*வெறும் செய்திகள் அல்ல...*
*மூலதனத்தின் குரூரம்...*
_*//க.சுவாமிநாதன்//*_
நன்றி : தீக்கதிர் 24.05.2021
*******************************************
*//கொரோனா உரு மாற்றம் பெறுவது போல ஒரு புதிய புதிய வகையிலான லாப வேட்டைகளும் உருப் பெறுகின்றன பாருங்கள்!//*
*//பொது மருத்துவத்தை கை கழுவி உலகமயப் பாதையில் நடை போட்டதன் விளைவை இப்போதாவது நாடு உணருமா?//*
*******************************************
கோவிட் "பாசிட்டிவ்" என்பது பயம் மட்டுமல்ல, "பணம்" சம்பந்தப்பட்டதாகவும் இருப்பதால் தனியார் பரிசோதனைக் கூடங்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை இழுப்பதற்கு ஃபால்ஸ் ரிப்போர்ட்களை (False Reports) தந்துள்ளன என்கிற செய்திகள் அதிர்ச்சியைத் தந்துள்ளன.
*கள்ளக்குறிச்சி கணக்கு*
"மெடால்" பரிசோதனைக் கூடத்திற்கு கோவிட் சோதனைக்காக தரப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் இருந்து பெறப்பட்ட 4000 மாதிரிகள் கள்ளக் குறிச்சி கணக்கில் காட்டப்பட்டுள்ளன என்பது ஒரு காரணம். அந்த சோதனை முடிவுகள் நெகட்டிவ் ஆக இருந்தும் பாசிட்டிவ் என ஐ.சி.எம்.ஆர் இணைய தளத்தில் "மெடால்" நிறுவனத்தால் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழக பொது சுகாதார சட்டம் 1939 ன் கீழ் நோட்டிஸ் விடுக்கப்பட்டுள்ளது. பாசிட்டிவ் என பதியப்பட்டுள்ள பல மாதிரிகள் குறித்த விவரங்கள் முழுமையாக இல்லை. பொது சுகாதார இயக்குனர் கூற்றுப்படி "அலட்சிய தவறு" (negligence) மட்டும் அல்ல. "லாப நோக்கு" (Vested Interest) என்றும் அவர் சொல்லியிருக்கிறார் என்பதே அதிர்ச்சியை தருகிறது. தனியார் மருத்துவ மனைகளுக்கு ஆள் பிடித்து தந்தார்களா? என்ற கேள்வி எழுநதுள்ளது.
அரசு இந்த கணக்குகளை வைத்துதான் "வளங்களை ஒதுக்கீடு"(Resource Allocation) செய்கிறது என்பதால் இது ஏதோ "எழுத்தர் தவறு" (Clerical mistake) என்று கடந்து செல்லவும் முடியாது. அரசின் கோவிட் எதிர் வினைத் திட்டங்களையே அது பாதிக்கும். இப்படி தவறாகப் பதிவேற்றம் செய்வது "மக்கள் மனதில் ஏற்படுத்தியுள்ள குழப்பம், அச்சம், பதட்டம், மன அழுத்தம் மிக மிக அதிகம்" எனவும் பொது சுகாதார இயக்குனர் தெரிவித்துள்ளார். (இந்து ஆங்கில நாளிதழ் - 22.05.2021).
"மெடால்" மன்னிப்பு கேட்டுள்ளது. "பதிவேற்ற தவறுதான் என விளக்கம் தந்துள்ளது. விசாரணை முடிவுகள் வரட்டும்.
ஆனால் தனியார் மருத்துவ சேவைகள் இப்படி செய்யும் "தவறுகள்" நிறைய வெளிச்சத்திற்கு வந்துள்ளன. அங்குள்ள ஊழியர்களை, சம்பள டாக்டர்களை குறை கூறவில்லை. அவர்களில் பலர் அற்புதமான சேவை புரிகிறார்கள். உயிரைப் பணயம் வைத்து அங்குள்ள செவிலியர், சுகாதாரப் பணியாளர்கள் செயல்படுகிறார்கள். ஆனால் தனியார் மருத்துவ "சேவை" நிறுவனங்களின் உடமையாளர்கள் பேரிடர் காலத்தை லாப வேட்டைக்கு பயன்படுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் எழுகின்றன. விலக்காக சிறு மருத்துவ மனைகள் இருக்கின்றன. ஆனால் மருத்துவத் துறையில் நிகழ்ந்துள்ள கார்ப்பரேட் மயம் மனிதத்திற்கு பெரும் சவாலாக மாறி உள்ளது.
இத்தகைய புகார்கள் மார்ச் 2020 லிருந்தே இருக்கின்றன. எகானமிக் டைம்ஸ் (மார்ச் 30, 2020) தலைப்பு ஒன்று "தனியார் பரிசோதனைக் கூடங்களில் தரப்படும் பொய்யான "ஃபால்ஸ் பாசிடிவ்" முடிவுகளால் அரசு மருத்துவ மனைகள் இரண்டு முறை சோதிக்க வேண்டிய சுமைக்கு ஆளாக்கப்படுகின்றன" என்பதே.
*600 மாதிரிகள்... ஒரு நம்பர்*
இதோ இந்து ஆங்கில நாளிதழின் இணையம் (27.04.2021) செய்திகள் இரண்டு.
ஒன்று, 20 தனியார் பரிசோதனைக் கூடங்களுக்கு பெங்களுரில் நோட்டிஸ் அனுப்பப்பட்ட செய்தி. ஒரு பரிசோதனைக் கூடத்தில் 600 ஆர்.டி.சி.பி.ஆர் மாதிரிகளுக்கு ஒரே தொலை பேசி எண் தொடர்பு எண்ணாக பதிவு செய்யப்பட்டிருந்தது. ஐ.சி.எம்.ஆர் இணைய தளத்தில் பதிவு செய்யாமலேயே கோவிட் பாசிட்டிவ் என்ற தகவல் இன்னொரு பரிசோதனைக் கூடத்தால் நோயாளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனால் அரசு நிர்வாகத்தால் நோய்த் தொற்று உள்ளவர்களை அடையாளம் காண்பது, தொடர்பில் இருந்தவர்களை அறிவது, தனிமைப்படுத்துவது என்பதெல்லாம் இயலாததாகவும் ஆகிப் போனது. கர்நாடகா ரூ 500 என்பதை உச்ச கட்டண வரையறையாக விதித்திருந்தும் ஒரு சோதனைக்கு ரூ 1000 வரை வசூலித்தனர்.
இன்னொரு செய்தி தனியார் மருத்துவ மனைகள் பற்றியது.
பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட இரண்டு பெரிய கார்ப்பரேட் மருத்துவ மனைகளின் உயர் நிர்வாகப் பொறுப்புகளில் உள்ளவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. கோவிட் தகவல்களை தவறாகப் பயன்படுத்தினார்கள் என்று குற்றச்சாட்டு.
"மருத்துவ மனை படுக்கை ஒதுக்கீடு மோசடி" ஒரு மருத்துவ மனையில் வெளியே வந்தது. படுக்கைகள் இருக்கும் போதே இல்லையென பதிவேற்றம் செய்திருந்தார்கள். இன்னொரு மருத்துவ மனை மீது "கவனக் குறைவால் மரணம்" என்ற பேரிடர் நிர்வாகச் சட்டப் பிரிவின் (304 A) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. படுக்கை இல்லை என்று பொய் சொல்லி அனுமதி மறுத்ததால் மூன்று நான்கு மணி நேரத்தில் நோயாளி மரணம் அடைந்ததார் அதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
*உயிரா லாபமா?*
நோயாளிகளுக்கு சிகிச்சை தர மறுப்பது, மிகவும் மோசமான உடல் நிலையோடு வருகிறவர்களை மனிதாபிமானம் கிஞ்சித்தும் இன்றி அரசு மருத்துவ மனைகளை நோக்கி விரட்டுவதும் இன்னொரு முக்கியப் பிரச்சினை. ஆகஸ்ட் 21, 2020 இந்து ஆங்கில இதழ் செய்தி இது. அன்றைய மாநில சுகாதார அமைச்சர் விஜய் பாஸ்கர் வெளிப்படையாகவே விமர்சித்த பிரச்சினை இது. "ஆக்சிஜன் 40% - 60% அளவு மட்டுமே இருப்பவர்கள், நுரையீரல் பாதிப்பு 70% - 90% வரை பாதிப்பு உள்ளவர்கள் தனியார் மருத்துவ மனைகளால் கடைசி நிமிடத்தில் அரசு மருத்துவ மனைகளை நோக்கித் தள்ளப்படுகிறார்கள். ஒரு சிலர் அப்படியும் இங்கு வந்து பிழைக்கிறார்கள். மற்றவர்கள் இங்கு வந்து இரண்டு, மூன்று மணி நேரங்களில் இறந்து விடுகிறார்கள். அவர்களில் பலர் 50 - 60 வயதுக்கு உட்பட்டவர்கள்... அனுமதித்து விட்டு சிக்கலானவுடன் மாற்றுவது இன்னும் நோயாளிகளை பலவீனம் ஆக்குகிறது". இது ஒரு மூத்த அரசு மருத்துவமனை டாக்டர், இந்து நாளிதழில் பகிர்ந்து கொண்ட தகவல். ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அப்போது அங்கேயே முதலில் இருந்து சிகிச்சை பெற்று மரணம் அடைந்தவர்கள் ஓரிருவர் மட்டுமே. மற்ற மரணங்கள் அனைத்தும் இப்படி தனியார் மருத்துவ மனைகளில் இருந்து துரத்தப்பட்டவர்களின் கணக்கே. திருச்சி, மதுரை, கோயம்புத்தூரிலும் இப்படி துரத்தல்கள் இருந்தன. சிலர் பிணங்களாகவே வந்து சேர்ந்தனர். எவ்வளவு குரூரம்!
அடுத்தது Cash for Cure Scam. கட்டண கொள்ளை அரங்கேறியது.
தமிழகத்தில் அக்டோபர் 2020 ல் 9 தனியார் மருத்துவ மனைகளுக்கு கோவிட் 19 சிகிச்சைக்காக தரப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டது. 18 தனியார் மருத்துவ மனைகள் அதீத கட்டணம் வசூலித்ததாக நடவடிக்கைக்கு ஆளாயினர். எல்லாம் சென்னையின் "பெருமைமிக்க" பெரிய மருத்துவ மனைகள். தாம்பரத்தில் ஒரு நோயாளியை பணம் செலுத்தவில்லை என்ற காரணத்திற்காக நள்ளிரவில் வெளியேற்றிய ஒரு மருத்துவனையின் உரிமம் ரத்து செய்யப்பட்டு பின்னர் மன்னிப்பு கேட்ட அடிப்படையில் திரும்பவும் உரிமம் வழங்கப்பட்டது. (நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - 15.10.2020).
டைம்ஸ் நவ் நியூஸ் இணைய தளம் "தடுப்பூசி மோசடி" என்ற தலைப்பில் மகாராஷ்டிரா அமராவதியில் உள்ள மருத்துவமனை ஒன்று முன் கள சுகாதாரப் பணியாளர் என்ற போர்வையில் எப்படி வெளியார்களுக்கு தடுப்பூசி போட்டது என்பதை விவரிக்கிறது.
*காப்பீட்டிலும் களவா?*
லைவ் மின்ட் இணைய இதழ் (05.09.2020) பிரதம மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் அமலாக்கத்தில் தனியார் மருத்துவ மனைகள் செய்கிற முறைகேடுகள் பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளது. TPA என்று அழைக்கப்படும் மூன்றாம் தரப்பு நிர்வாக நிறுவனங்கள் தங்களால் தனியார் மருத்துவமனைகளில் தணிக்கை செய்ய முடியவில்லை. போனால் கோவிட் வார்டுகளில் அனுமதிக்கப்படுவதில்லை என்று தெரிவிக்கின்றன. பரிசோதனைக் கூடங்கள் இணைந்த மருத்துவ மனைகள் அவர்களாகவே "பாசிட்டிவ் கேஸ்" களை உருவாக்கிக் கொண்டு அனுமதியும் செய்யப்பட்டதாக ஆவணங்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் வாய்ப்பு உள்ளது என்று ஒரு TPA நிறுவனம் பகிர்ந்ததையும் வெளியிட்டுள்ளது.
நோயாளி இல்லாமலே பண வசூல் பிரதமர் திட்டத்தின் கீழ் நடைபெறுகிறது என பேமிலி ஹெல்த் பிளான் இன்சூரன்ஸ் TPA நிறுவன சி. இ. ஓ திரு பாரதி கூறுகிறார். நோயாளிகளை அனுமதிக்காமல் அவர்களின் ஹெல்த் இன்சூரன்ஸ் கார்டுகளை மட்டும் வைத்துக் கொண்டு இந்த விளையாட்டை ஆடுகிறார்கள். அவர்கள் பதிவேற்றம் செய்யும் புகைப் படங்களில் அடையாளம் தெரியாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.
டைம்ஸ் ஆப் இந்தியா (23.04.2021) மெடிக்ளைம் பாலிசிகளை வைத்திருப்பவர்களுக்கு எப்படி கூடுதல் கட்டணத்தை தனியார் மருத்துவ மனைகள் சுமத்துகின்றன என்பதை இன்சூரன்ஸ் நிறுவனங்களின் குமுறலாகவே வெளியிட்டுள்ளது. சி.டி ஸ்கேன் எடுக்கும் விகிதம் வளர்ந்த நாடுகளை விட இந்தியாவில்தான் அதிகம் உள்ளது. பகிரப்படும் அறைகளுக்கும் (Shared rooms) தனி அறைக் கட்டணம் (Single Occupancy rate) விதிக்கப்படுகிறது. மிக உச்ச பட்ச வீரியம் உள்ள ஆன்டி பயாடிக் மருந்துகளை தேவையின்றி தருகிறார்கள் என்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
14 மாத செய்திகளின் தொகுப்புதான் இது. தனியார் மருத்துவ சேவைகள் பற்றிய அதிர வைக்கும் நிகழ்ச்சிகள்.
*அரசின் கைகளுக்கு...*
உலகம் முழுவதும் லகான் போட முடியாததால் தனியார் மருத்துவமனைகளை அரசே தற்காலிகமாக எடுத்துக் கொண்டுள்ளன. சில ஐரோப்பிய நாடுகள் மற்றும் எகிப்து ஆகியன உதாரணங்கள். இந்தியாவில் கூட முதல் அலையின் போது மூன்று மாநில அரசுகள் - மத்தியப் பிரதேசம், சட்டிஷ்கர், இராஜஸ்தான் - ஆகியன தனியார் மருத்துவமனைகளை அரசு எடுத்துக் கொள்வதாக அறிவித்தன. ஆந்திரா, புதுச்சேரி, மும்பை ஆகியனவும் இதே முடிவைப் பின்னர் அறிவித்தன. தனியார்கள் நெருக்கடியில் கை கொடுக்க மாட்டார்கள் என்பதை பேரழிவில் பாடம் கற்றுக் கொண்ட பகுதிகள் இவை.
*கொரோனா உரு மாற்றம் பெறுவது போல ஒரு புதிய புதிய வகையிலான லாப வேட்டைகளும் உருப் பெறுகின்றன பாருங்கள்!*
*பொது மருத்துவத்தை கை கழுவி உலகமயப் பாதையில் நடை போட்டதன் விளைவை இப்போதாவது நாடு உணருமா? அரசு தலையீடு, திட்டமிடல் எந்த அளவிற்கு மக்களை பாதுகாக்கும் என்ற பாடத்தைப் பெறுமா? தனியார் என்றால் திறமை, தரம் மிக்க சேவை என்ற பிரமைகளில் இருந்து விடுபடுமா? தனியார்கள் சோகத்தில், துயரத்தில்... மரணத்தில் கூட லாபம் பார்ப்பார்கள், அதுவே மூலதனத்தின் குணம் என்ற புரிதலைப் பெறுமா?*
No comments:
Post a Comment