாக சொல்கிறேன்

 அவசியம் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்.

14 comments:

  1. முழுமையாக நலம் பெற்றிட வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  2. நீங்கள் நீடூழி வாழ வாழ்த்துக்கள் தோழரே.

    ReplyDelete
    Replies
    1. Now only I knew your health issues comrade. Anyhow,have you recovered fully? As you said, let us have positive thinking.
      My best wishes for your good health. Though I am late, many more happy returns comrade.

      Delete
  3. தாங்கள் நலம் பெற்றது அறிந்து மகிழ்ந்தேன் நண்பரே

    ReplyDelete
  4. You are correct.. அதிகமான குழுக்களில் இறப்புகளும் அதை தொடர்ந்து RIP களும் மனதை ஏதோ செய்கின்றன.. தங்கள் நலம்.. என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. Good to know that you recovered from covid 19.

    ReplyDelete
  6. மிக சரி. எல்லா இறயுகளையும் எல்லாருக்கும் தெரியப்படுத்தாமல் இருப்பது இந்த நேரத்தி நல்லது.

    ReplyDelete
  7. Com Raman takecare..we are with u..Your Experience will useful for all..
    take care comrade..Vazhuttukkal comrade.

    ReplyDelete
  8. Thank you very much for sharing your experiences comrade. Happy to know that you have recovered comrade. Take care.

    ReplyDelete
  9. பூரண நலமடைய மனமார்ந்த ஆசிர்வாதங்கள்

    ReplyDelete
  10. தோழர் முழுமையான நலத்துடன் சங்கப்பணியாற்ற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. உங்கள் பதிவு பலருக்கும் பயனுள்ளது.உங்கள் எதிர்ப்பு சக்தியைப் பயன்படுத்துங்கள். தவறான பழக்கங்கள் ஏதாவது இருந்தால் உடனே கைவிடுங்கள். இயக்க வேலைகளில் இருப்போர்-நீங்கள் உள்பட - நாட்டிற்குத் தேவை.உடல் நலனுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
    தோழர் ராதாவும் மகனும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். நாங்கள் நலம். நான் கோவேக்ஸின் இரண்டு ' டோஸும்' போட்டுக் கொண்டேன். உங்கள் அனைவருக்கும் இதயபூர்வமான வாழ்த்துகள்!

    ReplyDelete
  12. எஸ். ஜோதி COTEE ஸஹீஹ் திருப்பத்தூர்May 29, 2021 at 4:06 PM

    பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய தங்களின் பொறுப்புணர்வு க்கு நன்றி. தோழர் முழுமையாக குணமடைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete