Monday, May 3, 2021

செவ்வணக்கம் தோழர்களே!

 


நேற்றைய இரவு பி.எஸ்.என்/எல் ஓய்வூதியர் சங்கத்தின் வேலூர் மாவட்டச் செயலாளர் தோழர் ஜோதி சுதந்திர நாதன் அவர்களின் மறைவுச் செய்தியோடு முடிந்தது என்றால் இன்றைய காலை கோவில்பட்டி தோழர் பால்வண்ணம் அவர்களின் மறைவுச் செய்தியோடு தொடங்கியுள்ளது.

தோழர் ஜோதி பி.எஸ்.என்.எல் ஓய்வூதியர் சங்கத்தை உயிர்த்துடிப்போடு நடத்திச் சென்றவர். பல முக்கிய நிகழ்வுகளிலும் பி.எஸ்.என்.எல் ஓய்வூதியர் சங்கத்தின் கூட்டம் கண்டிப்பாக இருக்கும். மார்க்சிஸ்ட் வாசகர் வட்டத்தை திறம்பட வேலூரில் நடத்தியவர். கொரோனா காலம் வரை தவறாமல் ஒவ்வொரு மாதமும் வாசகர் வட்டக் கூட்டம் நடந்துள்ளது. பல தோழர்களை மார்க்சிஸ்ட் இதழை வாசிக்க வைத்தவர். 

நகரத் தொழிற்சங்கக் கூட்டமைப்பை விட ஓய்வூதியர் கூட்டமைப்பு வேகமாக இருக்கிறது என்று வேலூர் நகரத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் அமைப்பாளர் தோழர் சி.ஞானசேகரனிடம் அடிக்கடி சொல்வேன். அதற்கு முக்கியமான காரணம் தோழர் ஜோதி சுதந்திரநாதன்.

இந்த வருடமும் பி.எஸ்.என்.எல் ஓய்வூதியர் சங்கம் சர்வதேச மகளிர் தினத்தன்று ஒரு சிறப்பான கூட்டத்தை நடத்தியது. அக்கூட்டத்தில் எங்கள் கோட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் தோழர் ஆர்.அமுதா சிறப்புரை ஆற்றியதால் நானும் அக்கூட்டத்திற்கு சென்றிருந்தேன். அன்றுதன் அவரை கடைசியாக பார்த்தது. எல்.ஐ.சி பங்கு விற்பனைக்கு எதிராக 18 மார்ச் 2021 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் நடந்தபோது தொலைபேசியில் அழைத்து வாழ்த்து சொன்னார்.

டெலிபோன் பவன் முன்புள்ள சங்க தகவல் பலகையில் அவர் கைப்பட கேலிச்சித்திரங்களை வரைந்து விழிப்புணர்வூட்டுவார். இனி அவை வெறுமையாகி விடும்.

தமுஎகச மதிப்புறு தலைவர் தோழர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் "ஜிந்தாபாத், ஜிந்தாபாத்" நூலின் மூலமே தோழர் பால்வண்ணம் அறிமுகமானார். கோவில்பட்டி நகரில் இடதுசாரி சிந்தனைகளை விதைக்க அவர் மேற்கொண்ட முயற்சிகளைப் படிக்க மிகவும் பிரமிப்பாக இருந்தது. ஸ்டேட் வங்கி ஊழியர் என்ற எல்லையைக் கடந்து சிறகடித்து மார்க்சிய வானில் பறந்தவர். தோழர் உதயசங்கருடைய நூல் என்றுதான் நினைவு. "புரட்சி வருகையில் கோவில்பட்டியில் யார் தலைமை வாங்குவார் என்றொரு விவாதத்தில் ஒருமனதாக உடனடியாக வந்த பெயர் தோழர் பால்வண்ணம்" என்று எழுதியிருப்பார்.

சென்னை புத்தக விழாவில் பாரதி புத்தகாலய அரங்கில் பில் போட்டுக் கொண்டிருந்த போது சுய அறிமுகம் செய்து கொண்டு பேசினேன். இந்த வருடம்தான் அவரை அங்கே பார்க்க இயலவில்லை. 


No comments:

Post a Comment